Thursday, April 26, 2012

நினைவில் நிறைந்த கிராமத்து வீடு

இது
என் மழலைப் பருவத்தை
வசந்தமாக்கிய மாளிகை

சுகங்களை மட்டுமே
மனத்தில் நிறுத்திய
என் பிறந்த வீடு

விழுவது விழாமல் இருக்கத்தான்
அழுவது அழாமலிருக்கத்தான் எனும்
ஆரம்பப் பாடம் கற்றுத் தந்த
குருகுலம்

நிறைந்த மனமே
நிம்மதியின் இருப்பிடமென
அனுபவித்துத் தெரிந்த
ஆலயம்

நான்
கைக்குழந்தையாய் இருக்கையில்
கைமாறியதாம் இது
எங்கள் வீடாக
அம்மாவின் அணிகலன்கள்
அதற்கு ஈடாக

ஒரு வீடாய்த் தெரியும்
இது பெரியத்தாவுடையதும்
சேர்த்த இரு வீடு
இடையில் இருக்கவில்லை
இடைவெளி

முன்னே
பாய் நெய்யத் தறி போடுமளவு
திண்ணை

பின்னே
அம்மியும் அங்கணமும்
ஒரு பக்கம்
விறகடுப்பும் பாத்திரத் திண்டும்
மறு பக்கம்
ஊதுகுழலோடு அம்மா
உட்கார
இடையில் கொஞ்சம்
இடமுங் கொண்ட
அடுப்படி

மத்தியில்
வரவேற்பு அறை
படுக்கையறை படிப்பறை
உணவறை ஓய்வறை
எல்லாமுமாய் ஓர் அறை

மேலே
இரவல் ஏணியில் ஏறி
குறுக்கு வளைத்து
நெல் காயப் போட
மச்சி

முன்னால்
வேம்பும் முருங்கையும் நிழலிடும்
வீட்டைக் காட்டிலும்
விசாலமான முற்றம்

இவை
மற்றவர்கள் சொல்லும்
இந்த வீட்டின்
அளவீடுகள்

இந்தத் திண்ணைதான்
எத்தனை எத்தனைக்
கதைகள் கேட்டுருக்கும்?

அடுத்த தெரு
தண்ணிச் சண்டையிலிருந்து
அமெரிக்காவுக்கு சதாம்
தண்ணி காட்டியது வரை
இங்கே வாய் பிளந்து
கேட்ட அரட்டகள்தான் எத்தனை

மூலையில் இருக்கும்
அந்த ஆட்டுக்கல்
ஆட்டுவதை விட அமர்வதற்கே
அதிகம் பயன்பட்டிருக்கும்

அதோ
அந்த வாசல் நிலை
குழந்தைகளை மட்டுமே
நிமிர்ந்து வர அனுமதிக்கும்
பெரியவர்களை குனியச் செய்யும்
மறந்து நிமிர்ந்தால்
மறக்காமல் குட்டு வைக்கும்

இந்தக் கதவு
திறந்திருந்த காலங்களே
அதிகம்

இதன் திறவுகோல்
திறப்பதை காட்டிலும்
தேங்காய் உடைப்பதற்கே
தேவைப்பட்டது அதிகமாக

இந்தக் கதவில் ஆடிய
ஊஞ்சலின் சுகத்தை
எந்த ராட்டினம் தந்திருக்கும்?


வெய்யிற் காலம் நோன்பிருந்து
வெருந்தரையில்
சுருண்டு கிடந்ததும் இங்கேதான்

மழைக் காலம்
வடியும் நீர் பிடித்து
குடிநீராக்கியதும் இங்கேதான்

சிம்னி வெளிச்சத்தில்
சிலேட்டில் கோணலாக
வீட்டுப்பாடம் எழுதியதும்
இங்கேதான்

பின்னே
மின் இணைப்பு பெற்று
குழல் விளக்கெரிய
பெத்தா மூக்கில் விரல் வைத்ததும்
இங்கேதான்

பழைய சோறும்
அமிர்தமாய் தெரிய
பசித்து உண்டதும்
இங்கேதான்

வடக்குத் தெரு வரை
வாசம் செல்லும்
தேங்காய் சோறும் கறியானமும்
சேர்ந்து ருசிக்க
பெருநாள் கிடைத்ததும்
இங்கேதான்

