Thursday, March 1, 2012

பேஸ்புக் மீட்டுக் கொடுத்த பழைய நண்பன்!

நூறு கோடிப் பயனர்களை நோக்கிய அதிவேகப் பயணத்தில் சென்று கொண்டிருக்கும் பேஸ்புக்கில் அப்படி என்னதான் இருக்கிறது?
பலரும் பயன்படுத்தும் தேடுதளமான கூகுளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் முத்திரை பதிக்கக் காரணம் என்ன?
இன்னும் எதுவரை பேஸ்புக் சாதிக்கும்?
இந்தக கேள்விளுக்கான பதில்களைப் பார்ப்பதற்கு முன் என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் எனது ஐடிஐ கால நினைவுகளைத் தோண்டியெடுத்து தொடர்பு அறுந்து போன பழைய நண்பர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு எங்கே இருக்கின்றீர்கள் நண்பர்களே என்ற தலைப்பில் பதிவிட்டுருந்தேன்.

அதில் ஒரு நண்பன் சுந்தரராஜன். அண்மையில் பேஸ்புக்கில் என்னைக் கண்டுபிடித்து நட்பு கோரிய போது என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எங்கள் நட்பு துளிர் விட்டதில் துள்ளிக் குதித்தது மனது. சுந்தரராஜனுக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமாக இல்லாத சாதாரண நட்பாக இருந்தாலும் அவன் செய்த சிறு உதவி என் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனைக்கு வித்திட்டதென்றால் அது மிகையாகாது. அது என்னவென்று பார்ப்பதற்கு முன் அவனைப் பற்றிய சிறுகுறிப்பு வரைந்து விடுகிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்குப் பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பட்டங்காடு என்ற கிராமம்தான் நண்பனின் சொந்த ஊர். அதனால் அவனை பட்டங்காடு என்ற பட்டப்பெயரிலேயே செல்லமாக அழைப்போம். பனை மற்றும் பனை சார்ந்த தொழில்தான் அவன் குடும்பத் தொழில். நெல்லைப் பேட்டை ஐடிஐயில் இயந்திரப் பணியாளர் (Machinist) பிரிவில் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். தினமும் ஐடிஐக்கு ரயில் பயணமாக வந்து சேர்வான்.

கள்ளமில்லாத கிராமத்துப் பேச்சு, குழந்தைத் தனமான முகம், கலகலப்பான சிரிப்பு, சுறுசுறுப்பு இவைதான் சுந்தரராஜனை மற்ற நண்பர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்கள். அவன் கிராமத்துப் பேச்சின் இசைநயத்திற்காகவே அடிக்கடி அவனை பேசச்சொல்லி ரசிப்போம். அப்போ நீங்கல்லாம் என்ன சிட்டியா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நெல்லைத் தமிழின் ஓசை நயத்தில் பல உட்பிரிவுகள் உண்டு.

இது மட்டுமல்லாமல் நண்பனுக்கு பொறுமையும் கடின உழைப்பும் தியாக மனப்பான்மையும் அதிகமுண்டு. எந்தளவுக்கென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய தியரி, நுணுக்கமாக வரைய வேண்டிய வரைபடங்கள், நீண்ட நேரம் நின்று இயந்திரத்தை இயக்குதல் இவை போன்ற பொறுமையை சோதிக்கும் காரியங்களை சில பொறுமையற்ற நண்பர்கள் இவனிடத்தில் ஒப்படைத்து விடுவார்கள். இவனும் சளைக்காமல் அவற்றையெல்லாம் செய்து கொடுப்பான்.

இவ்வாறு அன்று நண்பர்களுக்காக சேவகம் செய்தவன், இன்று நாட்டு மக்கள் அனைவருக்காகவும் சேவகம் செய்து கொண்டிருக்கிறான். ஆம் நண்பன் சுந்தரராஜன் இப்போது இராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறான்.

நண்பன் சுந்தரராஜன்

பனி மழை பொழியும் காஷ்மீரில் பனி மலைகளுக்கிடையே துப்பாக்கியோடு எல்லை காக்கும் படை வீரனாகப் பார்க்கும் போது அவனை நண்பனாகக் கொண்டதற்காக பெருமையாக இருக்கிறது. ஆனாலும் அவன் பகிர்ந்து கொண்ட இன்னொரு விஷயம் எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. அது என்ன? அதற்கு முன்னால் அவன் செய்த சிறு உதவி என் வாழ்வில் திருப்புமுனையானது என்று சொன்னேனல்லவா அந்த பிளாஷ்பேக்கை பார்த்து விடலாம்.

