Friday, November 12, 2010

வாட்டர் பாட்டில் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

நம்மில் பெரும்பாலனோர் மினரல் வாட்டர் பாட்டில்களை மறு உபயோகம் செய்வதால் ஏற்படும் ஆபத்தினை அறியாமல் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். வீட்டிலும், பணியிடத்திலும், பிரபல நிறுவனங்களின் (எ.கா. அக்வபினா, பிஸ்லெரி,கின்லே, நெஸ்லே) மினரல் வாட்டர் பாட்டில்களை மறு உபயோகம் செய்து வருகிறோம். இது கண்டிப்பாக உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

இது போன்ற மினரல் வாட்டர் பாட்டில்கள், பாலீதீன் டேரிப்திலட் என்ற பொருளை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது. இதில் ஹைட்ராகிளைமின் உள்ளது. இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒருமுறை உபயோகிக்க மட்டும் பாதுகாப்பானது. அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே அதிக சூடு இல்லாத இடத்தில் வைத்து உபயோகிக்கலாம். அதற்க்கு மேல் மீண்டும் மீண்டும் பாட்டில்களைக் கழுவி உபயோகிப்பதால் இதிலுள்ள பிளாஸ்டிக் கரைந்து கார்சினொஜென்ஸ் (புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் துகள்கள்). குடிக்கும் நீரில் கலக்க ஆரம்பித்து விடும். எனவே மறு உபயோக தகுதியுள்ள வாட்டர் பாட்டில்களை மட்டும் உபயோகிக்க வேண்டும்.

மறு உபயோகத்திற்கான பாட்டில்கள் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? பாட்டில்களின் அடிப்பகுதியில் முக்கோண சின்னமும், அதில் ஒரு எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த எண் ஐந்து மற்றும் அதற்க்கு மேல் இருந்தால் அந்த பாட்டில் மீண்டும் மீண்டும் உபயோகிக்க தகுதியானது. ஐந்திற்கு கீழே இருந்தால் அதை மறு உபயோகம் செய்யக்கூடாது. எல்லா மினரல் வாட்டர் பாட்டில்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும் நம்பர் ஒன்று. எனவே அது மறு உபயோகத்திற்கு சிறிதும் தகுதியற்றது. (இவை வெளியிடும் வேதியியல் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கும் குணம் படைத்தவை ).

எனவே நம்பர் ஐந்தோ அதற்கு மேலோ பொறித்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வாங்கி உபயோகிப்போம், ஆரோக்கியம் காப்போம்.

Wednesday, November 10, 2010

கேஸ் சிலிண்டருக்கும் உண்டு காலாவதி தேதி

எல் .பி. ஜி. கேஸ் சிலிண்டருக்கும்காலாவதி தேதி உண்டு, காலாவதியான சிலிண்டரை உபயோகிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
காலாவதியான சிலிண்டரை உபயோகிக்கும்போது அதில் வாயு கசிவுஏற்ப்பட்டு ஆபத்து ஏற்படலாம்.

சரி, காலாவதியான எல்.பி.ஜி.கேஸ் சிலிண்டரை எப்படி கண்டு பிடிக்கலாம்? சிலிண்டரை பிடித்து தூக்கும் இடத்தில் மூன்று செங்குத்தான பட்டிகள் இருக்கும். அதில் ஒன்றில் A, B, C, அல்லது D, என்ற ஆங்கில எழுத்தும் அதனுடன் இரண்டு எண்களும் குறிக்கபபட்டிருக்கும் (எ .கா D06 ).ஆங்கில எழுத்துக்கள் காலாண்டை குறிக்கிறது. மேலும் எந்த காலாண்டு வரை உபயோகிக்கலாம் என்பதையும் குறிக்கிறது.
A என்றால் மார்ச் (முதல் காலாண்டு).
B என்றால் ஜூன் (இரண்டாம் காலாண்டு ).
C என்றால் செப்டம்பர் (மூன்றாம்காலாண்டு).
D என்றால் டிசம்பர் (நான்காம் காலாண்டு )
பொறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அது எந்த ஆண்டுவரை உபயோகிக்க தகுதியனானது என்பதை குறிக்கிறது. D06 என்றால் டிசம்பர் 2006 வரை உபயோகிக்கலாம்.

இன்னோர் எடுத்துக்காட்டு. C12 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் அது செப்டம்பர் 2012 வரை உபயோகிக்க தகுதியானது.

Tuesday, November 9, 2010

தமிழ் வலை தளங்கள்- தொகுப்பு

அடித்தட்டு மக்களிடம் அந்நியப்பட்டிருந்த காலமெல்லாம் மலையேறி, தற்போது பாமர மக்களும் வலை தளங்களை பயன்படுத்தும் நிலை வந்து விட்டது. தற்போது வெளிவரும் அலைப்பேசிகளில் தமிழ் தளங்களையும் பார்க்க முடிவதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகி வருகிறது. உங்கள் அலைப்பேசியில் தமிழ் தளங்களைப் பார்க்க முடியவில்லையெனில் அதை எப்படி செயல்படுத்துவது என தெரிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்

தமிழிலுள்ள சில முக்கிய வலை தளங்களின் சுட்டிகளைத் தொகுத்துள்ளேன்.

முக்கிய நாளிதழ்கள்
தினகரன்
தினமலர்
தினமணி
மாலைமலர்
தினபூமி
வீரகேசரி(இலங்கை)
யாழ்(இலங்கை)

செய்திகள்
கூகிள்
பிபிசி தமிழ்
தமிழ் சிபி
வெப்துனியா
யாஹூ
தட்ஸ் தமிழ்

முக்கிய இதழ்கள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
கல்கி
தமிழன் எக்ஸ்பிரஸ்
பாக்யா

தகவல் களஞ்சியங்கள்
விக்கிபீடியா
களஞ்சியம்
அருவம்
சாந்தன்

தமிழ் அகராதிகள்
விக்சனரி
tamilpadi.com/

வரலாறு
varalaaru.com

சட்டம்
மக்கள் சட்டம்

உணவு சமையல்
அறுசுவை

இணைய இதழ்கள்
வார்ப்பு(கவிதை இதழ்)
திண்ணை
கீற்று
பதிவுகள்
பூங்கா
தமிழ்வாணன்
கூடல்
நிலாச்சாரல்

திரட்டிகள்
தமிழ்மணம்
திரட்டி
தமிழ்வெளி
இன்ட்லி
யுடான்ஸ்
மருத்துவம்
தமிழ் மருத்துவம்
அரசியல்
சவுக்கு

Wednesday, November 3, 2010

உங்கள் கைப்பேசியில் தமிழில் இணைய தளங்களை வாசிக்கலாம்!

