Tuesday, March 20, 2012

நூதன போதையின் பிடியில் மாணவ சமுதாயம்!

மாலை நேர திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. பேட்டை செல்வதற்கான பேருந்தை எதிர்பார்த்தபடி நின்றுருந்தேன். கொஞ்ச நேரத்தில் சுத்தமல்லி பஸ் ஆடி அசைந்து உள்ளே நுழைந்தது. நிற்பதற்கு முன்னாலேயே மக்கள் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விட்டது.

"மொதல்ல எறங்குதவுங்களுக்கு வழிய விடுங்கப்பா.." உள்ளிருந்து வந்த குரலையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் முண்டியடித்து நுழைந்தார்கள் சிலர். இன்னொரு பக்கம் ஜன்னல் வழியாக இருக்கைக்கு முன்பதிவு செய்வதில் மும்மரமாயிருந்தனர் சிலர். மாலை நேரமென்பதால் மாணவர்கள் கூட்டம் அதிகமாயிருந்தது.

ஒருவழியாக மல்லுக்கட்டி ஏறியதில் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது எனக்கு.

"எத்துன பஸ்ஸு வுட்டாலும் காண மாட்டுக்கு.. இந்த பேட்டை ஊருக்கு மட்டும் எங்க கெடந்துதான் வருமோ இவ்வளவு கூட்டம்"
பெருமூச்சு விட்டபடி புலம்பினார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர்.

"அண்ணே.. இந்த பேக்க கொஞ்ச நேரம் வச்சிருங்கண்ணே"
நின்று கொண்டிருந்த ஒரு மாணவன் தன் புத்தகச் சுமையை என் மடியில் இறக்கி வைத்துவிட்டு தன் சகாக்களோடு அரட்டையைத் தொடர்ந்தான்.

ஹாரன் சத்தங்கள் அலர பேருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது. கண்டக்டரிடம் பேட்டை ரொட்டிக்கடை ஸ்டாப்பிற்கான பயணச்சீட்டு வாங்கி பையில் திணித்துக் கொண்டேன். இடது பக்கமிருந்த ஒரு மாணவன், ஏறக்குறைய 14 அல்லது 15 வயது இருக்கலாம் ஏதோ வித்தியாசமாக செய்துகொண்டிருந்தான். அவன் கையில் இருந்த கைக்குட்டையை சுருட்டு போல உருட்டியிருந்தான். நுனிப்பகுதியில் ஏதோ ஈரமாகத் தெரிந்தது. அவ்வப்போது அதை மூக்கிலும் வாய்க்குள்ளும் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான். எனக்கு சந்தேகமாக இருந்தது.

ஏழெட்டு உறிஞ்சுகளுக்குப் பிறகு பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்து திறந்து அதிலிருந்த அந்த திரவத்தை கைக்குட்டையின் நுனிப் பகுதியில் ஊற்றினான். பிறகு மீண்டும் உறிஞ்சுதலைத் தொடர்ந்தான். நான் சந்தேகித்தது சரியாக இருந்தது. இது தொடர்பாக செய்திகளில் பத்திரிக்கைகளில் ஏற்கனவே பார்த்திருந்ததால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இது மிக மோசமான விஷயமாயிற்றே? இதை எப்படி இவன் பொது இடத்தில் ஒளிவுமறைவில்லாமால் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறான் என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த நடுத்தர வயதுடைய அந்த மனிதருக்கும் புரிந்திருக்கும் போல.
அவர் அவனைப் பார்த்து,

"ஏம்ல படிக்குத வயசுல இப்புடி கெட்டு கீவழியாப் போறீங்க? இதுக்கா ஒங்க வீட்ல அப்பா அம்மா பள்ளிக்கூடத்துக்கு அனுப்புதாங்க"
என்று கொஞ்சம் வேகமாகக் கேட்டார்.

"அது ஒண்ணுமில்லண்ணே சும்மாதான்..."
செயற்கையாக புன்னகைத்துக் கொண்டே சொன்னான்.

"நீ என்ன செய்தன்னு எனக்கு நல்லாத் தெரியும். இப்பமே இப்புடி இருந்தா நீங்கள்ளாம் பின்னாடி வாழ்க்கயில எப்புடில முன்னேறுவிய"
அவர் ஆதங்கத்தோடு சொன்னார்.

