Tuesday, January 23, 2018

இறைவன் நாடினால்.. தொடர்கிறேன்!

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதுகிறேன். பிளாக்கர் அறிமுகமான புதிதில் நோக்கியாவின் சாதாரண அலைப்பேசியை பயன்படுத்தி பதிவிட்ட அந்த ஆர்வமெல்லாம் எப்படி இன்று புதையுண்டு போனது? தற்செயலாக இன்று பழைய பதிவுகள் கண்ணில் படவும் இப்படி சிந்தனை! பேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் நம் பெரும்பாலான பொழுதுகளை அபகரித்து சோம்பேறியாக்கி விட்டிருந்ததை உணர முடிகிறது. இறைவன் நாடினால் இங்கே அவ்வப்போது எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன். தொடரலாம்...

Wednesday, May 23, 2012

குடி முழுகிப் போச்சி!

அக்கம் பக்கம் வாங்கியத தீர்க்கல
அடகுக் கடையில் வச்சதயும் திருப்பல

சொத்து பத்து இருந்ததெல்லாம் இப்பயில்ல
சொந்தங்கொள்ள காணி நிலங்கூட இல்ல

சொந்தபந்தம் இருக்குறாங்க தூரத்தில
சொல்லிக்கொள்ள பக்கத்தில யாருமில்ல

அஞ்சு பத்து வச்சிருந்த காசையும்
அடிச்சு வாங்கி புடுங்கி போன புருஷனோ


எக்கச்சக்கம் குடிச்சதால போதையில
எழுந்திருக்க முடியாம வீதியில

கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த உசுரு கூட
குடி கொள்ள முடியாம முடிஞ்சு போக

அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி
அழுதழுது வாங்கி வந்த பணத்துல

மிச்சமீதி சடங்குக்கொண்ணும் குறையில்ல
மிஞ்சியிருந்த அரிசி கூட புருசன் வாயில.!

Friday, May 18, 2012

கலைந்த மேகம்!

விழி குளிரும்
வெய்யில் ஒளிந்த
குற்றாலம்

விட்டு விட்டு
சாமரம் வீசும்
சாரல் காற்று

காற்றில்..
தவழ்ந்து தவழ்ந்து
மலையைத் தழுவும்
முகில்கள்

முகில்களை..
தாங்கித் தாங்கி
தரையிறக்கும் மலை

மலையில்..
விழுந்து விழுந்து
சிரிக்கும் அருவி

அருவியை..
குனிந்து குனிந்து
வரவேற்கும் தலை

Saturday, May 12, 2012

படாத பாடுபடும் தொழிலாளர்களும் பாட்டு பாடும் அமைச்சரும்.!

அண்மைக் காலமாக தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடிக்கும் கூத்துகள் நாம் அறிந்ததே. முன்னோடியாக நி(து)தி அமைச்சர் ஓ.பி. 'எங்களுக்கென்று சுயமாக சிந்தனை கிடையாது அம்மாவின் சிந்தனையே எங்கள் சிந்தனை' என்றெல்லாம் கூ(வி)றி அசத்தினார். பின்னர் கால்நடை துறை அமைச்சர் இன்னும் கீழிறங்கி யோசித்து 'கால்நடைகள் அம்மா அம்மா என்றே சொல்லும். அம்மாவைத் தவிர வேறொன்றும் தெரியாது அவைகளுக்கு. அத்துறையின் அமைச்சராகிய எனக்கும் அம்மாவைத் தவிர வேறொன்றும் தெரியாது' என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.

இந்த வரிசையில் நேற்று தொழிலாளர் நல வாரிய அமைச்சர் செல்லப் பாண்டியன் அம்மாவை மகிழ்விக்க எம்ஜியார் பாடல்களாகப் பாடி அமர்க்களப் படுத்தினார். தமிழகத்தில் பாடுபடும் தொழிலாள வர்க்கத்தினர் படும் பெரும்பாடு என்னவென்று உண்மையிலேயே அமைச்சர் அறிந்திருந்தால் இப்படி பாடியிருக்க மாட்டார்.
சாதாரண தொழிற்சாலையை விடுங்கள். நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று இவர்கள் அடிக்கடி பீற்றிக் கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்களில் இன்றைய தொழிலாளர்களின் நிலைமை என்ன?