கைப்பேசியின் பயன்பாடு நாளுக்கு நாள் விரிந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக GPRS வசதியால் கணினியின் பயன்பாடு குறைந்து விட்டது எனலாம். இணைய தளங்களை கைப்பேசியிலே பார்க்க முடிகிறது. தற்போது தமிழகத்தில் விற்கப்படும் முக்கிய நிறுவனங்களில் தமிழ் Font இருப்பதால் தமிழ் இணைய தளங்களையும் பார்க்க முடிகிறது. என்றாலும் சில பழைய மாடல்களிலோ அல்லது வெளிநாடுகளில் வாங்கும் கைப்பேசிகளிலோ தமிழில் பார்க்கும் வசதி இருப்பதில்லை. அதற்காக நீங்கள் இனி கவலைப்பட தேவையில்லை. உங்கள் கைப்பேசிகளிலும் தமிழ் தளங்களைப் பார்க்க முடியும்! எப்படி? இதோ அதற்கான வழிமுறை

முதலில் உங்கள் கைப்பேசியில் opera mini என்ற இணைய உலாவி உள்ளதா என்று பாருங்கள். இல்லையென்றால் இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு,

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை தட்டச்சு செய்து OK கொடுக்கவும். (www என்று தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. கீழே படத்தில் உள்ளது போல வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும்.

இப்பொழுது ஏதேனும் தமிழ் தளத்தினை பார்க்கவும். தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.
பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts  என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் போதும். இனி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தமிழ் தளங்களை பார்க்க இயலும்.

Thursday, October 28, 2010

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? கவலை வேண்டாம்.

இந்த பிரச்சனையைப் போக்க இணைய தளம் மூலமாக உங்களின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரைத் தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.

www.elections.tn.gov.in/eroll/ என்ற முகவரிக்குச் சென்றால் தமிழிலேயே தகவல்கள் பெறலாம்.

Sunday, July 25, 2010

முகமூடிகள்

உனக்கு
மேடை கட்டுவதாக சொல்பவன் உண்மையில் பாடை கட்டிக் கொண்டிருக்கலாம்

எதிரிகள் எங்கும்
இருக்கலாம்
எச்சரிக்கை..

புகழ் பாடுபவனைக் கவனி
பின்னால்
புறம் பேசக்கூடும்

உன் படகில்
துடுப்புகளைத் தொடும் முன் துளைகளைத் துருவிப்பார்

புழுவா இல்லை
புழுவைப் போர்த்திய
தூண்டில் முள்ளா
புரிந்துகொள்

சில புன்னகைகள்
புதைகுழிகளை
ஒளித்து வைத்திருக்கலாம்

முகத்தில் வெகுளித்தனமும்
அகத்தில் சகுனித்தனமும்
கொண்டவர்கள் அதிகமுண்டு

எட்டப்பர்களும் யூதாஸ்களும்
எட்டி இருப்பதில்லை

தூரத்தில் இருக்கும்
எதிரியின் முகத்தை விட
அருகில் இருக்கும் முகமூடிகள்
ஆபத்தானவை!

Saturday, July 24, 2010

மலிவு விலையில் மடிகணினி

தி.மு.க.வின் அடுத்த தேர்தல் வாக்குறுதி 'அனைவருக்கும் இலவச மடிகணினி' என்பதாகக் கூட இருக்கலாம்! ரூ.1500க்கு லேப்டாப் விற்பனைக்கு வந்தால் இது சாத்தியம்தானே? ஆம், விரைவில் வருகிறது 1500ரூபாய்க்கு லேப்டாப்!

மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வெறும் ரூ.1500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை மத்திய  அரசுஅறிமுகம் செய்துள்ளது. அடுத்தாண்டுமுதல் இது விற்பனைக்கு வரும். புதுடெல்லியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த லேப்டாப்பை வடிவமைத்துள்ளது. இத்துறையின் அமைச்சர் கபில் சிபல்இதை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இது போன்ற மலிவு விலை லேப்டாப்பை வடிவமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது,தனியார் நிறுவனங்கள் யாரும் ஆர்வம்காட்டவில்லை. இப்போது அத்தனை பெரிய நிறுவனங்களும் மலிவு விலை லேப்டாப் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. பெரிய தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றை தயாரிக்கும்போது, விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த லேப்டாப்பில் டச் ஸ்கிரீன், கீபோர்டு, 2 ஜி.பி. ராம் மெமரி, வை&பி இணைப்பு வசதி, யூஎஸ்பி போர்ட் ஆகியவை இருக்கும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இவை விநியோகம் செய்யப்படும்என கபில் சிபல் தெரிவித்தார். ஆரம்பத்தில் ரூ.500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது ரூ.1500 ஆகிவிட்டது. இன்னும் படிப்படியாக விலை குறையவும் வாய்ப்புள்ளதாம்.

Friday, July 16, 2010

ரேஷன் கடையில் ஸ்டாக் உள்ளதா? sms அனுப்பினால் தெரிந்துவிடும்

விக்கிற விலைவாசியை சமாளிக்க ரேஷன் கடையில போயி கால் கடுக்க காத்துக்கிடந்து பொருட்கள் கேட்டா ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னு கைய விரிச்சா எப்படி இருக்கும் நமக்கு?