"இல்லண்ணே மனசு கஷ்டமா இருக்குண்ணே அதான்..." என்றான்

"இந்த வயசுல ஒங்களுக்கெல்லாம் அப்புடி என்னதான் கஷ்டமோ.. எப்படியோ நாசமாப் போங்க"
என்றார் வெறுப்போடு.

அந்த மாணவன் செய்து கொண்டிருந்தது பற்றி அநேகமாக உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.

பேப்பரில் தவறாக எழுதியதையோ பிரிண்ட் செய்யப்பட்டதையோ அழிப்பதற்கு பயன்படுத்தும் பொருள் ஒயிட்னர் எனப்படும். இதை வைத்துதான் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. ஒயிட்னரை கர்ச்சீப்பில் ஊற்றி நுகரும் போது அதன் நெடியில் ஒருவித போதை மயக்கம் ஏற்படுகிறதாம். அண்மைக் காலமாக தமிழக இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறதாம்.

இதுமட்டுமின்றி பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், நக பாலிஷ், பெயிண்ட்.... என மாணவர்களின் சுவாச போதை வஸ்துகளின் கண்டுபிடிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவற்றில், மலிவாகக் கிடைப்பதாலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாது என்பதாலும் ஒயிட்னர் முதலிடம் வகிக்கிறது. அதேபோல் உடல் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துவதிலும் இந்த ஒயிட்னருக்குத்தான் முதலிடம்.

ஒயிட்னரை நுகரும்போது நேரடியாக மூளை செல்களைத் தாக்குவதால் மூளை செயலிழக்க ஆரம்பிக்கும். மூச்சுத் திணறல், நுரையீரல் அழற்சி, தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலங்கள் பாதிப்பு, உறுப்புகள் செயலிழப்பு, ஞாபகமின்மை, பேச்சுத் திணறல் என இதன் பாதிப்புகள் எண்ணிலடங்கா. அளவுக்கதிகமாக பயன்படுத்தும் போது உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உண்டு.

உடல் ரீதியான பாதிப்புகள் மட்டுமின்றி மன ரீதியாகவும் இதன் பாதிப்பு அதிகம். மனக் கவலைகளை ஆற்றும் மருந்தாக நினைத்து இதைப் பயன்படுத்துபவர்கள் உண்மையில் வெந்த புண்ணில் வேல்... இல்லை ஆசிட் ஊற்றிக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு மோசமான காரியத்தைத்தான் பேருந்தில் எனக்கருகில் இருந்த அந்த மாணவன் திரை மறைவின்றி செய்து கொண்டிருந்தான். இப்போது நானும் என் பங்கிற்கு ஒயிட்னர் பயன்படுத்துவதன் அபாயத்தை அவனுக்கு பக்குவமாக எடுத்துச் சொன்னேன். அவனும் தலையாட்டினான். ஆனாலும் அது 'தெளிந்த' தலையாட்டலாக எனக்குப்படவில்லை.

"மனசு சரியில்லாமத்தாண்ணே இப்படி செய்யுதேன். கொஞ்ச நாள் கழிச்சி விட்ருவேன்"
என்ற அவன் வாக்குறுதியில் எந்த உத்தரவாதமும் இல்லை.

எந்தக் கவலையும் இல்லாத வாழ்வின் வசந்த காலமாக சொல்லப்படும் பள்ளிப் பருவத்திலேயே மனசு சரியில்லாமல் போவதும் அதற்கு மருந்தாக ஒயிட்னரை நாடுவதுமாக இருந்தால் வாழ்வில் இன்னும் எத்தனையோ விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே? அதற்கெல்லாம் இவன் எதை நாடுவான்? என்று நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

அண்மைக் காலமாக மாணவர்களிடையே அதிகரித்து வரும் குற்றங்களுக்கு இது போன்ற போதைப் பழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த தீமைகளைக் களைவதில் ஆசிரியர்களை விட பெற்றோர்களுக்கு பெரும் பங்கு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பல்லாயிரக் கணக்கில் செலவழித்து ஆடம்பரமான பள்ளியில் சேர்ப்பதும் தேவைக்கு மிஞ்சிய பாக்கட் மணி கொடுப்பதும் வீட்டில் லேப்டாப் சகிதம் தனி அறை ஒதுக்குவதும் செய்து விட்டால் பெற்ற கடன் தீர்ந்தது என்றில்லாமல் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

