Tuesday, August 9, 2011

ஜெ. வாங்கிய முதல் குட்டு!

கடந்த மூன்று மாதங்களாகக் கேள்விக்குறியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்திய சமச்சீர் கல்விக்கு ஒரு வழியாக முற்றுப் புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். இன்னும் 10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.

கடந்த கால திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியால் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அம்மையாருக்கு விழுந்த முதல் குட்டு இதுவாகத்தான் இருக்கும்.

சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசின் நிலைபாட்டை நடுநிலையாளர்கள் பலரும் ஆட்சேபித்திருந்தும் உயர்நீதி மன்றத்தில் ஏற்கனவே குட்டு வாங்கியும் அம்மையார் தன்னுடைய வழக்கமான பிடிவாதத்தால் உச்சநீதி மன்றத்தில் குட்டுப் பட்டு திரும்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் உச்சநீதித் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமல் படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட புறக்கணிக்கலாம் என்ற முடிவில் ஏற்கனவே இருந்தாரோ என்னவோ புரியவில்லை!

கெட்டதிலும் நல்லது என்பதைப்போல வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப் படவில்லையே தவிர, அரசியலையும் போராட்டத்தையும் மாணவர்கள் நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள்!

ஏற்கனவே வாரி வழங்கிய இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே பல கோடிகள் கடன்பட்டிருக்கும் ஜெ. அரசு இப்படி வீண் பிடிவாத்தால் படிக்காத புத்தகங்களுக்காக பலகோடி பணத்தை வீணடித்தது எவ்விதத்தில் நியாயம்?

இங்கே இன்னொருவரைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் எதிர்கட்சித் தலைவர் திரு. விஜயகாந்த். சிலர் விமர்சிப்பது போல் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா அல்லது தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்றே நினைக்கத் தோன்றுகிறது. இனிமேலாவது விழித்துக் கொண்டு பொருப்புடன் செயல்படாவிட்டால் அவருடைய வருங்கால முதல்வர் கனவு சாத்தியமாக வாய்ப்பில்லை.

சமச்சீர் கல்வி தீர்ப்பு மூலம் அரசு பாடம் கற்றிருக்க வேண்டும். இனியேனும் மக்களின் நியாயமான உணர்வுகளை மதித்து ஆட்சி நடத்த வேண்டும். இல்லை இனிமேலும் நாங்கள் இதுபோன்ற விஷயங்களில் உச்சநீதிமன்றத் தீரப்புக்குப் பிறகே திருந்துவோம் என்று அரசு எண்ணினால் மக்கள் தீர்ப்பு வேறு மாதிரியாக இருக்கும்!

3 comments:

  1. விசயகாந்து வாய் பேசாமல் இருந்தால் ’விசய’மில்லா காந்தா மாறப்போவது உறுதி.அரசியல் இவருக்கு பார்ட் டைம் ஜாப்பா என்ன?

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி R.Elan.

    ReplyDelete
  3. வணக்கம் ்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாடங்கள் நடத்தபடவில்லையே தவிர அவர்கள் அரசியலையும் ் போரட்டங்களையும் நன்கு தெரிந்து கொண்டார்கள் என்று உரை(டை)த்துள்ளிர்கள் குறிப்பிட்ட இவ்வாசகம் மிகவும் அருமை ் பள்ளியின் மூலமாக அனைத்தயும் கற்றுக்கொண்டிருக்கிறார்களே அட டே!! ஆஹா! வாழ்க தமிழகம் ் ் ்ரெங்கேஸ்வரன்்்

    ReplyDelete