அது 1999ஆம் வருடம். ஐடிஐ வாழ்விலிருந்து விடைபெற இன்னும் சில மாதங்களே இருந்தது. நான் உள்ளூர் என்பதால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு சென்று வருவேன். அன்றும் அப்படித்தான் சாப்பிட்டு விட்டு சாவகாசமாக சைக்கிளில் வந்து ஐடிஐயில் பரந்து விரிந்து கிடக்கும் அரச மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினேன். வழக்கமாக மதியத்திற்கு பிறகு பிராக்டிகல் என்பதால் பணிமனைக்குள் நுழைந்தேன். அங்கே நண்பர்கள் யாரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எங்கள் பயிற்சி ஆசிரியர் செல்லக்கனி

"ஏல இங்க என்ன செஞ்சிட்டு இருக்க நீ? அங்க எதோ கார் கம்பனிலருந்து வேலைக்கு ஆள் எடுக்க வந்திருக்காங்க நீ போவலியா?" என்றார் வேகமாக

நான் "எனக்குத் தெரியாதே.. எங்க இருக்காங்க சார்?" என்று கேட்க அவர்,

"MRTV பக்கத்துல இருக்க கிளாஸ் ரூம்ல ரிட்டன் டெஸ்ட் நடக்கு. சீக்கிரமா ஓடுல" என்று விரட்டினார்.

ஒரே ஓட்டமாய் ஓடினேன். கிளாஸ் ரூம் வாசல்ல நின்னிட்டுருந்தவர்
"தம்பி 18 வயசு கம்பிளீட் ஆயிருந்தா மட்டும்தான் எழுத முடியும்." என்றார்.

10ம் வகுப்பு சான்றிதழ் படி என் பிறந்தநாள் 5.4.1981 என்பதால் எனக்கு 18 வயது பூர்த்தியாகி இருந்தது. ஆனால் உண்மையில் நான் பிறந்தது 5.6.1982. எட்டாம் வகுப்புக்காக பள்ளி மாறிய போது ஒரு புண்ணியவான் தவறுதலாக மாற்றிப் போட்டு விட்டார். ஆனால் அதற்காக நான் பல நாட்கள் வருத்தப்பட்டதுண்டு. ஆனால் அதுவே என் தலையெழுத்து மாறுவதற்கு காரணமாக அமைந்தது.

சரி விஷயத்துக்கு வருவோம். எழுத்து தேர்வுக்கு வகுப்பறைக்குள் நுழையப் போகும் முன் சட்டைப்பையைத் தடவிப் பார்த்தால் பேனா இல்லை. அப்போதும் சரி இப்போதும் சரி பேனா என்னிடம் நிரந்தரமாகத் தங்கியதே இல்லை. அன்றும் அப்படித்தான் தொலைத்திருந்தேன். படபடப்போடு சுற்றும் முற்றும் பார்த்த போதுதான் நண்பன் சுந்தரராஜ் அங்கே தென்பட்டான். அவன் வயதுக்கு (18) வரவில்லை என்பதால் தேர்வுக்கு அவனை அனுமதிக்கவில்லை. என் தவிப்பைப் பார்த்த அவன் தன் பேனாவைக் கொடுத்து வாழ்த்தி அனுப்பினான்.

அவனிடத்தில் பேனாவை இரவல்
வாங்கி தேர்வு எழுதி தேர்ச்சியும்
பெற்று பிறகு நடந்த நேர்முகத்
தேர்விலும் தேர்வு பெற்றேன். அதன்
பிறகு ஜூலை 31ம்
தேதி நெல்லையிலிருந்து மூட்டை முடிச்சுகளைக்
கட்டிக் கொண்டு தேர்வான சக
நண்பர்களோடு சென்னை வந்து பணியில்
சேர்ந்து பிறகு பணி நிரந்தமாகி சென்னையில்
இடம் வாங்கி, வீடு கட்டி, திருமணம்
முடித்து இரண்டு குழந்தைகளுக்குத்
தகப்பனாகி....
13 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

பேனா கொடுத்தது என்ன பெரிய
உதவியா என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அந்த நேரத்தில்
அது கிடைத்திரா விட்டால்
அல்லது தாமதமாகியிருந்தால் நான்
அந்த தேர்வு எழுதியிருக்க முடியாது.
என் வாழ்க்கைப் பயணம்
மாறியிருந்திருக்கும். ஒரு நல்ல
வாய்ப்பை நழுவ
விட்டு விட்டோமே என்ற பரிதவிப்புடன்
இருந்திருப்பேன்.

