Monday, June 28, 2010

கடைசி வார்த்தைகள்!

பிரபலமானவர்கள் தங்கள் மரணத்தின் போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை..
இந்த வார ஆனந்த விகடனில் வெளியானவை இதோ உங்களுக்காக...

மகாத்மா காந்தி:
'ஹே ராம் !'

தாமஸ் ஆல்வா எடிசன்:
"விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும்!"

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்:
"இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது!"

பாபர் (மொகலாயப் பேரரசர்):
தன் மகன் ஹுமாயூனிடம்...
"இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!"

டயானா:
"கடவுளே! என்ன நடந்தது எனக்கு?"

மேரி க்யூரி:
"என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்!"

கிளியோபாட்ரா:
பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, "ஆஹா.. இதோ.. என் முடிவு இங்கே இருக்கிறது!"

ஆன் (இங்கிலாந்து ராணி):
தன் உதவியாளரிடம்,
"மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தைப் பயன்படுத்துங்கள்!"

நெப்போலியன்:
"பிரான்ஸ்.. ஆர்மி... ஜோஸ்பின்!"

வின்ஸ்டன் சர்ச்சில்:
"எனக்கு எல்லாமே போர் அடிக்குது!" இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று 9 நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார்.

ஜூலியஸ் சீஸர்:
"யூ டூ புரூட்டஸ்?"

பெருந்தலைவர் காமராஜர்:
தன் உதவியாளரிடம், "வைரவா விளக்கை அணைத்து விடு!"

என்ன நண்பர்களே உங்களுக்கும் ஏதாவது பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்!

Friday, June 25, 2010

குடி முழுகிப் போச்சு.!

அக்கம் பக்கம்
வாங்கியத தீர்க்கல
அடகுக் கடையில்
வச்சதயும் திருப்பல

சொத்து பத்து
இருந்ததெல்லாம் இப்பயில்ல
சொந்தங்கொள்ள காணி
நிலங்கூட இல்ல

சொந்தபந்தம்
இருக்குறாங்க தூரத்தில
சொல்லிக்கொள்ள பக்கத்தில
யாருமில்ல

அஞ்சு பத்து வச்சிருந்த
காசையும்
அடிச்சு வாங்கி புடுங்கி
போன புருஷனோ

எக்கச்சக்கம் குடிச்சதால
போதையில
எழுந்திருக்க முடியாம
வீதியில

கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த
உசுரு கூட
குடி கொள்ள முடியாம
முடிஞ்சு போக

அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி
அழுதழுது வாங்கி வந்த
பணத்துல

மிச்சமீதி
சடங்குக்கொண்ணும் குறையில்ல
மிஞ்சியிருந்த அரிசி கூட
புருசன் வாயில.!

Sunday, June 20, 2010

குடைக்குள் மழை.!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பார்த்திபன் நடித்த பழைய திரைப்படம் பற்றிய பதிவு என்று நினைத்து விட வேண்டாம். 'குடைக்குள் மழை' என்பது ஓர் அழகிய கவிதைக் குறியீடு. இது போன்ற கவிதைக்குள் அர்த்தங்கள் நிறைய புதைந்து கிடக்கும். வாசிப்போரின் சிந்தனை, அனுபவம் மற்றும் கற்பனைக்கேற்ப அவை விரிந்து கொண்டே செல்லும்.

சமீபத்தில் நண்பர்களோடு பொழுது போக்கிக் கொண்டிருந்த வேளை தற்செயலாக இந்த தலைப்பு ஞாபகத்திற்கு வர, 'குடைக்குள் மழை என்றவுடன் உங்கள் சிந்தனையில் என்ன தோன்றுகிறது?' என நண்பர்களிடம் கேட்டேன். அதற்கு ஒவ்வொருவரும் சொன்ன பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

முதலில் காதலில் இருந்து ஆரம்பித்தார் செல்வராஜ்.
'காதலன் காதலி ஒரே குடைக்குள். உள்ளே காதல் மழை!'
சொல்லி விட்டு குடை என்பது துப்பட்டாவாகவும் இருக்கலாம் என்றார்.