பண்டம் கிடைத்தால்
பாகம் பிரித்து
பகிர்ந்து உண்டதும்
இங்கேதான்

சண்டை போட்டு
காலையில் பிரிந்து
மாலையில் சேரும்
உறவுகள் பெற்றதும்
இங்கேதான்

முன்னிரவு முற்றத்தில் பாய்விரித்து
அக்கா சொல்லும்
குருவிக் கதை கேட்டு
பாதியில் தூங்கியதும்
இங்கேதான்

அதிகாலையில் தொழ
அலாரம் இன்றி
அம்மா விழித்து
எழுப்பி விட்டதும்
இங்கேதான்


ஏழாம் வகுப்பில்
ஊரைப் பிரிந்து சென்றபோது
பிரிவின் வலியை
முதலில் உணர்த்தியதும்
இந்த வீடுதான்

எந்திரலோகச் சென்னையில்
வாடகைக் கொள்ளையரிடம் சிக்கி
வசவு கேட்ட போதெல்லாம்
திரும்பிடலாமா ஊருக்கு என
நினைக்க வைத்ததும்
இதே வீடுதான்

பின்னாளில்
பளிங்குத் தரையும்
குளிரும் அறையுமாக
சொந்த வீடு கட்டியும்
மீட்க முடியாத
அமைதியைத் தந்ததும்
இந்த வீடு மட்டுமேதான்


மழைக் காலம்
வரும் போதெல்லாம்
ஞாபகப்படுத்தும் இந்த
மண் மாளிகை
காலாவதியைக் கடந்து விட்டதை

இனி செப்பனிட ஏதுமில்லை
தானாய் விழும் முன்
நாமாய் இடிப்பது நல்லதென
கொத்தனார் நாள் குறிக்க

மனதைக் கல்லினும் கல்லாக்கி
இந்த மண் மாளிகையை
மண்ணோடு மண்ணாக்கிய போது
கண்களில் பொங்கிய நீருக்கு
கரையிட முடியவில்லை!

இடிபடும் முன்னால் இல்லை
விடைபெறும் முன்னால்
நோக்கியாவின் தயவில்
முதலும் கடைசியுமாய்
எடுத்த படங்கள் மட்டுமே மிச்சமாய்

இறைவன் நாடினால்...
நாளை நானிருந்தால்..
வேண்டா வெறுப்பாய் கேட்டாலும்
என் விழுதுகளுக்கு
விளக்கிச் சொல்வேன்
என் வேர்கள்
இந்த மண்ணிலிருந்துதான்
புறப்பட்டனவென்று.!

30 comments:

  1. திரு தமிழ் மீரான் அவர்களது அழகு கவிதை அவர் சின்ன வயதில் இருந்த கிராமத்து வீட்டைப் பற்றி - ஆஹா அழகு கவிதை - படித்துப் பாருங்கள் என்ன ஆதங்கம். வாழ்த்துகள் தமிழ் மீரான்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நிறைய எழுதுங்கள். நன்கு எழுதுங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மேலான ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  2. உங்கள் கவிதை அருமை. வேர்களை நினைவில் மட்டுமே வைத்து கொள்ள முடிந்த அனைவருக்கும் நீர் பாய்ச்சும் இந்த கவிதை.

    குமரன்

    ReplyDelete
  3. நன்றி குமரன், உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும்

    ReplyDelete
  4. super
    by
    R.vadivel

    ReplyDelete
  5. I can't expect this, ur lyrics give live, no words to say ur poem,
    masha allah.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Rahman fayed,
      பிளடக்கர் ஐடிலாம் வச்சிருக்கீங்களா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே! நன்றி கருத்துக்கு

      Delete
  6. அழகான கவிதை ...........
    அடியேனின் கவிதைகளையும் தாங்கள் படிக்கலாமே ...உங்களை என் நண்பரகாகவும் அழைக்கிறேன் ..
    http://nadikavithai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. நாடி வந்தமைக்கும் நல்ல கருத்துக்கும் நன்றி நாராயணன் அவர்களே! உங்க பிளாக் பார்த்தேன். நல்லாயிருக்கு நண்பராகிட்டேன். இங்கயும் இடம் காலியாத்தான் கெடக்குது சேர்ந்துக்கோங்க!

      Delete
  7. பிறந்த வீட்டின் நினைவுகளை இன்ஞ் பை இஞ்ச் ஆக கவிதை வரிகளில் எழுது நெகிழ்வைத்துவீட்டிர்கள்.கவிதையைப்போலவே உங்கள் வீடும் அழகுதான்.

    ReplyDelete
    Replies
    1. அழைப்பேற்று வந்ததற்கு நன்றி ஸாதிக்கா அக்கா!

