Wednesday, June 16, 2010

மது நேசர்களே.. உங்கள் கல்லீரலைப் பாருங்கள்.!

அடிக்கடி மதுவோடு குடித்தனம் நடத்துபவரா நீங்கள்? கொஞ்சம் இருங்க. உங்கள் கல்லீரல் என்ன நிலைமையில் உள்ளது என்பதைப் பாருங்கள். பிறகு தொடர்ந்து குடிப்பதைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முதலில் கல்லீரலைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய உடலில் நீர்மம் சுரக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்.

நாம் சாப்பிடும் சைவ அசைவ போன்ற எந்த உணவையும் செரிக்க வைப்பதற்குத் தேவையான பித்த நீரை உருவாக்குவது கல்லீரலின் முக்கியப் பணியாகும். இது மட்டுமின்றி இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை சுத்தம் செய்வது, இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, புரதப் பொருட்களை உண்டாக்குவது, உணவிலுள்ள நச்சுப் பொருட்களை சீர் செய்வது போன்ற பணிகளையும் செய்கிறது. இதனால்தான் கல்லீரலை வேதி தொழிற்சாலை என்று கூறுவர்.

மதுவிலுள்ள ஆல்கஹாலை அகற்றுவதற்காக கல்லீரல் கடுமையாகப் போராடும். அடிக்கடி மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைகிறது.


மேலே உள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஆரோக்கியமான கல்லீரல் எப்படி அழகாக அல்வா துண்டு மாதிரி இருக்கிறது, ஆல்கஹாலில் ஊறி நாசமடைந்த கல்லீரல் பார்க்கவே விகாரமாக இருக்கிறதல்லவா?

கல்லீரலுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா? தன்னுடைய கெட்டுப் போன அல்லது சிதைந்த திசுக்களை தானே மீளுருவாக்கம் செய்து கொள்ளும் தன்மையுடையது. ஆகவே அளவு மீறி மது அருந்தும் நண்பர்களே இப்போதிருந்தே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டால் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கலாம். இல்லையென்றால் கல்லீரல் கெட்டு கல்லறை பக்கமாகி விடும்..!

Sunday, June 13, 2010

என்னைக் கவர்ந்த ஹைக்கூக்கள்

கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று ஹைக்கூ. எளிமையான வார்த்தைகள் மற்றும் ஆழமான அர்த்தங்களால் கவிதை மேல் நாட்டம் இல்லாதவர்களைக் கூட ஹைக்கூ கவிதைகள் வசீகரிக்கும். அந்த வகையில் நான் ரசித்த சில ஹைக்கூக்கள்

சமத்துவபுரம்
கழிவு நீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்

யெஸ். பாலபாரதி

இடுகாடு
நிற்கும் பிணம்
பட்ட மரம்

-திருக்குவளை அறிவழகன்

வயல்வெளிகளில்
நிறைய முளைக்கின்றன
கட்டிடங்கள்

-செல்வ ஸ்டீபன்

உதிர்ந்த சருகுகள்
மீண்டும் கிளையில்
குருவிக்கூடு

இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்

-கவிக்கோ அப்துல் ரகுமான்

நடு பகல்
சுடு மணல்
பாவம்.. என் சுவடுகள்

-அறிவுமதி

திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு

-குடந்தை அன்புமணி

விடிந்த பிறகும்
மறையாத விண்மீன்கள்
குடிசையின் விரிசல்கள்

-பாக்யாவில் பிரசுரமான என் முதல் கவிதை.

நன்றாக இருக்கிறதா?
உங்கள் கருத்துக்களையும் ஹைக்கூக்களையும் எழுதுங்கள் நண்பர்களே

Monday, June 7, 2010

ஹுண்டாய் கார் நிறுவனத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

இந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் சென்னை இருங்காட்டுக்கோட்டையிலுள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலைக்குள் மூன்றாவது முறையாக வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தென்கொரிய நிறுவனமான ஹுண்டாய் தொழிற்சாலையில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து மூன்றாண்டுகளுக்கு முன் தொழிற்சங்கம் அமைத்தனர். அன்றிலிருந்து ஹுண்டாய் நிர்வாகம் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 87 பேர் வேலை நீக்கம் மற்றும் பலர் இடைநீக்கம், இடமாற்றம் என்று பல வழிகளிலும் தொழிலாளர்களை வஞ்சித்த நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இறுதியாக வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20 அன்று முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். தொழிலாளர் நல வாரியத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல அதிகாரியின் அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டதால் 18 நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஹுண்டாய் நிர்வாகம் அரசு அதிகாரியின் அறிவுரையை மீறி தான் உருவாக்கிய பணியாளர் குழு என்ற பொம்மை அமைப்போடு சம்பள ஒப்பந்தம் போட்டது.

அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் இரண்டாவது முறையாக ஆலைக்குள்ளேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரியின் அறிவுரை ஏற்பதாகவும் பணி நீக்கம் செய்யப்பட்டோரில் 20 பேரை வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததன் பேரில் வேலை நிறுத்தம் 6 நாடகளில் முடிவுக்கு வந்தது. 20 பேரை கருணை அடிப்படையில் பணி எடுத்துக் கொண்டதாக கூறிய நிர்வாகம் இன்னும் அவர்களை நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளது. மேலும் வேதாளம் முருங்கை ஏறிய கதையாக, தொழிலாளர் நல வாரியத்தினரின் அறிவுரையை மீறி மீண்டும் பணியாளர் குழு என்ற பொம்மை அமைப்பை அமைக்கத் தேர்தல் நடத்த முயற்சி எடுத்தது.

கடும் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் மூன்றாம் கட்டமாக டிசம்பர் மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் விடுத்தனர். இந்த சமயம் கொரிய அதிபர் இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்பதாக இருந்ததால் ஹுண்டாய் நிர்வாகத்தினர் உடனடியாக வேலை நீக்கத்தில் மீதியுள்ள 67 பேர் தொடர்பாக தொழிலாளர் நல வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவதாக உறுதியளித்தது. அதன் பேரில் அரசு அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழு 67 பேரின் வழக்குகளை ஆய்வு செய்து முதற்கட்டமாக 35 பேரை மீண்டும் பணியில் அமர்த்த அறிவுருத்தியது.

தென் கொரிய அதிபரின் இந்திய வருகை நல்லபடியாக முடிந்து திரும்பிய பிறகு மீண்டும் தன் வேலையைக் காட்டியது ஹுண்டாய் நிர்வாகம். அரசின் அறிவுரையை ஏற்காமல் தட்டிக் கழித்தது. மேலும் பணி நீக்கம் செய்யப்ட்ட தொழிலாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து அனுப்பி விடலாம் என்று முயற்சி எடுத்து வருகிறது.

மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், நேற்று தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர்களை இடை நீக்கம் செய்தது. அதிருப்தியின் எல்லைக்குச் சென்ற தொழிலாளர்கள் நேற்று இரவிலிருந்து ஆலைக்கு உள்ளேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுளளனர்.

Friday, May 21, 2010

லைலா புயலும் பாகிஸ்தானும்.!

வங்கக் கடல் பகுதியை ஆட்டுவித்து அடங்கியிருக்கும் லைலா புயலுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? இருக்கிறதே.. இப்புயலுக்கு லைலா என்ற பெயர் பாகிஸ்தான் வைத்ததாகும் என்பதுதான் அது. வேறு எந்த தொடர்பும் இல்லை! இந்தியாவைத் தாக்கிய புயலுக்கு பாகிஸ்தான் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முதலில் புயலுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
உலகில் 1970க்கு முன்பு வரை புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இல்லை. வானிலை ஆய்வு மையங்கள் 1A, 1B என ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி புயலுக்குப் பெயர் வைத்து வந்தன. 1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின் போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியைச் சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதன்முறையாகக் கேட்டுக் கொண்டது. அதே போல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு -ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்தப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளைக் கேட்டுக்கொண்டது.
அதன்படி, வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இந்தியா, வங்க தேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்கள் கொண்ட பட்டியலைத் தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலிலிருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்ட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்டுகிறது. இதுபோல் 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி தற்போது அடித்து ஓய்ந்திருக்கும் புயலுக்கு பாகிஸ்தானின் 'லைலா' பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன் ஓமன் பரிந்துரை செய்த வார்டு என்ற பெயர் வைக்கப்பட்டது.

இதுதாங்க லைலா புயலுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு.! சரி அது போகட்டும் அடுத்த புயலுக்கு என்ன பெயர்?
அடுத்த புயலுக்கு பெயர் தயாராக இருக்கிறது. இலங்கை தேர்வு செய்த 'பண்டு' என்ற பெயர்தான் அது. பண்டு என்ன செய்யும்? காத்திருப்போம்..

Saturday, May 8, 2010

சடங்கு.!

எவரேனும் ஒருவர்
தோள் கொடுத்திருந்தால் போதும்..
அவர்
சாய்ந்திருக்க மாட்டார்
இதோ
இப்பொழுது நான்கு தோள்கள்
அவரைச் சுமக்கின்றன.!

ஏதேனும் ஒரு விழி
இரக்கப் பார்வை
வீசியிருந்தால் கூடப்போதும்
அவர்
வாழ்ந்திருக்கக் கூடும்
இதோ
இப்பொழுது எத்தனையோ விழிகள்
கண்ணீர் வடிக்கின்றன!

யாரேனும் ஒருவர்
வழி காட்டியிருந்தால்
அவர் பயணம்
முடிந்து போயிருக்காது
இதோ
இப்பொழுது எத்தனையோ பேர்
வழியனுப்ப வந்திருக்கிறார்கள்!

வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காதவர்
வாய்க்கு மட்டும்
இன்று அரியும் பாலும்!

வறுமையில் வாடி
உதிர்ந்தவர்
இதோ இங்கே
பூத்துக் கிடக்கிறார்
மாலைகளால்!

நடந்த காலங்களில்
அவருக்கு
வழி தராதவர்கள்
இதோ
இப்பொழுது வீதியெங்கும்
மலர் தூவுகிறார்கள்..
பாவம் அவர் பாதங்களோ
பாடையில்..!