Thursday, April 5, 2012

'கூவல் திலகம்' - ஓ.பன்னீர்செல்வம்!

சினிமாவில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றில் லிவிங்ஸ்டனைப் புகழ்ந்து தள்ளுவதற்காக வடிவேலு காசு கொடுத்து ஆட்களை நியமிக்க அதில் ஒருவர் 'வருங்கால ஜனாதிபதி' என்று சொல்வார். உடனே லிவிங்ஸ்டன் 'ங்கொய்யால.. இவன் நல்லா கூவுறாண்டா.. கூவல் திலகம்டா' என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டிலிருந்து பணத்தைக் கொடுத்து 'அடுத்த முறை இன்னும் நல்லா கூவணும்' என்று சொல்ல அவரும் அடுத்த முறை 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க' என்பார்.

இது போன்ற காட்சிகளை சினிமாவில் வேண்டுமானால் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கலாம். ஆனால் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இப்படிக் கூவிக் கொண்டிருந்தால் பார்க்கும் மக்களுக்கு வயிற்றெரிச்சலும் ஆத்திரமும்தான் வருகிறது.

அண்மைக் காலமாக சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்கவே எரிச்சலாக உள்ளது. அதுவும் நிதி அமைச்சரின் துதி பாடலுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அம்மாவுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதில் தனக்கு நிகர் தானே என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறார். பட்ஜெட் உரையின் போது அதிகபட்சமாக அம்மாவை உச்சரித்து சாதனை படைத்த அவர், இன்று(05/04/2012) பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய போது,

"பூகோள பாடத்தில் வேண்டுமானால் இந்தியாவின் தலைநகர் டெல்லி என்று இருக்கலாம். ஆனால், அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னை தான். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது புரட்சித் தலைவி அம்மா தான்.

எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு.

எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி.

அம்மாவுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் சமர்பிப்போம்"

என்று கூறு(வு)வதையும் அதற்கு அதிமுகவினர் விண்முட்ட மேசையைத் தட்டுவதையும் கேட்டு முதல்வர் முகத்தில் வேண்டுமானால் புன்னகை தவழலாம். ஆனால் மக்கள் முகம் சுழிப்பது இந்த மங்குனி அமைச்சர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

வெளியில் எப்படி வேண்டுமானாலும் புகழ்பாடுங்கள் இல்லை காலில் விழுங்கள் இல்லை நெடுஞ்சாண் கிடையாக அங்கப் பிரதட்சணமே கூட செய்யுங்கள் யார் கேட்கப் போகிறார்கள்? ஆனால் சட்டமன்றத்தில் நீங்கள் நிற்பது மக்கள் தந்த அங்கீகாரம். அங்கே நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆக்கப்பூர்மானதாக இருக்க வேண்டும். நீங்கள் புகழ்பாடுவதற்கும் அல்லது வேண்டாதவர்களை வசைபாடுவதற்குமான இடம் அல்ல சட்டமன்றம். உங்கள் கண்ணியத்தையும் உங்களுக்கான அதிகாரத்தையும் இழக்கலாமா? நீங்கள் பதவி ஏற்கும்போது எடுத்த உறுதிமொழி நினைவில் இருக்கிறதா அமைச்சர்களே?

"தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும், உளச்சான்று படியும் எனது கடமைகளை செய்வேன் என்றும் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க, அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பை விலக்கி, பல தரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்"

என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்ற நீங்கள் எங்களுக்கென்று சுயமான சிந்தனை கிடையாது மூளை கிடையாது முதுகெலும்பு கிடையாது என்றெல்லாம் சொல்வதற்கு வெட்கப் பட வேண்டாமா?

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இது போன்ற விஷயங்களைத் தடுக்க தொண்டர்களுக்கு ஒரே ஓர் ஆணையிட்டு இந்த புகழ்பாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே! உங்கள் ஆட்சி முறையையும் நிர்வாகத் திறமையையும் மக்கள் புகழ வேண்டும். அதுதான் உண்மையான அங்கீகாரம். அதை விடுத்து உங்களுக்கு நீங்களே ஓயாமல் புகழ்பாடிக் கொண்டிருந்தால் மக்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை. தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டவரின் நிலை உ.பி.யில் என்னவானது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அமைச்சர்களே அரசியல்வாதிகளே, என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் சட்டமன்றத்தை விமர்சிக்கும் அளவுக்கு தகுதியை மீண்டும் ஏற்படுத்தித் தராதீர்கள்!

8 comments:

  1. ஆனால் சட்டமன்றத்தில் நீங்கள் நிற்பது மக்கள் தந்த அங்கீகாரம். அங்கே நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆக்கப்பூர்மானதாக இருக்க வேண்டும். நீங்கள் புகழ்பாடுவதற்கும் அல்லது வேண்டாதவர்களை வசைபாடுவதற்குமான இடம் அல்ல சட்டமன்றம். உங்கள் கண்ணியத்தையும் உங்களுக்கான அதிகாரத்தையும் இழக்கலாமா? நீங்கள் பதவி ஏற்கும்போது எடுத்த உறுதிமொழி நினைவில் இருக்கிறதா அமைச்சர்களே? -----

    கடைசியாக, அமைச்சர்களே அரசியல்வாதிகளே, என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் சட்டமன்றத்தை விமர்சிக்கும் அளவுக்கு தகுதியை மீண்டும் ஏற்படுத்தித் தராதீர்கள்! ------ நன்று ~

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி KANNAA NALAMAA, தமிழ்மகன்!

      Delete
  2. //அதை விடுத்து உங்களுக்கு நீங்களே ஓயாமல் புகழ்பாடிக் கொண்டிருந்தால் மக்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை//

    மறந்துட்டாங்க போல....

    அவரு பாராட்டு விழாவா நடத்துனாரு..

    இவுக இப்படி.....கூவி கூவி விடுங்க விடுங்க.

    ReplyDelete
  3. ஆமாம் மனசாட்சி நீங்க சொல்ற மாதிரி சென்ற ஆட்சியில் பாராட்டு விழா எடுத்தவங்களை எல்லாம் மக்கள் இப்போ பார்வையாளரா மாத்திட்டதையெல்லாம் இந்த கூவிகள் மறந்துட்டாங்க போல!
    நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  4. உண்மை தான் நீங்கள் சொல்வது கால் ல விழுற போட்டோ சூப்பர்

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி PREM

    ReplyDelete
  6. நாம என்ன இதை என்னைக்கு நேத்திக்கு இத பாக்குறோம் இதெல்லாம் அரசியல்ல (ADMK) சகஜமப்பா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அன்பு, வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாங்க!

      Delete