உண்மையிலேயே ரேஷன் கடையில் பொருட்கள் தீர்ந்துவிட்டதா இல்ல வச்சுக்கிட்டே வஞ்சகம் பண்றாங்களா? என்பதை அறிய இனி ஒரு sms அனுப்பினால் போதும் உண்மை நிலவரம் தெரிந்துவிடுமாம்.

முதலில் Pds  என டைப் செய்து இடைவெளி விட்டு, மாவட்டகுறியீட்டு எண்ணை டைப் செய்து இடைவெளி     விட்டு     உங்கள் பகுதி ரேஷன் கடை எண்ணை டைப் செய்து 9789006492மற்றும் 9789005450 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் உடனடியாகஇருப்பு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம்வந்து விடும்.

மாவட்ட குறியீட்டு எண், ரேஷன் கடை எண் ஆகியவை ரேஷன் கார்டிலேயே இருக்கிறது. கார்டில் மேல்பகுதியில் 11 இலக்கம் கொண்ட எண் உள்ளது. இதில் ஆங்கில எழுத்துக்கு முன்புள்ள 2 எண்கள் மாவட்ட குறியீட்டு எண். கடை எண் ரேஷன் கார்டின் கீழ்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், உப்பு, அரிசி, ரவை, கெரசின், மளிகை, பாமாயில்  ,   சர்க்கரை, உளுந்து, துவரம் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் ஸ்டாக் விவரங்களை அறியலாம்.மக்கள் இம்முறையை அதிகமாக பயன்படுத்தினால், முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப் படலாம்.

Wednesday, July 14, 2010

தமிழ்ப் பத்திரிக்கைகளையும் பாருங்கள் முதல்வர் அவர்களே!

மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளியாகும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' என்ற நாளிதழ் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றியும் அதற்காக தமிழக அரசு காட்டி வரும் அக்கறை பற்றியும் சிலாகித்து எழுதியுள்ளதாக மேற்கோள் காட்டியுள்ளார்.



 டெட்ராய்டை போல சென்னை உள்ளது. பல சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களும்,விநியோக நிறுவனங்களும் அவர்களது தொழிற்சாலைகளை நிறுவியுள்ளதால் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த பெருநகரம் செழித்து வருகிறது. போர்டு, ஹூண்டாய், நிஸான், ரெனோ, டெய்ம்லர், பி.எம். டபிள்யூ ஆகிய அனைத்து நிறுவனங்களும்இங்கு சங்கமித்துள்ளன.

 உலகின் சிறிய கார்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மையமாக சென்னையை உருவாக்க பல நூறு கோடி டாலர்களைச் செலவழித்து வருகின்றனர். விரைவில் சென்னை ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும். இது கடந்த ஆண்டு எந்தஅமெரிக்க மாநிலமும் செய்த உற்பத்திஅளவை விட அதிகமாகும்.கார் உதிரி பாகங்களின் விநியோக  நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்து வருகின்றன.



கார் தொழிலுக்கு தேவையான நிலம், சாலைகள், மின்சாரம்ஆகியவற்றை அளிப்பதில் இந்தியாவின் பல மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்கவும், அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யவும்  டஜன் கணக்கான அரசு அனுமதிகளை பெற ஒரே அலுவலகத்தையும் (ஒற்றை சாளர முறை) தமிழ்நாடு அமைத்துள்ளது.

இவ்வாறு அந்த இதழில் செய்தி வந்துள்ளதாகப் பெறுமையாக குறிப்பிடும் முதல்வர் அவர்கள் தமிழகத்தில் வெளிவரும் பத்திரிக்கைகளையும் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் நன்றாக இருக்கும்.

சான்றுக்கு ஆனந்த விகடனில் 'அரசு உஷார்!' என்ற தலைப்பில் வெளியான தலையங்கம் இதோ,

'அமைதிப் பூங்கா' என்றும், 'தொழிலாளர் உறவில் தனிச் சிறப்பு பெற்ற மாநிலம்' என்றும் தமிழகம் சம்பாதித்த நற்பெயர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றன.

சில காலம் முன்புதான் கோவை தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களே அதிகாரியை அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அரங்கேறியது. சென்னையை அடுத்திருக்கும் கார் தொழிற்சாலையின் உள்ளே போலீஸார் புகுந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அளவுக்கு வேலை நிறுத்தம்.

உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் கோவை பக்கம் திருப்பி, செம்மொழி மாநாடு கொண்டாடுவதில் திறமை காட்டிய அரசு இது. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் விழா முதல் பல்கலைக்கழகப் பட்டமளிபபு விழா வரையில் ஆள்வோர் கலந்துகொண்டால், பிரமாண்டமான கூட்டம் கூட்டுவதிலும் வல்லமை கொண்ட அரசு இது.

திரைத் துறை விழாக்கள் சீரும் சிறப்புமாக நடப்பதற்காக எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் செலவிட முதல்வரே துடிப்புடன் தயாராக இருக்கும் அரசு இது. மத்திய அரசில் கூட்டணியாக இருந்துகொண்டு தாங்கள் இஷ்டப்பட்டதையெல்லாம் சாதிக்கும் சாமர்த்தியம் கொண்ட அரசு இது.

மேற்சொன்ன அவலங்களுக்கு முடிவுகட்டவும், கொஞ்சம் நேரத்தையும் சாதுர்யத்தையும் பயன்படுத்தினால்தான் என்ன?
நன்றி: ஆனந்த விகடன்14.7.10

கூடுதராக இன்னொரு தகவல்:
சென்னையை அடுத்துள்ள நோக்கியா நிறுவனத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று(13.7.10) முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பன்னாட்டு நிறுவங்களுக்கும் முதலாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் தமிழகத்தில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா அரசு?

Monday, June 28, 2010

கடைசி வார்த்தைகள்!

பிரபலமானவர்கள் தங்கள் மரணத்தின் போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை..
இந்த வார ஆனந்த விகடனில் வெளியானவை இதோ உங்களுக்காக...

மகாத்மா காந்தி:
'ஹே ராம் !'

தாமஸ் ஆல்வா எடிசன்:
"விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும்!"

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்:
"இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது!"

பாபர் (மொகலாயப் பேரரசர்):
தன் மகன் ஹுமாயூனிடம்...
"இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!"

டயானா:
"கடவுளே! என்ன நடந்தது எனக்கு?"

மேரி க்யூரி:
"என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்!"

கிளியோபாட்ரா:
பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, "ஆஹா.. இதோ.. என் முடிவு இங்கே இருக்கிறது!"

ஆன் (இங்கிலாந்து ராணி):
தன் உதவியாளரிடம்,
"மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தைப் பயன்படுத்துங்கள்!"

நெப்போலியன்:
"பிரான்ஸ்.. ஆர்மி... ஜோஸ்பின்!"

வின்ஸ்டன் சர்ச்சில்:
"எனக்கு எல்லாமே போர் அடிக்குது!" இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று 9 நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார்.

ஜூலியஸ் சீஸர்:
"யூ டூ புரூட்டஸ்?"

பெருந்தலைவர் காமராஜர்:
தன் உதவியாளரிடம், "வைரவா விளக்கை அணைத்து விடு!"

என்ன நண்பர்களே உங்களுக்கும் ஏதாவது பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்!

Friday, June 25, 2010

குடி முழுகிப் போச்சு.!

அக்கம் பக்கம்
வாங்கியத தீர்க்கல
அடகுக் கடையில்
வச்சதயும் திருப்பல

சொத்து பத்து
இருந்ததெல்லாம் இப்பயில்ல
சொந்தங்கொள்ள காணி
நிலங்கூட இல்ல

சொந்தபந்தம்
இருக்குறாங்க தூரத்தில
சொல்லிக்கொள்ள பக்கத்தில
யாருமில்ல

அஞ்சு பத்து வச்சிருந்த
காசையும்
அடிச்சு வாங்கி புடுங்கி
போன புருஷனோ

எக்கச்சக்கம் குடிச்சதால
போதையில
எழுந்திருக்க முடியாம
வீதியில

கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த
உசுரு கூட
குடி கொள்ள முடியாம
முடிஞ்சு போக

அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி
அழுதழுது வாங்கி வந்த
பணத்துல

மிச்சமீதி
சடங்குக்கொண்ணும் குறையில்ல
மிஞ்சியிருந்த அரிசி கூட
புருசன் வாயில.!

Sunday, June 20, 2010

குடைக்குள் மழை.!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பார்த்திபன் நடித்த பழைய திரைப்படம் பற்றிய பதிவு என்று நினைத்து விட வேண்டாம். 'குடைக்குள் மழை' என்பது ஓர் அழகிய கவிதைக் குறியீடு. இது போன்ற கவிதைக்குள் அர்த்தங்கள் நிறைய புதைந்து கிடக்கும். வாசிப்போரின் சிந்தனை, அனுபவம் மற்றும் கற்பனைக்கேற்ப அவை விரிந்து கொண்டே செல்லும்.

சமீபத்தில் நண்பர்களோடு பொழுது போக்கிக் கொண்டிருந்த வேளை தற்செயலாக இந்த தலைப்பு ஞாபகத்திற்கு வர, 'குடைக்குள் மழை என்றவுடன் உங்கள் சிந்தனையில் என்ன தோன்றுகிறது?' என நண்பர்களிடம் கேட்டேன். அதற்கு ஒவ்வொருவரும் சொன்ன பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

முதலில் காதலில் இருந்து ஆரம்பித்தார் செல்வராஜ்.
'காதலன் காதலி ஒரே குடைக்குள். உள்ளே காதல் மழை!'
சொல்லி விட்டு குடை என்பது துப்பட்டாவாகவும் இருக்கலாம் என்றார்.

செல்வ ஸ்டீபன் சொன்ன கற்பனை அற்புதம்
'இமைகள் என்னும் குடைக்குள் கண்ணீர் மழை'

செந்தில் முருகன் வேடிக்கையாக சொன்னாலும் அர்த்தம் நிறைந்ததாகத் தோன்றியது எனக்கு
'குடையில் நிறைய ஓட்டைகள் அதனால் குடைக்குள் மழை'
குடை என்பதற்கு அரசாட்சி என்ற பொருளும் உண்டு அதிலிருக்கும் ஓட்டைகளால்தானே ஏழை மக்கள் கண்ணீர் மழை வடிக்கிறாரகள்!

சுரேஷ் சொன்னது இன்னும் வேடிக்கையானது. அதாவது,
'காற்றின் வேகத்தில் குடை மேல் நோக்கித் தூக்கப்பட்டு குடை கூடை போலாகியது. அதுதான் குடைக்குள் மழை'
ஆம்.. குடை போல நாம் சிலதை/சிலரை நம்புகிறோம். ஆனால் அவை/அவர்கள் கூடை போலாகி நம்மைக் கவிழ்த்து விடுகின்றன/ர்.

மார்டின் கற்பனை கொஞ்சம் வித்தியாசமானது
'மழை பெய்தவுடன் முளைக்குமே காளான்குடை. அதற்குள் மழைநீர் தானே இருக்கிறது அதுதான் குடைக்குள் மழை' அட.. என்னே ஒரு சிந்தனை! கண்டிப்பா மார்டினைத் தவிற வேறு யாரும் இப்படியெல்லாம் சிந்திக்க முடியாது.

நானும் ரொம்ப யோசிச்சு பார்த்து கடைசியா சொன்னேன்
'வானம் என்பதே ஒரு பிரம்மாண்டமான குடை அதற்குள்ளேதானே மழை பெய்கிறது'

என்ன நண்பர்களே ரொம்ப நனைஞ்சிட்டீங்களா? உங்களுக்கும் ஏதாவது தோணுமே! எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை!

Wednesday, June 16, 2010

மது நேசர்களே.. உங்கள் கல்லீரலைப் பாருங்கள்.!

அடிக்கடி மதுவோடு குடித்தனம் நடத்துபவரா நீங்கள்? கொஞ்சம் இருங்க. உங்கள் கல்லீரல் என்ன நிலைமையில் உள்ளது என்பதைப் பாருங்கள். பிறகு தொடர்ந்து குடிப்பதைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முதலில் கல்லீரலைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய உடலில் நீர்மம் சுரக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்.

நாம் சாப்பிடும் சைவ அசைவ போன்ற எந்த உணவையும் செரிக்க வைப்பதற்குத் தேவையான பித்த நீரை உருவாக்குவது கல்லீரலின் முக்கியப் பணியாகும். இது மட்டுமின்றி இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை சுத்தம் செய்வது, இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, புரதப் பொருட்களை உண்டாக்குவது, உணவிலுள்ள நச்சுப் பொருட்களை சீர் செய்வது போன்ற பணிகளையும் செய்கிறது. இதனால்தான் கல்லீரலை வேதி தொழிற்சாலை என்று கூறுவர்.

மதுவிலுள்ள ஆல்கஹாலை அகற்றுவதற்காக கல்லீரல் கடுமையாகப் போராடும். அடிக்கடி மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைகிறது.


மேலே உள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஆரோக்கியமான கல்லீரல் எப்படி அழகாக அல்வா துண்டு மாதிரி இருக்கிறது, ஆல்கஹாலில் ஊறி நாசமடைந்த கல்லீரல் பார்க்கவே விகாரமாக இருக்கிறதல்லவா?

கல்லீரலுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா? தன்னுடைய கெட்டுப் போன அல்லது சிதைந்த திசுக்களை தானே மீளுருவாக்கம் செய்து கொள்ளும் தன்மையுடையது. ஆகவே அளவு மீறி மது அருந்தும் நண்பர்களே இப்போதிருந்தே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டால் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கலாம். இல்லையென்றால் கல்லீரல் கெட்டு கல்லறை பக்கமாகி விடும்..!

Sunday, June 13, 2010

என்னைக் கவர்ந்த ஹைக்கூக்கள்

கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று ஹைக்கூ. எளிமையான வார்த்தைகள் மற்றும் ஆழமான அர்த்தங்களால் கவிதை மேல் நாட்டம் இல்லாதவர்களைக் கூட ஹைக்கூ கவிதைகள் வசீகரிக்கும். அந்த வகையில் நான் ரசித்த சில ஹைக்கூக்கள்

சமத்துவபுரம்
கழிவு நீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்

யெஸ். பாலபாரதி

இடுகாடு
நிற்கும் பிணம்
பட்ட மரம்

-திருக்குவளை அறிவழகன்

வயல்வெளிகளில்
நிறைய முளைக்கின்றன
கட்டிடங்கள்

-செல்வ ஸ்டீபன்

உதிர்ந்த சருகுகள்
மீண்டும் கிளையில்
குருவிக்கூடு

இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்

-கவிக்கோ அப்துல் ரகுமான்

நடு பகல்
சுடு மணல்
பாவம்.. என் சுவடுகள்

-அறிவுமதி

திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு

-குடந்தை அன்புமணி

விடிந்த பிறகும்
மறையாத விண்மீன்கள்
குடிசையின் விரிசல்கள்

-பாக்யாவில் பிரசுரமான என் முதல் கவிதை.

நன்றாக இருக்கிறதா?
உங்கள் கருத்துக்களையும் ஹைக்கூக்களையும் எழுதுங்கள் நண்பர்களே

Monday, June 7, 2010

ஹுண்டாய் கார் நிறுவனத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

இந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் சென்னை இருங்காட்டுக்கோட்டையிலுள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலைக்குள் மூன்றாவது முறையாக வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தென்கொரிய நிறுவனமான ஹுண்டாய் தொழிற்சாலையில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து மூன்றாண்டுகளுக்கு முன் தொழிற்சங்கம் அமைத்தனர். அன்றிலிருந்து ஹுண்டாய் நிர்வாகம் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 87 பேர் வேலை நீக்கம் மற்றும் பலர் இடைநீக்கம், இடமாற்றம் என்று பல வழிகளிலும் தொழிலாளர்களை வஞ்சித்த நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இறுதியாக வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20 அன்று முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். தொழிலாளர் நல வாரியத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல அதிகாரியின் அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டதால் 18 நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஹுண்டாய் நிர்வாகம் அரசு அதிகாரியின் அறிவுரையை மீறி தான் உருவாக்கிய பணியாளர் குழு என்ற பொம்மை அமைப்போடு சம்பள ஒப்பந்தம் போட்டது.

அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் இரண்டாவது முறையாக ஆலைக்குள்ளேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரியின் அறிவுரை ஏற்பதாகவும் பணி நீக்கம் செய்யப்பட்டோரில் 20 பேரை வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததன் பேரில் வேலை நிறுத்தம் 6 நாடகளில் முடிவுக்கு வந்தது. 20 பேரை கருணை அடிப்படையில் பணி எடுத்துக் கொண்டதாக கூறிய நிர்வாகம் இன்னும் அவர்களை நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளது. மேலும் வேதாளம் முருங்கை ஏறிய கதையாக, தொழிலாளர் நல வாரியத்தினரின் அறிவுரையை மீறி மீண்டும் பணியாளர் குழு என்ற பொம்மை அமைப்பை அமைக்கத் தேர்தல் நடத்த முயற்சி எடுத்தது.

கடும் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் மூன்றாம் கட்டமாக டிசம்பர் மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் விடுத்தனர். இந்த சமயம் கொரிய அதிபர் இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்பதாக இருந்ததால் ஹுண்டாய் நிர்வாகத்தினர் உடனடியாக வேலை நீக்கத்தில் மீதியுள்ள 67 பேர் தொடர்பாக தொழிலாளர் நல வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவதாக உறுதியளித்தது. அதன் பேரில் அரசு அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழு 67 பேரின் வழக்குகளை ஆய்வு செய்து முதற்கட்டமாக 35 பேரை மீண்டும் பணியில் அமர்த்த அறிவுருத்தியது.

