Sunday, July 25, 2010

முகமூடிகள்

உனக்கு
மேடை கட்டுவதாக சொல்பவன் உண்மையில் பாடை கட்டிக் கொண்டிருக்கலாம்

எதிரிகள் எங்கும்
இருக்கலாம்
எச்சரிக்கை..

புகழ் பாடுபவனைக் கவனி
பின்னால்
புறம் பேசக்கூடும்

உன் படகில்
துடுப்புகளைத் தொடும் முன் துளைகளைத் துருவிப்பார்

புழுவா இல்லை
புழுவைப் போர்த்திய
தூண்டில் முள்ளா
புரிந்துகொள்

சில புன்னகைகள்
புதைகுழிகளை
ஒளித்து வைத்திருக்கலாம்

முகத்தில் வெகுளித்தனமும்
அகத்தில் சகுனித்தனமும்
கொண்டவர்கள் அதிகமுண்டு

எட்டப்பர்களும் யூதாஸ்களும்
எட்டி இருப்பதில்லை

தூரத்தில் இருக்கும்
எதிரியின் முகத்தை விட
அருகில் இருக்கும் முகமூடிகள்
ஆபத்தானவை!

Saturday, July 24, 2010

மலிவு விலையில் மடிகணினி

தி.மு.க.வின் அடுத்த தேர்தல் வாக்குறுதி 'அனைவருக்கும் இலவச மடிகணினி' என்பதாகக் கூட இருக்கலாம்! ரூ.1500க்கு லேப்டாப் விற்பனைக்கு வந்தால் இது சாத்தியம்தானே? ஆம், விரைவில் வருகிறது 1500ரூபாய்க்கு லேப்டாப்!

மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வெறும் ரூ.1500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை மத்திய  அரசுஅறிமுகம் செய்துள்ளது. அடுத்தாண்டுமுதல் இது விற்பனைக்கு வரும். புதுடெல்லியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த லேப்டாப்பை வடிவமைத்துள்ளது. இத்துறையின் அமைச்சர் கபில் சிபல்இதை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இது போன்ற மலிவு விலை லேப்டாப்பை வடிவமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது,தனியார் நிறுவனங்கள் யாரும் ஆர்வம்காட்டவில்லை. இப்போது அத்தனை பெரிய நிறுவனங்களும் மலிவு விலை லேப்டாப் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. பெரிய தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றை தயாரிக்கும்போது, விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த லேப்டாப்பில் டச் ஸ்கிரீன், கீபோர்டு, 2 ஜி.பி. ராம் மெமரி, வை&பி இணைப்பு வசதி, யூஎஸ்பி போர்ட் ஆகியவை இருக்கும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இவை விநியோகம் செய்யப்படும்என கபில் சிபல் தெரிவித்தார். ஆரம்பத்தில் ரூ.500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது ரூ.1500 ஆகிவிட்டது. இன்னும் படிப்படியாக விலை குறையவும் வாய்ப்புள்ளதாம்.

Friday, July 16, 2010

ரேஷன் கடையில் ஸ்டாக் உள்ளதா? sms அனுப்பினால் தெரிந்துவிடும்

விக்கிற விலைவாசியை சமாளிக்க ரேஷன் கடையில போயி கால் கடுக்க காத்துக்கிடந்து பொருட்கள் கேட்டா ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னு கைய விரிச்சா எப்படி இருக்கும் நமக்கு?

உண்மையிலேயே ரேஷன் கடையில் பொருட்கள் தீர்ந்துவிட்டதா இல்ல வச்சுக்கிட்டே வஞ்சகம் பண்றாங்களா? என்பதை அறிய இனி ஒரு sms அனுப்பினால் போதும் உண்மை நிலவரம் தெரிந்துவிடுமாம்.

முதலில் Pds  என டைப் செய்து இடைவெளி விட்டு, மாவட்டகுறியீட்டு எண்ணை டைப் செய்து இடைவெளி     விட்டு     உங்கள் பகுதி ரேஷன் கடை எண்ணை டைப் செய்து 9789006492மற்றும் 9789005450 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் உடனடியாகஇருப்பு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம்வந்து விடும்.

மாவட்ட குறியீட்டு எண், ரேஷன் கடை எண் ஆகியவை ரேஷன் கார்டிலேயே இருக்கிறது. கார்டில் மேல்பகுதியில் 11 இலக்கம் கொண்ட எண் உள்ளது. இதில் ஆங்கில எழுத்துக்கு முன்புள்ள 2 எண்கள் மாவட்ட குறியீட்டு எண். கடை எண் ரேஷன் கார்டின் கீழ்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், உப்பு, அரிசி, ரவை, கெரசின், மளிகை, பாமாயில்  ,   சர்க்கரை, உளுந்து, துவரம் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் ஸ்டாக் விவரங்களை அறியலாம்.மக்கள் இம்முறையை அதிகமாக பயன்படுத்தினால், முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப் படலாம்.

