Saturday, May 12, 2012

படாத பாடுபடும் தொழிலாளர்களும் பாட்டு பாடும் அமைச்சரும்.!

அண்மைக் காலமாக தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடிக்கும் கூத்துகள் நாம் அறிந்ததே. முன்னோடியாக நி(து)தி அமைச்சர் ஓ.பி. 'எங்களுக்கென்று சுயமாக சிந்தனை கிடையாது அம்மாவின் சிந்தனையே எங்கள் சிந்தனை' என்றெல்லாம் கூ(வி)றி அசத்தினார். பின்னர் கால்நடை துறை அமைச்சர் இன்னும் கீழிறங்கி யோசித்து 'கால்நடைகள் அம்மா அம்மா என்றே சொல்லும். அம்மாவைத் தவிர வேறொன்றும் தெரியாது அவைகளுக்கு. அத்துறையின் அமைச்சராகிய எனக்கும் அம்மாவைத் தவிர வேறொன்றும் தெரியாது' என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.

இந்த வரிசையில் நேற்று தொழிலாளர் நல வாரிய அமைச்சர் செல்லப் பாண்டியன் அம்மாவை மகிழ்விக்க எம்ஜியார் பாடல்களாகப் பாடி அமர்க்களப் படுத்தினார். தமிழகத்தில் பாடுபடும் தொழிலாள வர்க்கத்தினர் படும் பெரும்பாடு என்னவென்று உண்மையிலேயே அமைச்சர் அறிந்திருந்தால் இப்படி பாடியிருக்க மாட்டார்.
சாதாரண தொழிற்சாலையை விடுங்கள். நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று இவர்கள் அடிக்கடி பீற்றிக் கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்களில் இன்றைய தொழிலாளர்களின் நிலைமை என்ன?

இத்தனை ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு இத்தனையாயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு என்று வக்கனையாக பேட்டி கொடுத்து திறந்து வைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களில் நிரந்தரப் பணியாளர்கள் மட்டும் எத்தனை பேர் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

அப்ரண்டிஸ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு ஆயிரக் கணக்கானோரின் உழைப்பு சுரண்டப்படுவது, ராகம்போட்டு கூவும் இந்த அமைச்சருக்குத் தெரியுமா?

கசக்கிப் பிழியப்படும் அந்த தொழிலாளர்களுக்கு கட்டிட வேலை பார்க்கும் சித்தாளுக்கு கிடைக்கும் ஊதியத்தை விட குறைவான ஊதியம் வழங்கப்படுவதும் அவர்களுக்கு சரியான உணவு கொடுக்கப்படுவதில்லை என்பதும் பணி நேரத்தில் நடக்கும் விபத்துகளுக்கு மருத்துவ வசதி கூட மறுக்கப்படுவதும் இந்த பாட்டுப் பாடி அமைச்சருக்குத் தெரியுமா?

நான்கு ஆண்டுகள் ஐந்து ஆண்டுகள் என தங்கள் ஆயுள் தேய உழைத்து, பணி நிரந்தரம் செய்வார்கள் என்று ஆசையோடு எதிர்பார்த்து கடைசி நாளில் 'நீ வேலைக்கு லாயக்கில்லை' என்று ஈவு இரக்கமின்றி பன்னாட்டு நிறுவனங்களால் விரட்டப்படும் தொழிலாளர்களின் கண்ணீர் கதையெல்லாம் இந்த 'சிங்கி' அமைச்சருக்குத் தெரியுமா?

என்றோ கிடைத்ததாக மேதினங்களில் நினைவு கூறப்படும் எட்டு மணி நேர வேலை என்ற உரிமை கூட பலருக்கு எட்டாக் கனியாக இருப்பதும் கால்கடுக்க நிற்கும் செக்யுரிட்டிகள் 12 மணி நேரம் வேலை வாங்கப்படும் கொடுமை இன்னமும் இங்கே நடந்து கொண்டிருப்பதும் சில மணி நேரம் நின்று புகழ்பாடும் அமைச்சருக்குத் தெரியுமா?

