Monday, April 2, 2012

என்னைக் கவர்ந்த சென்னைத் தமிழ்

அது 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம். சொந்த ஊரான திருநெல்வேலியிலிருந்து பணி நிமித்தம் சென்னைக்கு பலவித கனவுகளோடு நுழைந்த காலம். ஊர் உறவுகளைப் பிரிந்த சோகம் ஒரு பக்கம் கடும் வேலைப்பளு ஒரு பக்கம், துணி துவைப்பதிலிருந்து சமையல் செய்வது வரையான தேவைகளை சுயமாக செய்து கொள்ள வேண்டிய புதிய அனுபவங்கள் ஒரு பக்கம் என பல சோதனைகளுக்கு மத்தியில் ஒரு பெரும் சோதனையாக எங்களுக்கு அமைந்தது சென்னைவாசிகள் பேசிய செந்தமிழ்!

மற்ற விஷயங்களையெல்லாம் சகித்துக் கொண்ட எங்களால் சென்னைத் தமிழை மட்டும் ஜீரணிக்கவே முடியவில்லை பலநாட்களுக்கு. அதுவும் நாங்கள் முதன்முதலாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சென்னையின் அடிமட்டத் தமிழில் மூழ்கி முத்தெடுத்தவர். வயது முதிர்ந்த தாத்தா வேறு.. அவர் எப்படி பேசியிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா? அவர் பேசுவதில் ஏதோ இருபது சதவீத வார்த்தைகளே புரியும். மற்றவைகளை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கே பலமுறை ஆங்.. ஆங்.. என்று கேட்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் அதே வேகத்தில்தான் பதில் வரும். சில நேரங்களில் அவர் பேசுவது புரியாமல் திருதிருவென விழிக்க 'ஏம்பா தமிழ் தெராதா உனுக்கு?' என்று கேட்பாரே பார்க்கலாம்!! அதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.

இப்படி ஆரம்பக் காலத்தில் சென்னைத் தமிழின் மீதிருந்த கொலைவெறி சென்னைவாசிகளோடு பழகப் பழக கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. இப்பொழுது நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் மற்றும் நண்பர்களின் வேறுசில வட்டார வழக்கும் கலந்த பு(பொ)து மொழி பேசிக்கொண்டிருக்கிறோம். நெல்லைத் தமிழை நிலைநிறுத்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிப் பேசிய ஒருசில நண்பர்களால் கூட சென்னைத் தமிழுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம். தமிழ்நாட்டின் பிற வட்டார வழக்குத் தமிழையெல்லாம் விட சென்னை வட்டாரத் தமிழ் எப்படி இப்படி விநோதமானது என்பதைப் புரிந்து கொள்வது எளிது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது தமிழகத்தைவிட அதன் தலைநகருக்கு சாலப் பொருத்தமாக இருக்கும். அன்றைய ஆங்கிலேயர் முதல் இன்றைய வடஇந்தியத் தொழிலாளர்கள் வரை பலதரப்பட்ட மக்களுக்கும் அடைக்கலம் தந்து வாழ்வாதாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது சென்னை. இப்படி வந்தாரை வாழ வைத்தது மட்டுமல்லாமல் அவர்கள் கொண்டு வந்த மொழியையும் வாழ வைத்துக் கொண்டிருப்பதன் அடையாளம்தான் சென்னைத் தமிழ்.

சென்னைத் தமிழில் முக்கிய அங்கம் வகிப்பது ஆங்கிலம். இருக்காதா பின்னே? சென்னை நகரை செதுக்கிய சிற்பிகளாயிற்றே ஆங்கிலேயர்கள். அவர்கள் விட்டுச் சென்ற அடையாளங்கள் இல்லாமல் போய்விடுமா? சென்னையின் அடித்தட்டு மக்களிடத்தில் கூட ஆங்கில வார்த்தைகள் சாதாரணமாகப் புளங்கப்படுவதைக் காணலாம். இதில் சிறப்பு என்னவென்றால் ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தாமல் தமிழுக்கேற்றார்போல் மாற்றியிருப்பார்கள். எப்படி இங்கிலீஷ் ஆங்கிலமாகியதோ அது போல. உதாரணத்திற்கு சில:
School - இஸ்கூலு
Hour - அவரு
Cement - சிமிட்டி
Kerosene oil - கிருஷ்ணாயில்
Upbeat - அப்பீட்டு

மண்ணெண்ணெய் எப்படி கிருஷ்ணாயில் ஆனது என்று ஆரம்பக்காலத்தில் நான் மண்டையைப் பிய்த்ததுண்டு. அடித்தட்டு மக்கள் பேசும் இந்த ஆங்கில சொல்லாடலை மேல் தட்டு மக்கள் ஏளனத்தோடு பார்க்கின்றனர். உண்மையில் இதில் நகைப்பதற்கு ஒன்றுமில்லை. பிற மொழி வார்த்தைகளை அவரவர் தாய்மொழிக்கேற்ப உள்வாங்கிக் கொள்வதென்பது உலக இயல்பு. அன்றைய ஆங்கிலேயர்களும் இதைத்தானே செய்தனர்.