Wednesday, July 14, 2010

தமிழ்ப் பத்திரிக்கைகளையும் பாருங்கள் முதல்வர் அவர்களே!

மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளியாகும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' என்ற நாளிதழ் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றியும் அதற்காக தமிழக அரசு காட்டி வரும் அக்கறை பற்றியும் சிலாகித்து எழுதியுள்ளதாக மேற்கோள் காட்டியுள்ளார். டெட்ராய்டை போல சென்னை உள்ளது. பல சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களும்,விநியோக நிறுவனங்களும் அவர்களது தொழிற்சாலைகளை நிறுவியுள்ளதால் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த பெருநகரம் செழித்து வருகிறது. போர்டு, ஹூண்டாய், நிஸான், ரெனோ, டெய்ம்லர், பி.எம். டபிள்யூ ஆகிய அனைத்து நிறுவனங்களும்இங்கு சங்கமித்துள்ளன.

 உலகின் சிறிய கார்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மையமாக சென்னையை உருவாக்க பல நூறு கோடி டாலர்களைச் செலவழித்து வருகின்றனர். விரைவில் சென்னை ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும். இது கடந்த ஆண்டு எந்தஅமெரிக்க மாநிலமும் செய்த உற்பத்திஅளவை விட அதிகமாகும்.கார் உதிரி பாகங்களின் விநியோக  நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்து வருகின்றன.கார் தொழிலுக்கு தேவையான நிலம், சாலைகள், மின்சாரம்ஆகியவற்றை அளிப்பதில் இந்தியாவின் பல மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்கவும், அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யவும்  டஜன் கணக்கான அரசு அனுமதிகளை பெற ஒரே அலுவலகத்தையும் (ஒற்றை சாளர முறை) தமிழ்நாடு அமைத்துள்ளது.

இவ்வாறு அந்த இதழில் செய்தி வந்துள்ளதாகப் பெறுமையாக குறிப்பிடும் முதல்வர் அவர்கள் தமிழகத்தில் வெளிவரும் பத்திரிக்கைகளையும் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் நன்றாக இருக்கும்.

சான்றுக்கு ஆனந்த விகடனில் 'அரசு உஷார்!' என்ற தலைப்பில் வெளியான தலையங்கம் இதோ,

'அமைதிப் பூங்கா' என்றும், 'தொழிலாளர் உறவில் தனிச் சிறப்பு பெற்ற மாநிலம்' என்றும் தமிழகம் சம்பாதித்த நற்பெயர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றன.

சில காலம் முன்புதான் கோவை தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களே அதிகாரியை அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அரங்கேறியது. சென்னையை அடுத்திருக்கும் கார் தொழிற்சாலையின் உள்ளே போலீஸார் புகுந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அளவுக்கு வேலை நிறுத்தம்.

உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் கோவை பக்கம் திருப்பி, செம்மொழி மாநாடு கொண்டாடுவதில் திறமை காட்டிய அரசு இது. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் விழா முதல் பல்கலைக்கழகப் பட்டமளிபபு விழா வரையில் ஆள்வோர் கலந்துகொண்டால், பிரமாண்டமான கூட்டம் கூட்டுவதிலும் வல்லமை கொண்ட அரசு இது.

திரைத் துறை விழாக்கள் சீரும் சிறப்புமாக நடப்பதற்காக எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் செலவிட முதல்வரே துடிப்புடன் தயாராக இருக்கும் அரசு இது. மத்திய அரசில் கூட்டணியாக இருந்துகொண்டு தாங்கள் இஷ்டப்பட்டதையெல்லாம் சாதிக்கும் சாமர்த்தியம் கொண்ட அரசு இது.

மேற்சொன்ன அவலங்களுக்கு முடிவுகட்டவும், கொஞ்சம் நேரத்தையும் சாதுர்யத்தையும் பயன்படுத்தினால்தான் என்ன?
நன்றி: ஆனந்த விகடன்14.7.10

கூடுதராக இன்னொரு தகவல்:
சென்னையை அடுத்துள்ள நோக்கியா நிறுவனத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று(13.7.10) முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பன்னாட்டு நிறுவங்களுக்கும் முதலாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் தமிழகத்தில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா அரசு?