மாவோயிஸ்ட்களிடமிருந்து அலெக்ஸ் மீட்கப்பட்டது, நித்தியானந்தா சர்ச்சை, சட்டமன்றத்தில் தேமுதிக-அதிமுகவினரின் களேகபரம் போன்ற செய்திகளின் ஆக்கிரமிப்புகளுக்கிடையில் இந்த செய்தியை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்வியறிவில் கரை கண்டுகொண்டிருக்கும் இக்காலத்திலும் இது போன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.
அந்த செய்தி இதுதான்:
கோவையை அடுத்த வீரகேரளம் அருகேயுள்ள நாகராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜ்குமார் (வயது 25). கட்டிட தொழிலாளியான இவர் சுண்டக்காமுத்தூருக்கு கட்டிட வேலைக்காக சென்றார். அங்குள்ள ஒரு மருத்துவமனையின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் இவர் கட்டிட வேலை செய்துகொண்டிருந்தார், மதியம் சாப்பாட்டு வேளையின் போது மருத்துவமனையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஒரு சாரைப்பாம்பும், நாகப்பாம்பும் ஆனந்தமாக பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்தது. இந்த காட்சியை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர். (நம்ம மக்களுக்கு சொல்லவா வேணும்? சுனாமி வருவதையே கிட்ட போய் வேடிக்கை பார்க்க ஆசைப்படுறவங்களாச்சே!)
அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆசாமி, 'இப்படி காமத்தில் மெய்மறந்து நடனமாடும் நல்லபாம்பிடம் வயிற்றில் ஒரு "முத்து" இருக்கும்' என்றொரு விஷக்கருத்தை கக்கியிருக்கிறார். இதை உண்மை என்று நம்பிய ராஜ்குமார் விஷப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார்.

ஓடிப்போய் பின்னிப் பிணைந்த இரண்டு பாம்பையும் வெறும் கையால் பிடித்து நாகப்பாம்பை விலக்கி தனியாக பிரித்துள்ளார்(அடப் பாவமே!!!). அப்போது, வெறி கொண்டிருந்த இரண்டு பாம்புகளுமே ராஜ்குமாரின் கையில் பல இடங்களில் வெறிதீர கடித்துள்ளது. வலி தாங்க முடியாத ராஜ்குமார் பாம்பை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் நடந்து வருவதற்குள் மயங்கி விழுந்துள்ளார். பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக 108க்கு போன் செய்ய, மருத்துமனை போகும் வழியிலேயே வாயில் நுரை தள்ளி இறந்துள்ளார்.
யாரோ சொன்ன முட்டாள்தனத்தை நம்பி முத்தெடுக்கச் சென்ற ராஜ்குமார், எந்த முத்துகளாலும் வைர வைடூரியங்களாலும் ஈடு செய்ய இயலாத விலைமதிப்பற்ற தன் உயிரையே இழந்துள்ளது பரிதாபம். அவருக்கு மனைவியும் 7 மாத பெண் குழந்தையும் இருக்கிறதென்பது இன்னும் பரிதாபம்.
கிராமப்புரங்களில் இது போன்ற இன்னும் பல கதைகளைக் கேட்கலாம். சின்ன வயதில் எங்க ஊரில் நானும் இது மாதிரி நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன்.
நாகப் பாம்புகளில் சிலவகை இருக்கிறதாம். அவை விஷத்தை வெளியேற்றாமல் நூறாண்டுகளுக்கும் மேல் உயிர் வாழுமாம். இவ்வாறு பல ஆண்டுகளாக சேர்ந்த விஷம் திடப் பொருளாகி ஒளிவீசும் தன்மையுடையதாக மாறி விடுமாம். இதற்குப் பெயர்தான் ராஜ ரத்தினம்/மாணிக்கம் என்பதாம்.

இப்படி வாய்க்குள் ரத்தினத்தைப் பொத்தி வைத்திருக்கும் கிழட்டு நாகராஜாவுக்கு கண் பார்வை மங்கி விடுமாம். அமாவாசை தினத்தன்று இருள் அதிகமிருக்குமென்தால் இரை தேடுவதற்கு வசதியாக வாயிலிருக்கும் முத்தைக் கக்குமாம். அதன் வெளிச்சம் ரொம்ப தூரத்துக்கு இருப்பதால் நம்ம நாகராஜா இரை தேடிக்கிட்டு இருப்பாராம். இந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்ம ஆள் கை நிறைய மாட்டு சாணத்தைக் கொண்டு போய் அந்த ரத்தினத்துக்கு மேல 'சொத்'துன்னு போட்டுட்டு வீட்டுக்கு வந்திடுவாராம். திடீர்னு பவர் கட் ஆனதும் நம்ம கிழட்டு நாகராஜா செய்வதறியாம தட்டுத் தடுமாறி எங்காவது முட்டி மோதி செத்துடுவார். அப்புறமென்ன நம்மாளு மறுநாள் போய் சாணத்தைக் கிளரி ரத்தினத்தை எடுத்து விற்று ஒரே நாளில் பணக்காரராகி விடுவார்.
ஊரிலுள்ள சில திடீர் பணக்காரர்களெல்லாம் இப்படி நாகரத்தினத்தால்தான் ஆனார்கள் என்று இந்தக் கதைக்கு வலு சேர்க்க சில ஆதாரங்களையும் காட்டுவார்கள். இந்த கதையை எல்லா ஊர்களிலும் நாம் கேள்விப்படலாம். ஆனால் நேரடியாகப் பார்த்தவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். தத்ரூபமாக சொல்லப்படும் இது போன்ற கதைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. விளைவு.. மேற்கண்ட செய்தியில் கண்ட விபரீதம்!
அதே போல இன்னொரு கதை, அதாவது நல்ல பாம்பை அடித்தால் கொன்று எரித்தோ அல்லது புதைத்தோ விட வேண்டும் கூட பாலையும் ஊற்றி. தப்பித் தவறி அடிபட்ட பாம்பு உயிரை விடாமல் தப்பிவிட்டால் அவ்வளவுதான் உங்கள் கதை. நீங்கள் அமெரிக்கா சென்று ஒளிந்து கொண்டாலும் பழி வாங்காமல் விடாதாம்.
எங்க ஊர் பக்கம் ஒரு விநோதமான கூத்து நடக்கும். பச்சை பாம்பை பிடித்து பெண்களை கையால் உருவச் செய்வார்கள். இப்படி உருவினால் அவங்களுக்கு சமையல் பிரமாதமா வருமாம்!

இப்படி பாம்பு பற்றிய கதைகள் ஏராளம். முடிந்தால் இது பற்றி பிறகு பார்க்கலாம்.