Saturday, January 30, 2010

நிலநடுக்கம் எப்படி உண்டாகிறது?

பலகோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து ஒரு நெருப்புக் கோளமாக பிரிந்து வந்த பூமியின் மேற்பரப்பு பருவ மாற்றங்களால் இறுகியது. எனினும் பூமியின் மையப்பகுதி இன்னும் நெருப்புக்குழம்பாகவே உள்ளது. மேற்பரப்பு ஒரு தேங்காயைப் போல ஒரே பரப்பாக இல்லாமல் பல தட்டுக்களாக காணப்படுகின்றன. பூமியின் சுழற்சி வேகத்தில் உள்ளிருக்கும் குழம்பு நகர்வதால் தட்டுக்களும் நகர்கின்றன.இந்த தட்டுக்கள் வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் 13 வரை நகர்கிறது. இது மிகச்சிறிய அளவாக இருந்தாலும் இந்த தட்டுக்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தும்.

மேலேயுள்ள படத்தில் இந்தோனேசியா, அந்தமான், பங்களாதேசம், இந்தியா இவையனைத்தும் ஒரே தட்டில் இருப்பதைக் காணலாம். இந்த தட்டின் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நினைவிருக்கலாம். அதே போல இரு அமெரிக்க கண்டங்களுக்கும் இடையில் சிறியதாக கரிபியன் தட்டு இருப்பதைக் காணலாம். இத்தட்டோடு வட அமெரிக்க பகுதி தட்டு உரசியதால் ஏற்பட்டதே அண்மையில் ஹைதியில் பெறும் சேதம் உண்டாக்கிய பூகம்பமாகும்.

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் சேர்ந்திருந்த பகுதிகள் பிரிந்ததற்கும் பிரிந்திருந்த பகுதிகள் சேர்ந்ததற்கும் இந்த நகரும் தட்டுக்களே காரணமாகும். இன்னொரு செய்தி, இமயமலை ஒரு காலத்தில் கடலாக இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கும் இந்த நகரும் தட்டுக்களே காரணம் என கருதப்படுகிறது. அதாவது இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசியப் பிளேட்டை விட இந்திய பிளேட் வேகமாக நகர்கிறது என்றும் அதனால் உண்டான அழுத்தத்தில் எழுந்ததே இமயமலை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
--------------------------------------------------------------
Ovi Mail: Easy setup in minutes
http://mail.ovi.com

Thursday, January 28, 2010

ஹைதி நிலநடுக்கம்

13.01.2010 அன்றைய தினம் அவ்வளவு சோகமயமாகும் என்று ஹைதி(Haiti) நாட்டு மக்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். தங்கள் நாட்டு ஜனத்தொகையில் 2% மக்களை ஒரே நாளில் பூகம்பத்திற்கு இரையாக்கியது பரிதாபம்! ஏறத்தாழ 2லட்சம் பேர்களை பலி கொண்ட இது உலகில் நடந்த மிகப்பெறும் பூகம்பங்களில் ஒன்றாகும். பூகம்பத்திற்கு முன்பு ஹைதி என்றொரு நாடு இருப்பதே நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அமெரிக்கா பகுதியில் உள்ள இந்நாடு 27750ச.கீ பரப்பளவு (தமிழ்நாட்டில் 6ல் ஒரு பங்கு) கொண்ட குட்டி நாடாகும். 2008ம் ஆண்டு பக்கத்து நாடான டொமினிக் குடியரசில் நடந்த விஞ்ஞானிகள் கருத்தரங்கில் விரைவில் இப்பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுமென கணிக்கப்பட்டது. பூகம்பத்தை பொருத்தவரை எந்த பகுதியில் வரும் என்பதை மட்டுமே கணிக்க முடியும். எந்த நேரத்தில் வரும் என்பதை துல்லியமாக கணிக்க இயலாது. இதற்கு முன்பும் ஹைதி மற்றும் அண்டை நாடுகளில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் உலகில் நடந்த பெரிய பூகம்பங்களும் பலியானோர் ண்ணிக்கையும்:
1. 1556-சீனாவிலுள்ள Shaanxi, 830,000 பேர்

2. 526 துருக்கியின் Antioch, 250,000 பேர்

3. 1976 சீனாவின் Tangshan, 242,000

4. 1920 சீனாவின் Haiyuan, 240,000

5. 1138 சிரியாவிலுள்ள Aleppo, 230,000

6. 2004ல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் 230,000பேர்.

இந்த வரிசையில் ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏழாம் இடத்தில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Friday, January 22, 2010

ஹைக்கூ

. **ஹைக்கூ**

விடிந்த பிறகும்
மறையாத விண்மீன்கள்
குடிசையின் விரிசல்கள்

. -மீரான்

Thursday, January 21, 2010

முகமூடிகள்

எதிரிகள் எங்கும்
இருக்கலாம்
எச்சரிக்கை..

