Sunday, June 20, 2010

குடைக்குள் மழை.!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பார்த்திபன் நடித்த பழைய திரைப்படம் பற்றிய பதிவு என்று நினைத்து விட வேண்டாம். 'குடைக்குள் மழை' என்பது ஓர் அழகிய கவிதைக் குறியீடு. இது போன்ற கவிதைக்குள் அர்த்தங்கள் நிறைய புதைந்து கிடக்கும். வாசிப்போரின் சிந்தனை, அனுபவம் மற்றும் கற்பனைக்கேற்ப அவை விரிந்து கொண்டே செல்லும்.

சமீபத்தில் நண்பர்களோடு பொழுது போக்கிக் கொண்டிருந்த வேளை தற்செயலாக இந்த தலைப்பு ஞாபகத்திற்கு வர, 'குடைக்குள் மழை என்றவுடன் உங்கள் சிந்தனையில் என்ன தோன்றுகிறது?' என நண்பர்களிடம் கேட்டேன். அதற்கு ஒவ்வொருவரும் சொன்ன பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

முதலில் காதலில் இருந்து ஆரம்பித்தார் செல்வராஜ்.
'காதலன் காதலி ஒரே குடைக்குள். உள்ளே காதல் மழை!'
சொல்லி விட்டு குடை என்பது துப்பட்டாவாகவும் இருக்கலாம் என்றார்.

செல்வ ஸ்டீபன் சொன்ன கற்பனை அற்புதம்
'இமைகள் என்னும் குடைக்குள் கண்ணீர் மழை'

செந்தில் முருகன் வேடிக்கையாக சொன்னாலும் அர்த்தம் நிறைந்ததாகத் தோன்றியது எனக்கு
'குடையில் நிறைய ஓட்டைகள் அதனால் குடைக்குள் மழை'
குடை என்பதற்கு அரசாட்சி என்ற பொருளும் உண்டு அதிலிருக்கும் ஓட்டைகளால்தானே ஏழை மக்கள் கண்ணீர் மழை வடிக்கிறாரகள்!

சுரேஷ் சொன்னது இன்னும் வேடிக்கையானது. அதாவது,
'காற்றின் வேகத்தில் குடை மேல் நோக்கித் தூக்கப்பட்டு குடை கூடை போலாகியது. அதுதான் குடைக்குள் மழை'
ஆம்.. குடை போல நாம் சிலதை/சிலரை நம்புகிறோம். ஆனால் அவை/அவர்கள் கூடை போலாகி நம்மைக் கவிழ்த்து விடுகின்றன/ர்.

மார்டின் கற்பனை கொஞ்சம் வித்தியாசமானது
'மழை பெய்தவுடன் முளைக்குமே காளான்குடை. அதற்குள் மழைநீர் தானே இருக்கிறது அதுதான் குடைக்குள் மழை' அட.. என்னே ஒரு சிந்தனை! கண்டிப்பா மார்டினைத் தவிற வேறு யாரும் இப்படியெல்லாம் சிந்திக்க முடியாது.

நானும் ரொம்ப யோசிச்சு பார்த்து கடைசியா சொன்னேன்
'வானம் என்பதே ஒரு பிரம்மாண்டமான குடை அதற்குள்ளேதானே மழை பெய்கிறது'

என்ன நண்பர்களே ரொம்ப நனைஞ்சிட்டீங்களா? உங்களுக்கும் ஏதாவது தோணுமே! எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை!

4 comments:

  1. அன்பின் தமிழ் மீரான் - குடைக்குள் மழை - அருமையான பதிவு - பலர் கூறியதையும் எடுத்து இங்கு தந்தது நன்று - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ரசிக்கவைத்த ம்ழை ..!

    வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. ''..நண்பர்களே ரொம்ப நனைஞ்சிட்டீங்களா?..'''
    Aamma...nalla நனைஞ்சிட்டேன்.....
    congratz.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  4. Superb ! அழகான கற்பனைகள் ! வானமே குடை !!! :) செம !!

    ReplyDelete