என் மழலைப் பருவத்தை
வசந்தமாக்கிய மாளிகை
சுகங்களை மட்டுமே
மனத்தில் நிறுத்திய
என் பிறந்த வீடு
விழுவது விழாமல் இருக்கத்தான்
அழுவது அழாமலிருக்கத்தான் எனும்
ஆரம்பப் பாடம் கற்றுத் தந்த
குருகுலம்
நிறைந்த மனமே
நிம்மதியின் இருப்பிடமென
அனுபவித்துத் தெரிந்த
ஆலயம்
நான்
கைக்குழந்தையாய் இருக்கையில்
கைமாறியதாம் இது
எங்கள் வீடாக
அம்மாவின் அணிகலன்கள்
அதற்கு ஈடாக
ஒரு வீடாய்த் தெரியும்
இது பெரியத்தாவுடையதும்
சேர்த்த இரு வீடு
இடையில் இருக்கவில்லை
இடைவெளி
முன்னே
பாய் நெய்யத் தறி போடுமளவு
திண்ணை
பின்னே
அம்மியும் அங்கணமும்
ஒரு பக்கம்
விறகடுப்பும் பாத்திரத் திண்டும்
மறு பக்கம்
ஊதுகுழலோடு அம்மா
உட்கார
இடையில் கொஞ்சம்
இடமுங் கொண்ட
அடுப்படி
மத்தியில்
வரவேற்பு அறை
படுக்கையறை படிப்பறை
உணவறை ஓய்வறை
எல்லாமுமாய் ஓர் அறை
மேலே
இரவல் ஏணியில் ஏறி
குறுக்கு வளைத்து
நெல் காயப் போட
மச்சி
முன்னால்
வேம்பும் முருங்கையும் நிழலிடும்
வீட்டைக் காட்டிலும்
விசாலமான முற்றம்
இவை
மற்றவர்கள் சொல்லும்
இந்த வீட்டின்
அளவீடுகள்
இந்தத் திண்ணைதான்
எத்தனை எத்தனைக்
கதைகள் கேட்டுருக்கும்?
அடுத்த தெரு
தண்ணிச் சண்டையிலிருந்து
அமெரிக்காவுக்கு சதாம்
தண்ணி காட்டியது வரை
இங்கே வாய் பிளந்து
கேட்ட அரட்டகள்தான் எத்தனை
மூலையில் இருக்கும்
அந்த ஆட்டுக்கல்
ஆட்டுவதை விட அமர்வதற்கே
அதிகம் பயன்பட்டிருக்கும்
அதோ
அந்த வாசல் நிலை
குழந்தைகளை மட்டுமே
நிமிர்ந்து வர அனுமதிக்கும்
பெரியவர்களை குனியச் செய்யும்
மறந்து நிமிர்ந்தால்
மறக்காமல் குட்டு வைக்கும்
இந்தக் கதவு
திறந்திருந்த காலங்களே
அதிகம்
இதன் திறவுகோல்
திறப்பதை காட்டிலும்
தேங்காய் உடைப்பதற்கே
தேவைப்பட்டது அதிகமாக
இந்தக் கதவில் ஆடிய
ஊஞ்சலின் சுகத்தை
எந்த ராட்டினம் தந்திருக்கும்?
வெய்யிற் காலம் நோன்பிருந்து
வெருந்தரையில்
சுருண்டு கிடந்ததும் இங்கேதான்
மழைக் காலம்
வடியும் நீர் பிடித்து
குடிநீராக்கியதும் இங்கேதான்
சிம்னி வெளிச்சத்தில்
சிலேட்டில் கோணலாக
வீட்டுப்பாடம் எழுதியதும்
இங்கேதான்
பின்னே
மின் இணைப்பு பெற்று
குழல் விளக்கெரிய
பெத்தா மூக்கில் விரல் வைத்ததும்
இங்கேதான்
பழைய சோறும்
அமிர்தமாய் தெரிய
பசித்து உண்டதும்
இங்கேதான்
வடக்குத் தெரு வரை
வாசம் செல்லும்
தேங்காய் சோறும் கறியானமும்
சேர்ந்து ருசிக்க
பெருநாள் கிடைத்ததும்
இங்கேதான்
பண்டம் கிடைத்தால்
பாகம் பிரித்து
பகிர்ந்து உண்டதும்
இங்கேதான்
சண்டை போட்டு
காலையில் பிரிந்து
மாலையில் சேரும்
உறவுகள் பெற்றதும்
இங்கேதான்
முன்னிரவு முற்றத்தில் பாய்விரித்து
அக்கா சொல்லும்
குருவிக் கதை கேட்டு
பாதியில் தூங்கியதும்
இங்கேதான்
அதிகாலையில் தொழ
அலாரம் இன்றி
அம்மா விழித்து
எழுப்பி விட்டதும்
இங்கேதான்
ஏழாம் வகுப்பில்
ஊரைப் பிரிந்து சென்றபோது
பிரிவின் வலியை
முதலில் உணர்த்தியதும்
இந்த வீடுதான்
எந்திரலோகச் சென்னையில்
வாடகைக் கொள்ளையரிடம் சிக்கி
வசவு கேட்ட போதெல்லாம்
திரும்பிடலாமா ஊருக்கு என
நினைக்க வைத்ததும்
இதே வீடுதான்
பின்னாளில்
பளிங்குத் தரையும்
குளிரும் அறையுமாக
சொந்த வீடு கட்டியும்
மீட்க முடியாத
அமைதியைத் தந்ததும்
இந்த வீடு மட்டுமேதான்
மழைக் காலம்
வரும் போதெல்லாம்
ஞாபகப்படுத்தும் இந்த
மண் மாளிகை
காலாவதியைக் கடந்து விட்டதை
இனி செப்பனிட ஏதுமில்லை
தானாய் விழும் முன்
நாமாய் இடிப்பது நல்லதென
கொத்தனார் நாள் குறிக்க
மனதைக் கல்லினும் கல்லாக்கி
இந்த மண் மாளிகையை
மண்ணோடு மண்ணாக்கிய போது
கண்களில் பொங்கிய நீருக்கு
கரையிட முடியவில்லை!
இடிபடும் முன்னால் இல்லை
விடைபெறும் முன்னால்
நோக்கியாவின் தயவில்
முதலும் கடைசியுமாய்
எடுத்த படங்கள் மட்டுமே மிச்சமாய்
இறைவன் நாடினால்...
நாளை நானிருந்தால்..
வேண்டா வெறுப்பாய் கேட்டாலும்
என் விழுதுகளுக்கு
விளக்கிச் சொல்வேன்
என் வேர்கள்
இந்த மண்ணிலிருந்துதான்
புறப்பட்டனவென்று.!
Tweet | ||||||