செல்வ ஸ்டீபன் சொன்ன கற்பனை அற்புதம்
'இமைகள் என்னும் குடைக்குள் கண்ணீர் மழை'

செந்தில் முருகன் வேடிக்கையாக சொன்னாலும் அர்த்தம் நிறைந்ததாகத் தோன்றியது எனக்கு
'குடையில் நிறைய ஓட்டைகள் அதனால் குடைக்குள் மழை'
குடை என்பதற்கு அரசாட்சி என்ற பொருளும் உண்டு அதிலிருக்கும் ஓட்டைகளால்தானே ஏழை மக்கள் கண்ணீர் மழை வடிக்கிறாரகள்!

சுரேஷ் சொன்னது இன்னும் வேடிக்கையானது. அதாவது,
'காற்றின் வேகத்தில் குடை மேல் நோக்கித் தூக்கப்பட்டு குடை கூடை போலாகியது. அதுதான் குடைக்குள் மழை'
ஆம்.. குடை போல நாம் சிலதை/சிலரை நம்புகிறோம். ஆனால் அவை/அவர்கள் கூடை போலாகி நம்மைக் கவிழ்த்து விடுகின்றன/ர்.

மார்டின் கற்பனை கொஞ்சம் வித்தியாசமானது
'மழை பெய்தவுடன் முளைக்குமே காளான்குடை. அதற்குள் மழைநீர் தானே இருக்கிறது அதுதான் குடைக்குள் மழை' அட.. என்னே ஒரு சிந்தனை! கண்டிப்பா மார்டினைத் தவிற வேறு யாரும் இப்படியெல்லாம் சிந்திக்க முடியாது.

நானும் ரொம்ப யோசிச்சு பார்த்து கடைசியா சொன்னேன்
'வானம் என்பதே ஒரு பிரம்மாண்டமான குடை அதற்குள்ளேதானே மழை பெய்கிறது'

என்ன நண்பர்களே ரொம்ப நனைஞ்சிட்டீங்களா? உங்களுக்கும் ஏதாவது தோணுமே! எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை!

Wednesday, June 16, 2010

மது நேசர்களே.. உங்கள் கல்லீரலைப் பாருங்கள்.!

அடிக்கடி மதுவோடு குடித்தனம் நடத்துபவரா நீங்கள்? கொஞ்சம் இருங்க. உங்கள் கல்லீரல் என்ன நிலைமையில் உள்ளது என்பதைப் பாருங்கள். பிறகு தொடர்ந்து குடிப்பதைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முதலில் கல்லீரலைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய உடலில் நீர்மம் சுரக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்.

நாம் சாப்பிடும் சைவ அசைவ போன்ற எந்த உணவையும் செரிக்க வைப்பதற்குத் தேவையான பித்த நீரை உருவாக்குவது கல்லீரலின் முக்கியப் பணியாகும். இது மட்டுமின்றி இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை சுத்தம் செய்வது, இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, புரதப் பொருட்களை உண்டாக்குவது, உணவிலுள்ள நச்சுப் பொருட்களை சீர் செய்வது போன்ற பணிகளையும் செய்கிறது. இதனால்தான் கல்லீரலை வேதி தொழிற்சாலை என்று கூறுவர்.

மதுவிலுள்ள ஆல்கஹாலை அகற்றுவதற்காக கல்லீரல் கடுமையாகப் போராடும். அடிக்கடி மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைகிறது.


மேலே உள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஆரோக்கியமான கல்லீரல் எப்படி அழகாக அல்வா துண்டு மாதிரி இருக்கிறது, ஆல்கஹாலில் ஊறி நாசமடைந்த கல்லீரல் பார்க்கவே விகாரமாக இருக்கிறதல்லவா?

கல்லீரலுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா? தன்னுடைய கெட்டுப் போன அல்லது சிதைந்த திசுக்களை தானே மீளுருவாக்கம் செய்து கொள்ளும் தன்மையுடையது. ஆகவே அளவு மீறி மது அருந்தும் நண்பர்களே இப்போதிருந்தே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டால் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கலாம். இல்லையென்றால் கல்லீரல் கெட்டு கல்லறை பக்கமாகி விடும்..!