இத்தனை ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு இத்தனையாயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு என்று வக்கனையாக பேட்டி கொடுத்து திறந்து வைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களில் நிரந்தரப் பணியாளர்கள் மட்டும் எத்தனை பேர் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

அப்ரண்டிஸ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு ஆயிரக் கணக்கானோரின் உழைப்பு சுரண்டப்படுவது, ராகம்போட்டு கூவும் இந்த அமைச்சருக்குத் தெரியுமா?

கசக்கிப் பிழியப்படும் அந்த தொழிலாளர்களுக்கு கட்டிட வேலை பார்க்கும் சித்தாளுக்கு கிடைக்கும் ஊதியத்தை விட குறைவான ஊதியம் வழங்கப்படுவதும் அவர்களுக்கு சரியான உணவு கொடுக்கப்படுவதில்லை என்பதும் பணி நேரத்தில் நடக்கும் விபத்துகளுக்கு மருத்துவ வசதி கூட மறுக்கப்படுவதும் இந்த பாட்டுப் பாடி அமைச்சருக்குத் தெரியுமா?

நான்கு ஆண்டுகள் ஐந்து ஆண்டுகள் என தங்கள் ஆயுள் தேய உழைத்து, பணி நிரந்தரம் செய்வார்கள் என்று ஆசையோடு எதிர்பார்த்து கடைசி நாளில் 'நீ வேலைக்கு லாயக்கில்லை' என்று ஈவு இரக்கமின்றி பன்னாட்டு நிறுவனங்களால் விரட்டப்படும் தொழிலாளர்களின் கண்ணீர் கதையெல்லாம் இந்த 'சிங்கி' அமைச்சருக்குத் தெரியுமா?

என்றோ கிடைத்ததாக மேதினங்களில் நினைவு கூறப்படும் எட்டு மணி நேர வேலை என்ற உரிமை கூட பலருக்கு எட்டாக் கனியாக இருப்பதும் கால்கடுக்க நிற்கும் செக்யுரிட்டிகள் 12 மணி நேரம் வேலை வாங்கப்படும் கொடுமை இன்னமும் இங்கே நடந்து கொண்டிருப்பதும் சில மணி நேரம் நின்று புகழ்பாடும் அமைச்சருக்குத் தெரியுமா?

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் காப்பதற்காக சட்டப்படி தொழிற்சங்கம் அமைத்தால் எவ்வளவு கீழ்த்தரமான பழிவாங்கல்களை இந்நிறுவனங்கள் அரங்கேற்றுகின்றன?

தமிழகத்தில் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் தொடங்கிய தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்த பன்னாட்டு நிறுவனம் ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா?


தொழிற்சங்க அங்கீகார சட்டம் குறித்து எதிர்கட்சி உறுப்பினர் கேட்டதற்கு அமைச்சரி ன் பதில் என்ன தெரியுமா?
"1926ம் ஆண்டு தொழிற்சங்க உரிமைச் சட்டத்தில் அங்கீகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உறுப்பினர் கூறும் திருத்தத்தை அரசு ஆய்வு செய்யும்."

1926ம் ஆண்டு தொழிற்சங்க உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் அதில் தொழிற்சங்கத்தை அங்கீரித்தேயாக வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற ஓட்டை இருப்பதும் சாதாரண தொழிலாளிக்கும் தெரியும் உண்மை. முதல்வர் ஜெ. பாணியில் சொல்வதானால் இது போன்ற பாலபாடமெல்லாம் நீங்கள் நடத்த வேண்டாம். திராணி இருந்தால் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருப்பது போல தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் இந்த ஆட்சியில் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியுமா மாண்புமிகு அமைச்சர் செல்லப் பாண்டியன் அவர்களே? முடியாது ஏனென்றால் நீங்கள் சுவிட்ச் போட்டால் பாட்டு பாடும் ஒலிப்பெருக்கி அவ்வளவுதான் இல்லையா?