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் காப்பதற்காக சட்டப்படி தொழிற்சங்கம் அமைத்தால் எவ்வளவு கீழ்த்தரமான பழிவாங்கல்களை இந்நிறுவனங்கள் அரங்கேற்றுகின்றன?

தமிழகத்தில் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் தொடங்கிய தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்த பன்னாட்டு நிறுவனம் ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா?


தொழிற்சங்க அங்கீகார சட்டம் குறித்து எதிர்கட்சி உறுப்பினர் கேட்டதற்கு அமைச்சரி ன் பதில் என்ன தெரியுமா?
"1926ம் ஆண்டு தொழிற்சங்க உரிமைச் சட்டத்தில் அங்கீகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உறுப்பினர் கூறும் திருத்தத்தை அரசு ஆய்வு செய்யும்."

1926ம் ஆண்டு தொழிற்சங்க உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் அதில் தொழிற்சங்கத்தை அங்கீரித்தேயாக வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற ஓட்டை இருப்பதும் சாதாரண தொழிலாளிக்கும் தெரியும் உண்மை. முதல்வர் ஜெ. பாணியில் சொல்வதானால் இது போன்ற பாலபாடமெல்லாம் நீங்கள் நடத்த வேண்டாம். திராணி இருந்தால் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருப்பது போல தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் இந்த ஆட்சியில் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியுமா மாண்புமிகு அமைச்சர் செல்லப் பாண்டியன் அவர்களே? முடியாது ஏனென்றால் நீங்கள் சுவிட்ச் போட்டால் பாட்டு பாடும் ஒலிப்பெருக்கி அவ்வளவுதான் இல்லையா?

பன்னாட்டு நிறுவன தொழிலாளர்களுக்கே இந்த கதியென்றால் சாதாரணப் பட்டறைகளில் நிலைமை எப்படியென்று சொல்ல வேண்டியதில்லை. இப்படி தொழிலாளர்கள் படாத பாடுபட்டுக் கொண்டிருக்க தொழிலாளர் நல அமைச்சர் நீங்களோ சட்டமன்றத்தை பாட்டு மன்றமாக்கி பாடக் கூடாத பாட்டையெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

மாண்புமிகு அமைச்சர் செல்லப் பாண்டியன் அவர்களே நீங்கள் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டால் புரட்சித் தலைவரின் படகோட்டி படத்தில் 'தரைமேல் பிறக்க வைத்தான்' என்ற பாடலுக்கு முன் தொடங்கும் பின்வரும் நான்கு வரிகளை எட்டுக் கட்டையில் உறக்கப் பாடுங்கள். அதுதான் மிக பொருத்தமாக இருக்கும்.

உலகத்தின் தூக்கம் கலையாதோ?
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?


ஒரு நாள் பொழுதும் புலராதோ?

8 comments:

 1. அருமையான பதிவு.

  ReplyDelete
 2. ரொம்ப கோவமா இருக்கீங்க போல.....கேள்விகள் படு சூடு.

  ReplyDelete
  Replies
  1. பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதால் நேரடியாக பார்த்த மற்றும் அனுபவித்ததன் விளைவுதான் இந்த சூடான கேள்விகளுக்குக் காரணம் நண்பர் மனசாட்சி!

   Delete
 3. பன்னாட்டு நிறுவனங்களின் மனசாட்சியற்ற மிருகத்தனமான
  செயல்களைப்பற்றி அறியும் அளவிற்கு எந்த ஒரு அமைச்சருக்கும் ஞானம் வளர்ந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சிவா எந்த ஆட்சி வந்தாலும் இந்த காட்சியில் மாற்றமில்லை. தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி தோழா!

   Delete
 4. அண்ணா உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன் ...விருதை வாங்கிக் கொண்டால் ரொம்ப சந்தோசம் கொள்வேன் ...

  ReplyDelete
 5. அட நமக்கு விருதா? யாரது? ஓ.. நம்மூருக்கார புள்ளயா.. அதான பார்த்தேன்! ரொம்ப சந்தோசம்மா சகோ. கலை!

  ReplyDelete