தென் கொரிய அதிபரின் இந்திய வருகை நல்லபடியாக முடிந்து திரும்பிய பிறகு மீண்டும் தன் வேலையைக் காட்டியது ஹுண்டாய் நிர்வாகம். அரசின் அறிவுரையை ஏற்காமல் தட்டிக் கழித்தது. மேலும் பணி நீக்கம் செய்யப்ட்ட தொழிலாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து அனுப்பி விடலாம் என்று முயற்சி எடுத்து வருகிறது.

மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், நேற்று தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர்களை இடை நீக்கம் செய்தது. அதிருப்தியின் எல்லைக்குச் சென்ற தொழிலாளர்கள் நேற்று இரவிலிருந்து ஆலைக்கு உள்ளேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுளளனர்.

Friday, May 21, 2010

லைலா புயலும் பாகிஸ்தானும்.!

வங்கக் கடல் பகுதியை ஆட்டுவித்து அடங்கியிருக்கும் லைலா புயலுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? இருக்கிறதே.. இப்புயலுக்கு லைலா என்ற பெயர் பாகிஸ்தான் வைத்ததாகும் என்பதுதான் அது. வேறு எந்த தொடர்பும் இல்லை! இந்தியாவைத் தாக்கிய புயலுக்கு பாகிஸ்தான் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முதலில் புயலுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
உலகில் 1970க்கு முன்பு வரை புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இல்லை. வானிலை ஆய்வு மையங்கள் 1A, 1B என ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி புயலுக்குப் பெயர் வைத்து வந்தன. 1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின் போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியைச் சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதன்முறையாகக் கேட்டுக் கொண்டது. அதே போல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு -ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்தப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளைக் கேட்டுக்கொண்டது.
அதன்படி, வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இந்தியா, வங்க தேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்கள் கொண்ட பட்டியலைத் தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலிலிருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்ட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்டுகிறது. இதுபோல் 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி தற்போது அடித்து ஓய்ந்திருக்கும் புயலுக்கு பாகிஸ்தானின் 'லைலா' பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன் ஓமன் பரிந்துரை செய்த வார்டு என்ற பெயர் வைக்கப்பட்டது.

இதுதாங்க லைலா புயலுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு.! சரி அது போகட்டும் அடுத்த புயலுக்கு என்ன பெயர்?
அடுத்த புயலுக்கு பெயர் தயாராக இருக்கிறது. இலங்கை தேர்வு செய்த 'பண்டு' என்ற பெயர்தான் அது. பண்டு என்ன செய்யும்? காத்திருப்போம்..

Saturday, May 8, 2010

சடங்கு.!

எவரேனும் ஒருவர்
தோள் கொடுத்திருந்தால் போதும்..
அவர்
சாய்ந்திருக்க மாட்டார்
இதோ
இப்பொழுது நான்கு தோள்கள்
அவரைச் சுமக்கின்றன.!

ஏதேனும் ஒரு விழி
இரக்கப் பார்வை
வீசியிருந்தால் கூடப்போதும்
அவர்
வாழ்ந்திருக்கக் கூடும்
இதோ
இப்பொழுது எத்தனையோ விழிகள்
கண்ணீர் வடிக்கின்றன!

யாரேனும் ஒருவர்
வழி காட்டியிருந்தால்
அவர் பயணம்
முடிந்து போயிருக்காது
இதோ
இப்பொழுது எத்தனையோ பேர்
வழியனுப்ப வந்திருக்கிறார்கள்!

வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காதவர்
வாய்க்கு மட்டும்
இன்று அரியும் பாலும்!

வறுமையில் வாடி
உதிர்ந்தவர்
இதோ இங்கே
பூத்துக் கிடக்கிறார்
மாலைகளால்!

நடந்த காலங்களில்
அவருக்கு
வழி தராதவர்கள்
இதோ
இப்பொழுது வீதியெங்கும்
மலர் தூவுகிறார்கள்..
பாவம் அவர் பாதங்களோ
பாடையில்..!

Saturday, February 13, 2010

சூடான டீயா? ஆ...பத்து.!

சூடான டீயை ஆவி பறக்க அவசரமாய் குடிப்பவர்களா நீங்கள்? கொஞ்சம் சூடு குறைந்தாலும் நீங்கள் ரொம்ப சூடாகி விடுவீர்களா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சூடான செய்திதான் இது. கொஞ்சம் ஆற அமர படியுங்கள்.

அதிக சூடாக டீ குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ட்ர(Oesophagus cancer) வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வில் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயின் பல்வேறு வகைகளில் ஒன்று உணவுக்குழாய் புற்றுநோயாகும். இந்நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். மும்பையிலுள்ள டாடா நினைவு மருத்துவனை நிபுணர்கள் 1500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பின்வரும் தகவல்கள் அறியப்பட்டன.

வாய் முதல் இரப்பை வரையுள்ள உணவுக்குழாய் மிக மிருதுவானது. அதிக சூடாக டீ குடிப்பதால் உணவுக்கழாயின் சுவர்கள் அரிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமாகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் அபாயமுள்ளது.

பான்பராக், புகையிலை போடுபவர்களுக்கு 1.1 மடங்கும் பீடி குடிப்பவர்களுக்கு 1.8 மடங்கும் சிகரெட் பிடிப்போருக்கு 2 மடங்கும் மது அருந்துவோருக்கு 1.8 மடங்கும் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் விட சூடாக டீ குடிப்போருக்கு 4 மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளதாம்.

உலகின் வேறு சில நாடுகளிலும் இதே போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கேன்சர் ஆராய்ச்சி இதழான International cancer epidoliogy ல் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Thursday, February 11, 2010

இடிபாடுகளுக்குள் 29 நாட்கள்.!

உணவு தண்ணீரின்றி மனிதன் ஒரு வாரம் இருப்பதே பெரிய விஷயம். இந்நிலையில் 29 நாட்கள் அதுவும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட ஒரு மனிதர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் என்றால் அதிசயம் இல்லையா?