பன்னாட்டு நிறுவன தொழிலாளர்களுக்கே இந்த கதியென்றால் சாதாரணப் பட்டறைகளில் நிலைமை எப்படியென்று சொல்ல வேண்டியதில்லை. இப்படி தொழிலாளர்கள் படாத பாடுபட்டுக் கொண்டிருக்க தொழிலாளர் நல அமைச்சர் நீங்களோ சட்டமன்றத்தை பாட்டு மன்றமாக்கி பாடக் கூடாத பாட்டையெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

மாண்புமிகு அமைச்சர் செல்லப் பாண்டியன் அவர்களே நீங்கள் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டால் புரட்சித் தலைவரின் படகோட்டி படத்தில் 'தரைமேல் பிறக்க வைத்தான்' என்ற பாடலுக்கு முன் தொடங்கும் பின்வரும் நான்கு வரிகளை எட்டுக் கட்டையில் உறக்கப் பாடுங்கள். அதுதான் மிக பொருத்தமாக இருக்கும்.

உலகத்தின் தூக்கம் கலையாதோ?
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?


ஒரு நாள் பொழுதும் புலராதோ?

Friday, May 4, 2012

இந்த காலத்திலுமா இப்படி?

மாவோயிஸ்ட்களிடமிருந்து அலெக்ஸ் மீட்கப்பட்டது, நித்தியானந்தா சர்ச்சை, சட்டமன்றத்தில் தேமுதிக-அதிமுகவினரின் களேகபரம் போன்ற செய்திகளின் ஆக்கிரமிப்புகளுக்கிடையில் இந்த செய்தியை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்வியறிவில் கரை கண்டுகொண்டிருக்கும் இக்காலத்திலும் இது போன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.
அந்த செய்தி இதுதான்:

கோவையை அடுத்த வீரகேரளம் அருகேயுள்ள நாகராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜ்குமார் (வயது 25). கட்டிட தொழிலாளியான இவர் சுண்டக்காமுத்தூருக்கு கட்டிட வேலைக்காக சென்றார். அங்குள்ள ஒரு மருத்துவமனையின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் இவர் கட்டிட வேலை செய்துகொண்டிருந்தார், மதியம் சாப்பாட்டு வேளையின் போது மருத்துவமனையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஒரு சாரைப்பாம்பும், நாகப்பாம்பும் ஆனந்தமாக பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்தது. இந்த காட்சியை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர். (நம்ம மக்களுக்கு சொல்லவா வேணும்? சுனாமி வருவதையே கிட்ட போய் வேடிக்கை பார்க்க ஆசைப்படுறவங்களாச்சே!)

அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆசாமி, 'இப்படி காமத்தில் மெய்மறந்து நடனமாடும் நல்லபாம்பிடம் வயிற்றில் ஒரு "முத்து" இருக்கும்' என்றொரு விஷக்கருத்தை கக்கியிருக்கிறார். இதை உண்மை என்று நம்பிய ராஜ்குமார் விஷப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார்.


ஓடிப்போய் பின்னிப் பிணைந்த இரண்டு பாம்பையும் வெறும் கையால் பிடித்து நாகப்பாம்பை விலக்கி தனியாக பிரித்துள்ளார்(அடப் பாவமே!!!). அப்போது, வெறி கொண்டிருந்த இரண்டு பாம்புகளுமே ராஜ்குமாரின் கையில் பல இடங்களில் வெறிதீர கடித்துள்ளது. வலி தாங்க முடியாத ராஜ்குமார் பாம்பை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் நடந்து வருவதற்குள் மயங்கி விழுந்துள்ளார். பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக 108க்கு போன் செய்ய, மருத்துமனை போகும் வழியிலேயே வாயில் நுரை தள்ளி இறந்துள்ளார்.