      Delete
  8. நீண்ட கவிதை.. நல்லாவே இருந்திச்சு..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் Riyas

      Delete
  9. Excellent one. It took my memories to my village, eventhough the house lived was much bigger. But as you mentioned, that was the happiest days in my life (will I ever get those days), eventhough I live in US now, will move back to India soon. (my family recenlty moved). Hope to visit my native place with my kids and wife this year. Once again, thanks for bringing the sweet memories and very good one. Keep it up.
    Regards,
    Sundar.

    ReplyDelete
    Replies
    1. US சென்ற பிறகும் உங்கள் சொந்த மண்ணை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது திரு.சுந்தர் அவர்களே. மனம் திறந்து உங்கள் கருத்துகளை சொன்னதற்கும் பாராட்டியமைக்கும் நன்றி!

      Delete
  10. கிராமத்து வீடு, நினைவுகள் அதை சொன்ன விதம்......அழகு

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனசாட்சி உங்கள் கருத்துக்கு

      Delete
  11. பிறந்து வளர்ந்த வீட்டினை அழகாக கவிதையாக்கியது சூப்பர். அந்த வீட்டில் வாழ்ந்தது போன்ற உணர்வு. இந்த வீட்டை பார்த்ததும் எங்க பூர்வீக பழைய வீட்டில் வாழ்ந்ததெல்லாம் பசுமையாய் இங்கே.. நல்லா எழுதியிருக்கீங்க மீரான். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஷேக் அண்ணே..
      இந்த அனுபவங்கள் உங்களையும் கவரும்னு எனக்கு நல்லாவே தெரியும். நன்றியண்ணே உங்கள் வாழ்த்துகளுக்கு!

      Delete
  12. அருமையாருக்குங்க. இதேபோல சூழலில் உள்ள வீட்டில்தான் நானும் வளர்ந்தேன் என்பதால், வாசித்ததும் ஒரு நெகிழ்ச்சி.

    //இதன் திறவுகோல்
    திறப்பதை காட்டிலும்
    தேங்காய் உடைப்பதற்கே //

    ஆமாங்க, அந்தச் சாவி சைஸும், கனமும்... ஹூம்... அதெல்லாம் ஒரு கனாக் காலம்!!

    ReplyDelete
    Replies
    1. // ஹூம்... அதெல்லாம் ஒரு கனாக் காலம்!! //
      உண்மைதான் ஹுஸைனம்மா..!
      தங்கள் வருகைக்கும் மனந்திறந்த பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி.!

      Delete
  13. கவிதை மிகவும் அருமை!தேவையானவையே அனேத்தும் சின்ன வேண்டுகோள்! தவறெனில் மன்னிக்க! எப்போதும் கவிதைக்கு, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் அழகு என்பதே! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. //சின்ன வேண்டுகோள்! தவறெனில் மன்னிக்க!//

      வேண்டுகோள் எதற்கு ஐயா? உங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் கண்டிப்போடு கூட நீங்கள் ஆலோசனை சொல்லலாம்!
      நன்றி ஐயா, தங்கள் மேலான ஆலோசனைக்கும் வாழ்த்துக்கும்!

      Delete
  14. வீட்டை அணு அணு வாக ரசித்து எழுதி உள்ளீர்கள் அருமை .கவிதை நீளம் எனினும் உங்கள் ரசனை அதை விட நீளம் அல்லவா

    ReplyDelete
    Replies
    1. //கவிதை நீளம் எனினும் உங்கள் ரசனை அதை விட நீளம் அல்லவா//

      ஆமாம் நண்பர் பிரேம்..
      எண்ணத்தில் நிறைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் நினைவுகளில் எழுதியவை கொஞ்சம்தான்.உங்கள் மேலான பின்னூக்கத்திற்கு நன்றி!

      Delete
  15. நல்ல கவிதை ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன் அவர்களே!

      Delete
  16. மிக மிக அழகாக தாய்வீட்டின் அழகை சொல்லிப்போகும் கவிதை மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது . தங்களுக்கு நேரம் இருப்பின் நானும் எனது ஊரைப் பற்றி பதிவிட்டேன் பார்த்துச் சொல்லவும் .
    http://veesuthendral.blogspot.com/2012/02/blog-post_10.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி! தங்கள் மேலான ஆதரவுக்கும் கருத்துக்கும்!
      தங்கள் பதிவின் மூலம் உங்கள் அழகிய கிராமத்தைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி

      Delete
  17. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete