Tuesday, August 9, 2011

ஜெ. வாங்கிய முதல் குட்டு!

கடந்த மூன்று மாதங்களாகக் கேள்விக்குறியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்திய சமச்சீர் கல்விக்கு ஒரு வழியாக முற்றுப் புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். இன்னும் 10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.

கடந்த கால திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியால் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அம்மையாருக்கு விழுந்த முதல் குட்டு இதுவாகத்தான் இருக்கும்.

சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசின் நிலைபாட்டை நடுநிலையாளர்கள் பலரும் ஆட்சேபித்திருந்தும் உயர்நீதி மன்றத்தில் ஏற்கனவே குட்டு வாங்கியும் அம்மையார் தன்னுடைய வழக்கமான பிடிவாதத்தால் உச்சநீதி மன்றத்தில் குட்டுப் பட்டு திரும்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் உச்சநீதித் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமல் படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட புறக்கணிக்கலாம் என்ற முடிவில் ஏற்கனவே இருந்தாரோ என்னவோ புரியவில்லை!

கெட்டதிலும் நல்லது என்பதைப்போல வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப் படவில்லையே தவிர, அரசியலையும் போராட்டத்தையும் மாணவர்கள் நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள்!

ஏற்கனவே வாரி வழங்கிய இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே பல கோடிகள் கடன்பட்டிருக்கும் ஜெ. அரசு இப்படி வீண் பிடிவாத்தால் படிக்காத புத்தகங்களுக்காக பலகோடி பணத்தை வீணடித்தது எவ்விதத்தில் நியாயம்?

இங்கே இன்னொருவரைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் எதிர்கட்சித் தலைவர் திரு. விஜயகாந்த். சிலர் விமர்சிப்பது போல் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா அல்லது தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்றே நினைக்கத் தோன்றுகிறது. இனிமேலாவது விழித்துக் கொண்டு பொருப்புடன் செயல்படாவிட்டால் அவருடைய வருங்கால முதல்வர் கனவு சாத்தியமாக வாய்ப்பில்லை.

சமச்சீர் கல்வி தீர்ப்பு மூலம் அரசு பாடம் கற்றிருக்க வேண்டும். இனியேனும் மக்களின் நியாயமான உணர்வுகளை மதித்து ஆட்சி நடத்த வேண்டும். இல்லை இனிமேலும் நாங்கள் இதுபோன்ற விஷயங்களில் உச்சநீதிமன்றத் தீரப்புக்குப் பிறகே திருந்துவோம் என்று அரசு எண்ணினால் மக்கள் தீர்ப்பு வேறு மாதிரியாக இருக்கும்!

Thursday, July 28, 2011

வாய்ப்பு-கவிதை

இந்த வார ராணி முத்து இதழில் பிரசுரமான என் கவிதை இது..

=>வாய்ப்பு<=

அதிகம் பேசியதால்

மவுனமானோம் நாம்..

நீயாகப் பேசுவாய் என்று நானும்

நானாகப் பேசுவேன் என்று நீயும்

காத்திருக்கிறோம்!

எப்படியும் வராமலா போய்விடும்

ஒரு மகிழ்ச்சியோ துக்கமோ

நம் மவுனத்தைக் கலைப்பதற்கு?

Friday, June 17, 2011

திகைப்பூட்டும் புகைப்படங்கள்

கின்னஸ் சாதனையாளர் சிலரின் திகைப்பூட்டும் புகைப்படங்கள் இவை

நீளமான இமை முடி

நீண்ட கழுத்து

மிக குண்டானவர்

மிக குள்ளமானவர்

மிக உயரமானவர்

நீண்ட தாடி

பெரிய கண்கள்

மிக அதிகமாக நீட்சியடையும் தோல்

மிகப்பெரிய தாடை

நீண்ட நகங்கள்

Tuesday, June 14, 2011

இணைபிரியா வாழ்க்கை

கடவுள் நமக்கு எத்தகைய சிறந்த வாழ்க்கையை அளித்திருக்கிறார் என்பது பலருக்கு புரிவதில்லை. ஏதோ தனக்கு மட்டும் வாழ்க்கையில் யாருக்கும் நேர்ந்திடாத துன்பம் நேர்ந்துவிட்டதாகப் புலம்பும் நண்பர்ளே, பின்வரும் படங்களைப் பாருங்கள். நம்மால் கற்பனையிலும் நினைக்க முடியாத வாழ்க்கையை எப்படி புன்னகையோடு எதிர்கொண்டு வாழ்கிறார்கள் என்பதைப் பாருங்கள்!

Wednesday, June 8, 2011

கோளுரை

மதியை மதித்தவன்
வானத்தில் ஏறி
மதியை மிதித்து வந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்

வெற்றி எழுத்தாய்
வியர்வையைக் கொண்டவன்
விதியை எழுதுகிறான் - பொய்
நெற்றி எழுத்தை
நம்பியவன் நீ
நீரில் எழுத்தானாய்

கைகளில்தான் உன்
வருங்காலம் அது
கைகளின் சக்தியிலே - வெறும்
பொய்களின் வழியில்
போனவனே! அதை
ரேகையில் தேடுகிறாய்

கோளும் நாளும்
குறித்தது ராமன்
கொற்றவன் ஆவதற்கு - அந்த
நாளில் என்ன
நடந்தது? பாவம்
நடந்தான் காட்டுக்கு

காலம் பார்த்து
நடந்ததுதானே
கண்ணகி கல்யாணம் - அவள்
கோலம் இழந்து
கொண்டதுவோ மலர்க்
குங்கும அலங்கோலம்

சாதகம் பார்த்தாய்
சகுனம் பார்த்தாய்
சகலமும் பார்த்தாயே - ஒரு
பாதகம் இன்றி
வாழ்ந்தாயா? வெறும்
பயத்தால் சாகின்றாய்

அழுவது சில நாள்
சிரிப்பது சில நாள்
அனைவர்க்கும் உள்ளதுதான் - கதை
முழுவதும் உனக்கு
முன்னால் தெரிந்தால்
மூச்சில் சுவை ஏது?

-கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய "சுட்டுவிரல்" எனும் நூலிருந்து.