அண்மையில் ஹைதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட Muncie என்ற இந்த 28 வயது மனிதர் 29 நாட்கள் மரண போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இவரது கை வெள்யே தெரிந்ததைப் பார்த்த மீட்புக்குழுவினர் ஏதோ பிணம் என்று நினைத்து வெளியே எடுத்தனர். பின்பு லேசான சுவாசம் இருப்பது தெரிந்ததும் மருத்துவமனையில் அனுமதித்து பிழைக்க வைத்தனர்.

Thursday, February 4, 2010

குழந்தைக்குள் குழந்தை.!

சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்று பரபரப்பு ஏற்படுத்தினாள். பள்ளியில் படிக்கும் சக மாணவனோடு ஏற்பட்ட உறவால் கர்ப்பமான இச்சிறுமிக்கு 29.1.10 அன்று அறுவை சிகிச்சை மூலம் 2.75kg எடையுள்ள குழந்தை பிறந்தது.
சீனாவின் Shangaiயிலுள்ள மருத்துவமனைகள் தரும் தகவல்படி கருக்கலைப்பு செய்யும் இளம்பெண்களில் 30% பேர் பள்ளி குழந்தைகளாம்!

ஆசியாவிலேயே மிகக்குறைந்த வயதில் குழந்தை பெற்றது இந்த சிறுமிதானாம். அப்படியென்றால் உலகிலேயே இள வயது தாய் யார் என்பதற்கான விடை தேடி விக்கிபீடியாவுக்குள் பார்த்தால் இதை விட அதிர்ச்சியான செய்தி இருந்தது. மேலே படத்திலுள்ள சிறுமிதான் உலகிலேயே குறைந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்.
பெரு நாட்டை சேர்ந்த Lina Medina என்ற இந்த சிறுமி தாய்மையடைந்தபோது 5 வயதே ஆகியிருந்தது.!
1933ம் ஆண்டு செப்டம்பர் 27ல் பிறந்த Lina வுக்கு 1939, மே14ல் அறுவை சிகிச்சை மூலம் 2.7Kg எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
Lina medina 76 வயது கடந்து இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் மகன் 40வது வயதில் Bone marrow என்ற நோயால் இறந்தார்.

Saturday, January 30, 2010

நிலநடுக்கம் எப்படி உண்டாகிறது?

பலகோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து ஒரு நெருப்புக் கோளமாக பிரிந்து வந்த பூமியின் மேற்பரப்பு பருவ மாற்றங்களால் இறுகியது. எனினும் பூமியின் மையப்பகுதி இன்னும் நெருப்புக்குழம்பாகவே உள்ளது. மேற்பரப்பு ஒரு தேங்காயைப் போல ஒரே பரப்பாக இல்லாமல் பல தட்டுக்களாக காணப்படுகின்றன. பூமியின் சுழற்சி வேகத்தில் உள்ளிருக்கும் குழம்பு நகர்வதால் தட்டுக்களும் நகர்கின்றன.இந்த தட்டுக்கள் வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் 13 வரை நகர்கிறது. இது மிகச்சிறிய அளவாக இருந்தாலும் இந்த தட்டுக்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தும்.

மேலேயுள்ள படத்தில் இந்தோனேசியா, அந்தமான், பங்களாதேசம், இந்தியா இவையனைத்தும் ஒரே தட்டில் இருப்பதைக் காணலாம். இந்த தட்டின் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நினைவிருக்கலாம். அதே போல இரு அமெரிக்க கண்டங்களுக்கும் இடையில் சிறியதாக கரிபியன் தட்டு இருப்பதைக் காணலாம். இத்தட்டோடு வட அமெரிக்க பகுதி தட்டு உரசியதால் ஏற்பட்டதே அண்மையில் ஹைதியில் பெறும் சேதம் உண்டாக்கிய பூகம்பமாகும்.

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் சேர்ந்திருந்த பகுதிகள் பிரிந்ததற்கும் பிரிந்திருந்த பகுதிகள் சேர்ந்ததற்கும் இந்த நகரும் தட்டுக்களே காரணமாகும். இன்னொரு செய்தி, இமயமலை ஒரு காலத்தில் கடலாக இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கும் இந்த நகரும் தட்டுக்களே காரணம் என கருதப்படுகிறது. அதாவது இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசியப் பிளேட்டை விட இந்திய பிளேட் வேகமாக நகர்கிறது என்றும் அதனால் உண்டான அழுத்தத்தில் எழுந்ததே இமயமலை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
--------------------------------------------------------------
Ovi Mail: Easy setup in minutes
http://mail.ovi.com

Thursday, January 28, 2010

ஹைதி நிலநடுக்கம்

13.01.2010 அன்றைய தினம் அவ்வளவு சோகமயமாகும் என்று ஹைதி(Haiti) நாட்டு மக்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். தங்கள் நாட்டு ஜனத்தொகையில் 2% மக்களை ஒரே நாளில் பூகம்பத்திற்கு இரையாக்கியது பரிதாபம்! ஏறத்தாழ 2லட்சம் பேர்களை பலி கொண்ட இது உலகில் நடந்த மிகப்பெறும் பூகம்பங்களில் ஒன்றாகும். பூகம்பத்திற்கு முன்பு ஹைதி என்றொரு நாடு இருப்பதே நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அமெரிக்கா பகுதியில் உள்ள இந்நாடு 27750ச.கீ பரப்பளவு (தமிழ்நாட்டில் 6ல் ஒரு பங்கு) கொண்ட குட்டி நாடாகும். 2008ம் ஆண்டு பக்கத்து நாடான டொமினிக் குடியரசில் நடந்த விஞ்ஞானிகள் கருத்தரங்கில் விரைவில் இப்பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுமென கணிக்கப்பட்டது. பூகம்பத்தை பொருத்தவரை எந்த பகுதியில் வரும் என்பதை மட்டுமே கணிக்க முடியும். எந்த நேரத்தில் வரும் என்பதை துல்லியமாக கணிக்க இயலாது. இதற்கு முன்பும் ஹைதி மற்றும் அண்டை நாடுகளில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் உலகில் நடந்த பெரிய பூகம்பங்களும் பலியானோர் ண்ணிக்கையும்:
1. 1556-சீனாவிலுள்ள Shaanxi, 830,000 பேர்

2. 526 துருக்கியின் Antioch, 250,000 பேர்

3. 1976 சீனாவின் Tangshan, 242,000

4. 1920 சீனாவின் Haiyuan, 240,000

5. 1138 சிரியாவிலுள்ள Aleppo, 230,000

6. 2004ல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் 230,000பேர்.