புகழ் பாடுபவனைக் கவனி
பின்னால்
புறம் பேசக்கூடும்

உனக்கு
மேடை கட்டுவதாக சொல்பவன்
உண்மையில்
பாடை கட்டிக் கொண்டிருக்கலாம்

உன் படகில்
துடுப்புகளைத் தொடும் முன்
துளைகளைத் துருவிப்பார்

புழுவா இல்லை
புழுவைப் போர்த்திய
தூண்டில் முள்ளா
புரிந்துகொள்

சில புன்னகைகள்
புதைகுழிகளை
ஒளித்து வைத்திருக்கலாம்

முகத்தில் வெகுளித்தனமும்
அகத்தில் சகுனித்தனமும்
கொண்டவர்கள் அதிகமுண்டு

எட்டப்பர்களும் யூதாஸ்களும்
எட்டி இருப்பதில்லை
கிட்டேயே இருப்பார்கள்

தூரத்தில் இருக்கும்
எதிரியின் முகத்தை விட
அருகில் இருக்கும் முகமூடிகள்
ஆபத்தானவை.

Wednesday, January 20, 2010

Welcome Friends

தெரிந்தோ அல்லது தெரியாமலோ இந்த வலைக்குள் சிக்கியிருக்கும் அனைத்து நண்பர்களையும் வரவேற்கிறேன்!

எனது புதிய இந்த வலைப்பதிவில் என்னுடைய மற்றும் என் நண்பர்களுடைய படைப்புக்களை பதிவு செய்ய இருக்கிறேன். உங்கள் எண்ணங்களையும் விமர்சனங்களையும் எழுத்துக்களாக்கி கருத்துகள் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
. -நட்புடன் மீரான்

Tuesday, January 19, 2010

"குடி முழுகிப்போச்சு" -கவிதை

**குடி முழுகிப்போச்சு**

அக்கம் பக்கம்
வாங்கியத தீர்க்கல
அடகுக் கடையில்
வச்சதயும் திருப்பல

சொத்து பத்து
இருந்ததெல்லாம் இப்பயில்ல
சொந்தங்கொள்ள காணி
நிலங்கூட இல்ல

சொந்தபந்தம்
இருக்குறாங்க தூரத்தில
சொல்லிக்கிட பக்கத்தில
யாருமில்ல

அஞ்சு பத்து வச்சிருந்த
காசையும்
அடிச்சு வாங்கி புடுங்கி
போன புருஷனோ

எக்கச்சக்கம் குடிச்சதால
போதையில
எழுந்திருக்க முடியாம
வீதியில

கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த
உசுரு கூட
குடி கொள்ள முடியாம
முடிஞ்சு போக

அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி
அழுதழுது வாங்கி வந்த
பணத்துல

மிச்சமீதி
சடங்குக்கொண்ணும் குறையில்ல
மிஞ்சியிருந்த அரிசி கூட
புருசன் வாயில.!

. -மீரான்-

"சிகரெட்" -கவிதை

*சிகரெட்*
இருவிரல் இணையும்
நுனிமட்டும் சிவக்கும்
இறுதியில் உன் வாழ்க்கை
ஒருபிடிச் சாம்பல்
ஓதாமல் ஊதும்-சங்கு
ஊதாமல் ஊதும்

புகைத்தல்
உனது புன்னகைக்கு
மட்டுமல்ல-பூக்களுக்கு
செய்யும் துரோகமும் கூட

ஒவ்வொரு இழுப்பின் முடிவிலும்
உனக்கு மட்டும் அல்ல
காற்றுக்கும் சேர்த்துதான்
கல்லறை
கட்டிக்கொண்டிருக்கிறாய்

காற்றால் நிரப்ப வேண்டிய
நுரையீரலுக்குள் ஏன்
கரையான் கூடு கட்டிக்
கொள்கிறாய்.

இயற்கையைப் பிடுங்கி
இயற்கையைக் கொன்று
இன்பம் காண்கிறாயா?

தன்னுயிர் நீக்க தனக்கு
உரிமை இல்லாதபோது
காற்றின் குரல்வளை
நெறிக்க
உனக்கேது உரிமை.

இனி..
புகைத்தலும் தேச துரோகமே!
சுயகொள்ளி போட்டுக்கொள்வதில்
இனியும் சுகப்படாதே..

அமுதுண்ட அதரங்களில்
அமில
உருளைகளை
அணியாதே!

புகைத்தலை மற
புன்னகை திற
கனவுகள் தெளிவாகட்டும்
கார்மேகம் உனக்காக
பொழியட்டும்.!

-மா.ஜெகதீஷ் எழுதிய "அமைதியை நாடி"புத்தகத்திலிருந்து..
--------------------------------------------------------------
Ovi Mail: Create an account directly from your phone
http://mail.ovi.com

Monday, January 18, 2010

Kavidhai

உன்
விழியசைவில் எல்லா மொழிகளும் தோற்கும்..!
உன்
இதழ் அசைவில் எம்மொழியும் செம்மொழியாகும்.!
--------------------------------------------------------------
Ovi Mail: Being used by users in 178 countries
http://mail.ovi.com