Sunday, June 13, 2010

என்னைக் கவர்ந்த ஹைக்கூக்கள்

கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று ஹைக்கூ. எளிமையான வார்த்தைகள் மற்றும் ஆழமான அர்த்தங்களால் கவிதை மேல் நாட்டம் இல்லாதவர்களைக் கூட ஹைக்கூ கவிதைகள் வசீகரிக்கும். அந்த வகையில் நான் ரசித்த சில ஹைக்கூக்கள்

சமத்துவபுரம்
கழிவு நீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்

யெஸ். பாலபாரதி

இடுகாடு
நிற்கும் பிணம்
பட்ட மரம்

-திருக்குவளை அறிவழகன்

வயல்வெளிகளில்
நிறைய முளைக்கின்றன
கட்டிடங்கள்

-செல்வ ஸ்டீபன்

உதிர்ந்த சருகுகள்
மீண்டும் கிளையில்
குருவிக்கூடு

இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்

-கவிக்கோ அப்துல் ரகுமான்

நடு பகல்
சுடு மணல்
பாவம்.. என் சுவடுகள்

-அறிவுமதி

திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு

-குடந்தை அன்புமணி

விடிந்த பிறகும்
மறையாத விண்மீன்கள்
குடிசையின் விரிசல்கள்

-பாக்யாவில் பிரசுரமான என் முதல் கவிதை.

நன்றாக இருக்கிறதா?
உங்கள் கருத்துக்களையும் ஹைக்கூக்களையும் எழுதுங்கள் நண்பர்களே

Monday, June 7, 2010

ஹுண்டாய் கார் நிறுவனத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

இந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் சென்னை இருங்காட்டுக்கோட்டையிலுள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலைக்குள் மூன்றாவது முறையாக வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தென்கொரிய நிறுவனமான ஹுண்டாய் தொழிற்சாலையில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து மூன்றாண்டுகளுக்கு முன் தொழிற்சங்கம் அமைத்தனர். அன்றிலிருந்து ஹுண்டாய் நிர்வாகம் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 87 பேர் வேலை நீக்கம் மற்றும் பலர் இடைநீக்கம், இடமாற்றம் என்று பல வழிகளிலும் தொழிலாளர்களை வஞ்சித்த நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இறுதியாக வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20 அன்று முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். தொழிலாளர் நல வாரியத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல அதிகாரியின் அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டதால் 18 நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஹுண்டாய் நிர்வாகம் அரசு அதிகாரியின் அறிவுரையை மீறி தான் உருவாக்கிய பணியாளர் குழு என்ற பொம்மை அமைப்போடு சம்பள ஒப்பந்தம் போட்டது.

அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் இரண்டாவது முறையாக ஆலைக்குள்ளேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரியின் அறிவுரை ஏற்பதாகவும் பணி நீக்கம் செய்யப்பட்டோரில் 20 பேரை வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததன் பேரில் வேலை நிறுத்தம் 6 நாடகளில் முடிவுக்கு வந்தது. 20 பேரை கருணை அடிப்படையில் பணி எடுத்துக் கொண்டதாக கூறிய நிர்வாகம் இன்னும் அவர்களை நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளது. மேலும் வேதாளம் முருங்கை ஏறிய கதையாக, தொழிலாளர் நல வாரியத்தினரின் அறிவுரையை மீறி மீண்டும் பணியாளர் குழு என்ற பொம்மை அமைப்பை அமைக்கத் தேர்தல் நடத்த முயற்சி எடுத்தது.

கடும் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் மூன்றாம் கட்டமாக டிசம்பர் மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் விடுத்தனர். இந்த சமயம் கொரிய அதிபர் இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்பதாக இருந்ததால் ஹுண்டாய் நிர்வாகத்தினர் உடனடியாக வேலை நீக்கத்தில் மீதியுள்ள 67 பேர் தொடர்பாக தொழிலாளர் நல வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவதாக உறுதியளித்தது. அதன் பேரில் அரசு அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழு 67 பேரின் வழக்குகளை ஆய்வு செய்து முதற்கட்டமாக 35 பேரை மீண்டும் பணியில் அமர்த்த அறிவுருத்தியது.

தென் கொரிய அதிபரின் இந்திய வருகை நல்லபடியாக முடிந்து திரும்பிய பிறகு மீண்டும் தன் வேலையைக் காட்டியது ஹுண்டாய் நிர்வாகம். அரசின் அறிவுரையை ஏற்காமல் தட்டிக் கழித்தது. மேலும் பணி நீக்கம் செய்யப்ட்ட தொழிலாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து அனுப்பி விடலாம் என்று முயற்சி எடுத்து வருகிறது.

மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், நேற்று தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர்களை இடை நீக்கம் செய்தது. அதிருப்தியின் எல்லைக்குச் சென்ற தொழிலாளர்கள் நேற்று இரவிலிருந்து ஆலைக்கு உள்ளேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுளளனர்.