எழும்பூர் என்று சொல்வதற்கு நாக்கு எழாமல் எக்மோர் என்றார்கள். திருவல்லிக்கேணியைத் திருத்தமாக சொல்ல முடியாமல் ட்ரிப்ளிக்கேன் ஆக்கினார்கள். பூவிருந்தவல்லி பூனமல்லி ஆனது. இப்படி ஆங்கிலேயர்கள் அரைகுறையாக மென்று துப்பிய வார்த்தைகளைத்தான் இன்றைய மேல்தட்டு மக்கள் நிறைந்த வாயோடு பெருமை பொங்க பேசி மகிழ்கிறார்கள். தமிழை வெறும் இணைப்புச் சொல்லாக மட்டுமே பேசும் இந்த ஆங்கில மோகிகளை விட, அடித்தட்டு சென்னைத் தமிழன் பேசும் வார்த்தைகள் எவ்வளவோ மேல்! (அப்பாடா.. ரொம்ப நாள் ஆசையைக் கொட்டித் தீர்த்தாச்சி.!)

அடுத்ததாக சென்னைத் தமிழின் ஓர் அங்கமாக உருது வார்த்தைகள் மிகுதியாக காணக் கிடைக்கின்றன.
படா பேஜார், கலீஜ், நாஷ்டா, டபாய்த்தல், மஜா, தாஜா, பேமானி, ஜல்ஸா, டங்குவார், உடான்ஸ், உதார்..... இப்படி நிறைய சொல்லலாம். சென்னையில் கணிசமாக உருது பேசுவோர் இருப்பதால் இவை சென்னைத் தமிழோடு கலந்திருக்கின்றன.

அதேபோல் தெலுங்கு பேசும் மக்களும் அதிகமிருப்பதால் தெலுங்கு வார்த்தைகளும் சென்னைத் தமிழோடு ஐக்கியமாகியிருக்கின்றன. நைனா, ஒத்து, காண்டு, டப்பு, புவா, கோசரம், பப்பு போன்ற வார்த்தைகளால் இதை அறியலாம்.

இவை மட்டுமின்றி ஹிந்தி, மராட்டி, பார்ஸி, அரபி போன்ற மொழிகளின் சில சொற்களும் சென்னைத் தமிழில் சங்கமித்திருக்கின்றன.

இவ்வாறு வந்த பிற மொழி வார்த்தைகளில் பெரும்பாலும் வசவு வார்த்தைளே அதிகமாக இருக்கின்றன. சென்னைவாசிகள் இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டால் தமிழ்நாட்டில் வேறெங்குமே கேட்க முடியாத வார்த்தைகளை காது நிரம்பக் கேட்கலாம். கஸ்மாலம், சோமாறி, பேமானி, கம்முனாட்டி.... இன்னும் எழுத முடியாத நிறைய வார்த்தைகள் உண்டு. யாரையாவது நேரடியாக திட்டித் தீர்க்க வேண்டுமெனில் அவர் அறியாத பாஷையில் திட்டுவதே சிறந்த வழிமுறையென்று அக்காலத்து சென்னைவாசிகள் கற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சென்னைத் தமிழ் பிறருக்கு அந்நியப் படுவதற்கு மற்றுமொரு காரணம் வேகமான உச்சரிப்பும் அதனால் சுருங்கும் வார்த்தைகளும் ஆகும். 'இதோ இங்கே இருக்குது பாருடா' என்று பிற வழக்கில் சொல்லி முடிப்பதற்குள் அதே அர்த்தத்தில் 'தோடா' என்ற இரண்டே எழுத்தில் சென்னைவாசி சொல்லி முடித்து விடுவான். இதே போல மேலும் சில உதாரணங்கள்

கூட்டிட்டு வா - இட்னு வா
அழகாக இருக்குது - ஷோகாக்கிது
உன்னோடதா - உன்தா
சாப்பிட்டாயா - துன்ட்டியா
பார்க்க/கேட்க சகிக்கல - ஐயே
சந்தேகப் படாதே - டவுட்டாத
கேழ்வரகு - கெவுரு

இது போல் பல வார்த்தைகள் சென்னையின் பரபரப்பான வாழ்க்கை முறைக்கேற்ப உருமாறியிருக்கிறது.

சென்னைத்தமிழ் என்றாலே இப்படி குப்பையும் கூவமுமாகத்தான் இருக்கும். நல்ல தமிழ் வார்த்தைகளையே அங்கே கேட்க முடியாது. சினிமாவைப் பார்த்து மட்டுமே சென்னைத் தமிழை அறிந்து வைத்திருப்பவர்கள் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சென்னைத் தமிழிலும் செந்தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன. தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் பிற ஊர் மக்களுக்கு சென்னைவாசிகள் எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை என்பதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். 13 ஆண்டுகள் சென்னையின் பூர்வீக மக்களோடுப் பழகியவன் என்ற முறையில் அவற்றில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதை என் கடமையாக நினைக்கிறேன்.

தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் எழுத்தாகிய 'ழ'கரத்தை சென்னைவாசிகளை விட வேறு எந்த வட்டாரத்திலும் இவ்வளவு அழுத்தமாக உச்சரித்து நான் கேட்டதில்லை. அதிக அழுத்தம் தர முடியாத ஒருசிலர் மட்டுமே ழவை யவாக்கி பழத்தை பயமாக்கி விடுகின்றனர்.

நிஜமாவா? சத்தியமாவா? என்று பிற ஊர்களில் வடமொழி வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்க சென்னைவாசிகளோ மெய்யாலுமா என்று செந்தமிழில் பேசி மெய்சிலிர்க்க வைக்கிறார்கள்.

அருகில் எனப் பொருள்படும் 'அண்டை' என்னும் வார்த்தை சென்னைப் பேச்சு வழக்கில்தான் இன்னமும் இருக்கிறது.
உதாரணம்: வூட்டாண்ட, கடையாண்ட

வலி என்ற வார்த்தை வேதனை என்றே நாம் பொருள் கொள்கிறோம். இலக்கியங்களில் வலி என்ற வார்த்தை 'அதிக விசை கொடு' 'இழு' 'தள்ளு' போன்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதை வைத்தே வலிமை வலிது போன்ற வார்த்தைகள் வழக்கில் வந்தது. ஆச்சரியகரமாக சென்னைத் தமிழில் மட்டுமே வலி என்ற சொல் இன்னமும் அதே பொருளில் பேசப்படுகிறது.
உம்: வலிச்சிக்கினு வா, துடுப்பு வலி

வலிக்குது என்று பிற ஊர்களில் சொல்வதை சென்னையில் நோவுது அழகு தமிழில் சொல்வார்கள்.

குந்து, அப்பால, கழனி, தொலவு(தொலைவு), சோத்துக்கை, திட்டமா(அளவாக), கா(ல்)வா(ய்)... இப்படி இன்னும் பல தூய சொற்கள் இருக்கின்றன.


சரி அதெல்லாம் போகட்டும். என்னதான் இருந்தாலும் ஊர்பக்கம் சொல்லுற மாதிரி பழமொழி சொலவடை எல்லாம் சென்னைப் பக்கம் கிடையாதே அப்படின்னு நினைக்கிறீங்களா? இதோ உங்களுக்காக சில

பஜார்ல உஷாரா இல்லன்னா
நிஜார உருவிடுவானுங்க

ஏண்டா எரடி(இடரி) விழுந்தேன்னா
இதுவும் ஒரு கரடி வித்தைன்னானாம்


கடைசியாக, சென்னைத்தமிழை மொழி, இன மற்றும் கலாச்சார நல்லிணக்கத்திற்கான அடையாளம் என்றால் அது மிகையாகாது. அதில் ஆச்சரியப்பட வேண்டிய ஆராயப்பட வேண்டிய நிறைய விஷயங்கள் உண்டு. நாமோ அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எள்ளி நகைக்கிறோம். ஆனால் இந்த ஏளனத்தையெல்லாம் சென்னவாசி பொருட்படுத்துவதில்லை. 'கிளம்பு காத்து வரட்டும்' என்று பதில் சொல்லிவிட்டு தன் வேலையப் பார்ப்பான். இதன் பொருள் 'உன் வெட்டிப் பேச்சை நிறுத்தி விட்டு நீ கிளம்பினால் எனக்கு கொஞ்சம் நல்ல காற்றாவது கிடைக்கும்' என்பதாகும்.

குறிப்பு தந்து உதவிய நண்பர்கள்:
சக்திவேல்
தினேஷ்
செல்வம்


இம்மா நேரமா நம்ம பதிவ பொரிமையா படிச்சதுக்கு தேங்க்சுங்கோ.. அப்பால சொம்மா போவாம எதுனா கருத்து கிருத்து இருந்தா பீட்ரு வுடாம மேட்ரு ஒண்டி பின்னூட்டத்தில சொல்ட்டு போங்கப்பா.!

7 comments:

  1. அனுபவம் பேசுதோ!.. நல்ல சுவாரசியமாத்தான் இருக்கு மீரான். நீங்களும் இப்படித்தான் பேசுவீங்களா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஷேக் அண்ணே,
      என்னதான் இருந்தாலும் நம்மூரு பாசைய மறக்க முடியுமாண்ணே? ஊர்பக்கம் போனா நெல்லைத் தமிழ் பேசிக்கிடுவேன். சென்னை நண்பர்கள்கிட்ட சென்னைத் தமிழ். இப்புடித்தாண்ணே காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
      வருகைக்கு நன்றி!

      Delete
  2. 'ஏம்பா தமிழ் தெராதா உனுக்கு?' என்று கேட்பாரே பார்க்கலாம்!! அதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.

    ReplyDelete
    Replies
    1. @இராஜராஜேஸ்வரி,
      தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
  3. wonderful research on chennai tamil.

    ReplyDelete
  4. சோக்கு பா...

    ReplyDelete
  5. சிறந்த ஆய்வு கட்டுரை.. வாழ்த்துகள்!

    ReplyDelete