முக்கியமாக பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதற்கும் அவர்களின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்க வேண்டியதும் அவசியம். தங்கள் மனதில் இருக்கும் சுமைகளை வேறு யாவரையும் விட பெற்றோரிடத்தில் சொன்னால் போதும் நிச்சயம் ஆறுதலும் தீர்வும் கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கை பிள்ளைகளுக்கு வர வேண்டும். அத்தகைய அழகிய பந்தத்தை பெற்றோர் ஏற்படுத்திவிட்டால் பிள்ளைகள் வேறு எதற்கும் அடிமைப்பட வாய்ப்பில்லை.

ரொட்டிக்கடை ஸ்டாப் வந்தது. நான் இறங்கிக் கொண்டேன். கீழேயிருந்து அந்த மாணவனை மீண்டும் ஒருமுறைப் பார்த்தேன். தொடர்ந்து அவன் சுவாசத்தில் போதையேற்றிக் கொண்டிருந்தான். அவன் நேர்வழி பெற இறைவனை வேண்டிக் கொண்டு என் வழியில் நடையைக் கட்டினேன். நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

ஒயிட்னர் போதை தொடர்பான மேலும் செய்திகளுக்கு பின்வரும் சுட்டிகளை அழுத்துங்கள்.ஒயிட்னர்
போதையால் ரோட்டில் மயங்கிக் கிடந்த
பள்ளி மாணவன்

ஒயிட்னர்
போதைக்கு சாப்ட்வேர் என்ஜினியர்
பலி

எச்சரிக்கை
ரிப்போர்ட் - ஒயிட்னர் போதை

7 comments:

 1. ரொம்ப வருத்தமான விசயம். நம்மூர்ல இப்படியெல்லாம் நடக்குதா?.. பசங்க ரொம்பவே கெட்டுப்போயிட்டாங்களே..

  நல்ல பகிர்வு.. ஊருக்கு வந்துருக்கீங்களா.. கலீல் அண்ணே அம்மாவை நூர் பெத்தாவை கேட்டதாக சொல்லவும். ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடி அவங்க வீட்டு பக்கத்துலதான் குடியிருந்தோம். ஜின்னா மகன் சேக் என்று சொல்லுங்க.. அவங்களுக்கு தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாண்ணே நம்மூரு வரைக்கும் இந்த விஷம் பரவிடுச்சி.!
   ஊர்ல எல்லாரும் நல்லாயிருக்காங்க.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. சலாம் சகோ.தமிழ் மீரான்,
  அட..! இப்படியெல்லாமா நடக்கிறது..?
  நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் சகோ..!
  எங்கே போய்க்கொண்டு இருக்கிறது மாணவ சமூகம்..?
  கேள்விப்படும் செய்திகள் எல்லாம் அச்சத்தை தோற்றுவிக்கின்றனவே..!
  நமது முயற்சியாக நமக்கு தெரிந்த நமது சுற்றத்தில் உள்ள பிள்ளைகளை புத்தி சொல்லி வளர்க்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை..!
  இறைவன்தான் அனைவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும்..!
  நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி சகோ..!

  ReplyDelete
  Replies
  1. அலைக்கும் ஸலாம் வரஹ்.. சகோ. ஆஷிக்,
   நீங்கள் சொல்வது போல நாம் ஒவ்வொருவரும் இந்த விஷ(ய)த்தை அகற்றுவதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   Delete
 3. நானும் சின்ன வயசுல ஒய்ட்னர் யூஸ் பண்ணி இருக்கேன் ...இப்போ விட்டுட்டேன்
  இப்போ லாம் ஓயட்னர் போதை தேவை படுறது இல்ல .. ஒய்ட்டான பொண்ணுங்க போதை தான் தேவை படுத்து ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. @ஒயிட் லகான்,
   ஒரு ஒயிட்லயிருந்து இன்னொரு ஒயிட்டுக்கு வந்திருக்கீங்க.. பிரைட்டான வாழ்வுக்குத் மீண்டுவர வேண்டுகிறேன்.
   வரகைக்கு நன்றி!

   Delete
 4. nalla pakirvu nanba..
  tanks

  ReplyDelete