யாரோ சொன்ன முட்டாள்தனத்தை நம்பி முத்தெடுக்கச் சென்ற ராஜ்குமார், எந்த முத்துகளாலும் வைர வைடூரியங்களாலும் ஈடு செய்ய இயலாத விலைமதிப்பற்ற தன் உயிரையே இழந்துள்ளது பரிதாபம். அவருக்கு மனைவியும் 7 மாத பெண் குழந்தையும் இருக்கிறதென்பது இன்னும் பரிதாபம்.


கிராமப்புரங்களில் இது போன்ற இன்னும் பல கதைகளைக் கேட்கலாம். சின்ன வயதில் எங்க ஊரில் நானும் இது மாதிரி நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன்.

நாகப் பாம்புகளில் சிலவகை இருக்கிறதாம். அவை விஷத்தை வெளியேற்றாமல் நூறாண்டுகளுக்கும் மேல் உயிர் வாழுமாம். இவ்வாறு பல ஆண்டுகளாக சேர்ந்த விஷம் திடப் பொருளாகி ஒளிவீசும் தன்மையுடையதாக மாறி விடுமாம். இதற்குப் பெயர்தான் ராஜ ரத்தினம்/மாணிக்கம் என்பதாம்.

இப்படி வாய்க்குள் ரத்தினத்தைப் பொத்தி வைத்திருக்கும் கிழட்டு நாகராஜாவுக்கு கண் பார்வை மங்கி விடுமாம். அமாவாசை தினத்தன்று இருள் அதிகமிருக்குமென்தால் இரை தேடுவதற்கு வசதியாக வாயிலிருக்கும் முத்தைக் கக்குமாம். அதன் வெளிச்சம் ரொம்ப தூரத்துக்கு இருப்பதால் நம்ம நாகராஜா இரை தேடிக்கிட்டு இருப்பாராம். இந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்ம ஆள் கை நிறைய மாட்டு சாணத்தைக் கொண்டு போய் அந்த ரத்தினத்துக்கு மேல 'சொத்'துன்னு போட்டுட்டு வீட்டுக்கு வந்திடுவாராம். திடீர்னு பவர் கட் ஆனதும் நம்ம கிழட்டு நாகராஜா செய்வதறியாம தட்டுத் தடுமாறி எங்காவது முட்டி மோதி செத்துடுவார். அப்புறமென்ன நம்மாளு மறுநாள் போய் சாணத்தைக் கிளரி ரத்தினத்தை எடுத்து விற்று ஒரே நாளில் பணக்காரராகி விடுவார்.

ஊரிலுள்ள சில திடீர் பணக்காரர்களெல்லாம் இப்படி நாகரத்தினத்தால்தான் ஆனார்கள் என்று இந்தக் கதைக்கு வலு சேர்க்க சில ஆதாரங்களையும் காட்டுவார்கள். இந்த கதையை எல்லா ஊர்களிலும் நாம் கேள்விப்படலாம். ஆனால் நேரடியாகப் பார்த்தவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். தத்ரூபமாக சொல்லப்படும் இது போன்ற கதைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. விளைவு.. மேற்கண்ட செய்தியில் கண்ட விபரீதம்!

அதே போல இன்னொரு கதை, அதாவது நல்ல பாம்பை அடித்தால் கொன்று எரித்தோ அல்லது புதைத்தோ விட வேண்டும் கூட பாலையும் ஊற்றி. தப்பித் தவறி அடிபட்ட பாம்பு உயிரை விடாமல் தப்பிவிட்டால் அவ்வளவுதான் உங்கள் கதை. நீங்கள் அமெரிக்கா சென்று ஒளிந்து கொண்டாலும் பழி வாங்காமல் விடாதாம்.

எங்க ஊர் பக்கம் ஒரு விநோதமான கூத்து நடக்கும். பச்சை பாம்பை பிடித்து பெண்களை கையால் உருவச் செய்வார்கள். இப்படி உருவினால் அவங்களுக்கு சமையல் பிரமாதமா வருமாம்!


இப்படி பாம்பு பற்றிய கதைகள் ஏராளம். முடிந்தால் இது பற்றி பிறகு பார்க்கலாம்.