இந்த வரிசையில் ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏழாம் இடத்தில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Friday, January 22, 2010

ஹைக்கூ

. **ஹைக்கூ**

விடிந்த பிறகும்
மறையாத விண்மீன்கள்
குடிசையின் விரிசல்கள்

. -மீரான்

Thursday, January 21, 2010

முகமூடிகள்

எதிரிகள் எங்கும்
இருக்கலாம்
எச்சரிக்கை..

புகழ் பாடுபவனைக் கவனி
பின்னால்
புறம் பேசக்கூடும்

உனக்கு
மேடை கட்டுவதாக சொல்பவன்
உண்மையில்
பாடை கட்டிக் கொண்டிருக்கலாம்

உன் படகில்
துடுப்புகளைத் தொடும் முன்
துளைகளைத் துருவிப்பார்

புழுவா இல்லை
புழுவைப் போர்த்திய
தூண்டில் முள்ளா
புரிந்துகொள்

சில புன்னகைகள்
புதைகுழிகளை
ஒளித்து வைத்திருக்கலாம்

முகத்தில் வெகுளித்தனமும்
அகத்தில் சகுனித்தனமும்
கொண்டவர்கள் அதிகமுண்டு

எட்டப்பர்களும் யூதாஸ்களும்
எட்டி இருப்பதில்லை
கிட்டேயே இருப்பார்கள்

தூரத்தில் இருக்கும்
எதிரியின் முகத்தை விட
அருகில் இருக்கும் முகமூடிகள்
ஆபத்தானவை.

Wednesday, January 20, 2010

Welcome Friends

தெரிந்தோ அல்லது தெரியாமலோ இந்த வலைக்குள் சிக்கியிருக்கும் அனைத்து நண்பர்களையும் வரவேற்கிறேன்!

எனது புதிய இந்த வலைப்பதிவில் என்னுடைய மற்றும் என் நண்பர்களுடைய படைப்புக்களை பதிவு செய்ய இருக்கிறேன். உங்கள் எண்ணங்களையும் விமர்சனங்களையும் எழுத்துக்களாக்கி கருத்துகள் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
. -நட்புடன் மீரான்

Tuesday, January 19, 2010

"குடி முழுகிப்போச்சு" -கவிதை

**குடி முழுகிப்போச்சு**

அக்கம் பக்கம்
வாங்கியத தீர்க்கல
அடகுக் கடையில்
வச்சதயும் திருப்பல

சொத்து பத்து
இருந்ததெல்லாம் இப்பயில்ல
சொந்தங்கொள்ள காணி
நிலங்கூட இல்ல

சொந்தபந்தம்
இருக்குறாங்க தூரத்தில
சொல்லிக்கிட பக்கத்தில
யாருமில்ல

அஞ்சு பத்து வச்சிருந்த
காசையும்
அடிச்சு வாங்கி புடுங்கி
போன புருஷனோ

எக்கச்சக்கம் குடிச்சதால
போதையில
எழுந்திருக்க முடியாம
வீதியில

கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த
உசுரு கூட
குடி கொள்ள முடியாம
முடிஞ்சு போக

அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி
அழுதழுது வாங்கி வந்த
பணத்துல

மிச்சமீதி
சடங்குக்கொண்ணும் குறையில்ல
மிஞ்சியிருந்த அரிசி கூட
புருசன் வாயில.!

. -மீரான்-

"சிகரெட்" -கவிதை

*சிகரெட்*
இருவிரல் இணையும்
நுனிமட்டும் சிவக்கும்
இறுதியில் உன் வாழ்க்கை
ஒருபிடிச் சாம்பல்
ஓதாமல் ஊதும்-சங்கு
ஊதாமல் ஊதும்

புகைத்தல்
உனது புன்னகைக்கு
மட்டுமல்ல-பூக்களுக்கு
செய்யும் துரோகமும் கூட

ஒவ்வொரு இழுப்பின் முடிவிலும்
உனக்கு மட்டும் அல்ல
காற்றுக்கும் சேர்த்துதான்
கல்லறை
கட்டிக்கொண்டிருக்கிறாய்

காற்றால் நிரப்ப வேண்டிய
நுரையீரலுக்குள் ஏன்
கரையான் கூடு கட்டிக்
கொள்கிறாய்.

இயற்கையைப் பிடுங்கி
இயற்கையைக் கொன்று
இன்பம் காண்கிறாயா?

தன்னுயிர் நீக்க தனக்கு
உரிமை இல்லாதபோது
காற்றின் குரல்வளை
நெறிக்க
உனக்கேது உரிமை.

இனி..
புகைத்தலும் தேச துரோகமே!
சுயகொள்ளி போட்டுக்கொள்வதில்
இனியும் சுகப்படாதே..

அமுதுண்ட அதரங்களில்
அமில
உருளைகளை
அணியாதே!

புகைத்தலை மற
புன்னகை திற
கனவுகள் தெளிவாகட்டும்
கார்மேகம் உனக்காக
பொழியட்டும்.!

-மா.ஜெகதீஷ் எழுதிய "அமைதியை நாடி"புத்தகத்திலிருந்து..
--------------------------------------------------------------
Ovi Mail: Create an account directly from your phone
http://mail.ovi.com

Monday, January 18, 2010

Kavidhai

உன்
விழியசைவில் எல்லா மொழிகளும் தோற்கும்..!
உன்
இதழ் அசைவில் எம்மொழியும் செம்மொழியாகும்.!
--------------------------------------------------------------
Ovi Mail: Being used by users in 178 countries
http://mail.ovi.com