காலத்தினாற்
செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


என்று வள்ளுவர் சொல்வது போல சிறிய
உதவியென்றாலும் என்னைப்
பொருத்தவரை அது பெரிய
உதவியாகி மனதில் மறக்க முடியாத
நினைவாக தங்கி விட்டது. பேஸ்புக்கில்
நண்பனிடம்
இதை சொன்னபோது அப்படியா என
ஆச்சரியப்பட்டு தேங்க்ஸ் டு காட்
என்றான் தன்னடக்கத்தோடு. ஆம்.!
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
பட்டங்காட்டில் பனையேறிய நண்பன்
பட்டாளத்துக்கு சென்று மலையேறி விட்டதில்
சந்தோஷமாக இருந்தாலும் வருத்தமான
விஷயம் என்னவென்றால் அவன்
திருமணம் பற்றி நான்
கேட்டபோது தனக்கு இன்னும்
திருமணமாகவில்லை என்றும் பல
இடங்களில் பெண் பார்த்தும் தான்
இராணுவத்தில் இருப்பதால்
மறுத்துவிட்டதாகவும் மிக
நெருக்கமான உறவினர் கூட இதில்
விதிவிலக்கல்ல என்றும் தெரிவித்தான்.
அடடா என்ன உலகம் இது. யார்
யாருக்கோ அடிமைச் சேவகம் செய்து,
மனைவி குழந்தைகளையெல்லாம்
பிரிந்திருக்க நேரிடும் என்று தெரிந்தும்
வெளிநாடுகளில்
வேலை செய்வோருக்குத் தயங்காமல்
தங்கள் பெண்ணை மணம் முடித்துக்
கொடுக்கும் பெற்றோர், சொந்த நாட்டில்
கம்பீரமாக நாட்டைக் காக்கும்
பணியிலிருப்பவனுக்கு பெண் தர
மறுப்பது கொடுமையல்லவா?
நிச்சயம் என் நண்பனுக்கு அவன்
மனதைப் புரிந்து கொண்ட மணப்பெண்
கிடைக்கும் என்ற
நம்பிக்கையோடு அவனுடனான நட்புப்
பயணம் தொடர்கிறது பேஸ்புக்
வழியாக.

பேஸ்புக்கின் அபார
வளர்ச்சி பற்றி ஆரம்பத்தில்
சொன்னேனல்லவா? நாடு, மொழி, இனம்
போன்ற எல்லைகளைக் கடந்த
நண்பர்களை உருவாக்கித்
தருவதோடு எங்கோ எப்போதோ முடிந்து போன
பழைய நட்புகளையும் மீட்டுத்
தருவதால்தான் பேஸ்புக்
இன்று பலருக்கு அன்றாட வாழ்வின்
ஓர் அங்கமாகி விட்டது.
நண்பனை மீட்டுத் தந்த
பேஸ்புக்கிற்கு நன்றி.!

ஊர்
உறவு நட்பு வட்டாரத்தையெல்லாம்
விட்டு காஷ்மீரத்து எல்லையில்
இருக்கும் நண்பனுக்கு இப்போதைய
ஒரே ஆறுதல் பேஸ்புக் நட்புகள்தான்.
நண்பர்களே நீங்களும்
அவனுக்கு ஆறுதல் தர நினைத்தால்...
பேஸ்புக்கில் நண்பன் சுந்தரராஜனின்
முகவரி
http://
facebook.com/profile.php?
id=100003302821002

எனது முகவரி(ஹி..ஹி..)
http://
facebook.com/iammeeran/

10 comments:

 1. முகநூல் நல்ல வழியில் நிறைய பயன்படுகிறது. அது கூரான கத்தி போல. நாம் உபயோகிப்பதைப் பொறுத்து தான்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா, கத்தியை சிலர் தவறாகப் பயன்படுத்துவதுதான் வேதனையளிக்கிறது.
   தங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி ஐயா!

   Delete
 2. மிகவும் அருமையான பதிவு...உங்கள் நண்பருடனான தொடர்பை மேலும் வழுப்படுத்துங்கள்

  ReplyDelete
  Replies
  1. எங்கள் நட்பு வலுப்படும்.
   தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

   Delete
 3. உங்கள் நட்பு தொடரட்டும் நல் விதமாக!பழைய நட்புக்களைத்தேடியும் வலைப்பூ வழியாக தேடுகின்றீர்கள்.உஙக்ள் எண்ணம் ஈடேறட்டுமாக.வாழ்த்துக்கள் தமிழ் மீரான்.

  ReplyDelete
  Replies
  1. @ஸாதிகா,
   நன்றி சகோதரி தங்களின் நட்பு மறவாத வருகைக்கும் கருத்துரைக்கும்!

   Delete
 4. காலத்தினாற்
  செய்த நன்றி சிறிதெனினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது

  ReplyDelete
 5. ஸலாம் ...

  முழுவதும் படித்தேன் ... ரசித்தேன்...

  விரைவில் உங்கள் நண்பர் திருமணம் நடக்கும் ... இன்ஷா அல்லாஹ்

  உங்கள் நட்பை அவரிடம் தொடருங்கள் ... இறைவன் நாடினால் ..

  ReplyDelete
  Replies
  1. ஸலாம் சகோ.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் ப்ளாக் பார்த்தேன். அசுர வேகத்தில் நடக்கும் கட்டுமானப் பணி இன்னும் முடியல போலிருக்கே! :)

   Delete