Friday, May 21, 2010

லைலா புயலும் பாகிஸ்தானும்.!

வங்கக் கடல் பகுதியை ஆட்டுவித்து அடங்கியிருக்கும் லைலா புயலுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? இருக்கிறதே.. இப்புயலுக்கு லைலா என்ற பெயர் பாகிஸ்தான் வைத்ததாகும் என்பதுதான் அது. வேறு எந்த தொடர்பும் இல்லை! இந்தியாவைத் தாக்கிய புயலுக்கு பாகிஸ்தான் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முதலில் புயலுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
உலகில் 1970க்கு முன்பு வரை புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இல்லை. வானிலை ஆய்வு மையங்கள் 1A, 1B என ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி புயலுக்குப் பெயர் வைத்து வந்தன. 1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின் போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியைச் சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதன்முறையாகக் கேட்டுக் கொண்டது. அதே போல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு -ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்தப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளைக் கேட்டுக்கொண்டது.
அதன்படி, வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இந்தியா, வங்க தேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்கள் கொண்ட பட்டியலைத் தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலிலிருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்ட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்டுகிறது. இதுபோல் 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி தற்போது அடித்து ஓய்ந்திருக்கும் புயலுக்கு பாகிஸ்தானின் 'லைலா' பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன் ஓமன் பரிந்துரை செய்த வார்டு என்ற பெயர் வைக்கப்பட்டது.

இதுதாங்க லைலா புயலுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு.! சரி அது போகட்டும் அடுத்த புயலுக்கு என்ன பெயர்?
அடுத்த புயலுக்கு பெயர் தயாராக இருக்கிறது. இலங்கை தேர்வு செய்த 'பண்டு' என்ற பெயர்தான் அது. பண்டு என்ன செய்யும்? காத்திருப்போம்..

Saturday, May 8, 2010

சடங்கு.!

எவரேனும் ஒருவர்
தோள் கொடுத்திருந்தால் போதும்..
அவர்
சாய்ந்திருக்க மாட்டார்
இதோ
இப்பொழுது நான்கு தோள்கள்
அவரைச் சுமக்கின்றன.!

ஏதேனும் ஒரு விழி
இரக்கப் பார்வை
வீசியிருந்தால் கூடப்போதும்
அவர்
வாழ்ந்திருக்கக் கூடும்
இதோ
இப்பொழுது எத்தனையோ விழிகள்
கண்ணீர் வடிக்கின்றன!

யாரேனும் ஒருவர்
வழி காட்டியிருந்தால்
அவர் பயணம்
முடிந்து போயிருக்காது
இதோ
இப்பொழுது எத்தனையோ பேர்
வழியனுப்ப வந்திருக்கிறார்கள்!

வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காதவர்
வாய்க்கு மட்டும்
இன்று அரியும் பாலும்!

வறுமையில் வாடி
உதிர்ந்தவர்
இதோ இங்கே
பூத்துக் கிடக்கிறார்
மாலைகளால்!

நடந்த காலங்களில்
அவருக்கு
வழி தராதவர்கள்
இதோ
இப்பொழுது வீதியெங்கும்
மலர் தூவுகிறார்கள்..
பாவம் அவர் பாதங்களோ
பாடையில்..!

Saturday, February 13, 2010

சூடான டீயா? ஆ...பத்து.!

சூடான டீயை ஆவி பறக்க அவசரமாய் குடிப்பவர்களா நீங்கள்? கொஞ்சம் சூடு குறைந்தாலும் நீங்கள் ரொம்ப சூடாகி விடுவீர்களா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சூடான செய்திதான் இது. கொஞ்சம் ஆற அமர படியுங்கள்.

அதிக சூடாக டீ குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ட்ர(Oesophagus cancer) வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வில் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயின் பல்வேறு வகைகளில் ஒன்று உணவுக்குழாய் புற்றுநோயாகும். இந்நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். மும்பையிலுள்ள டாடா நினைவு மருத்துவனை நிபுணர்கள் 1500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பின்வரும் தகவல்கள் அறியப்பட்டன.

வாய் முதல் இரப்பை வரையுள்ள உணவுக்குழாய் மிக மிருதுவானது. அதிக சூடாக டீ குடிப்பதால் உணவுக்கழாயின் சுவர்கள் அரிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமாகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் அபாயமுள்ளது.

பான்பராக், புகையிலை போடுபவர்களுக்கு 1.1 மடங்கும் பீடி குடிப்பவர்களுக்கு 1.8 மடங்கும் சிகரெட் பிடிப்போருக்கு 2 மடங்கும் மது அருந்துவோருக்கு 1.8 மடங்கும் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் விட சூடாக டீ குடிப்போருக்கு 4 மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளதாம்.

உலகின் வேறு சில நாடுகளிலும் இதே போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கேன்சர் ஆராய்ச்சி இதழான International cancer epidoliogy ல் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Thursday, February 11, 2010

இடிபாடுகளுக்குள் 29 நாட்கள்.!

உணவு தண்ணீரின்றி மனிதன் ஒரு வாரம் இருப்பதே பெரிய விஷயம். இந்நிலையில் 29 நாட்கள் அதுவும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட ஒரு மனிதர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் என்றால் அதிசயம் இல்லையா?

அண்மையில் ஹைதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட Muncie என்ற இந்த 28 வயது மனிதர் 29 நாட்கள் மரண போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இவரது கை வெள்யே தெரிந்ததைப் பார்த்த மீட்புக்குழுவினர் ஏதோ பிணம் என்று நினைத்து வெளியே எடுத்தனர். பின்பு லேசான சுவாசம் இருப்பது தெரிந்ததும் மருத்துவமனையில் அனுமதித்து பிழைக்க வைத்தனர்.

Thursday, February 4, 2010

குழந்தைக்குள் குழந்தை.!

சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்று பரபரப்பு ஏற்படுத்தினாள். பள்ளியில் படிக்கும் சக மாணவனோடு ஏற்பட்ட உறவால் கர்ப்பமான இச்சிறுமிக்கு 29.1.10 அன்று அறுவை சிகிச்சை மூலம் 2.75kg எடையுள்ள குழந்தை பிறந்தது.
சீனாவின் Shangaiயிலுள்ள மருத்துவமனைகள் தரும் தகவல்படி கருக்கலைப்பு செய்யும் இளம்பெண்களில் 30% பேர் பள்ளி குழந்தைகளாம்!

ஆசியாவிலேயே மிகக்குறைந்த வயதில் குழந்தை பெற்றது இந்த சிறுமிதானாம். அப்படியென்றால் உலகிலேயே இள வயது தாய் யார் என்பதற்கான விடை தேடி விக்கிபீடியாவுக்குள் பார்த்தால் இதை விட அதிர்ச்சியான செய்தி இருந்தது. மேலே படத்திலுள்ள சிறுமிதான் உலகிலேயே குறைந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்.
பெரு நாட்டை சேர்ந்த Lina Medina என்ற இந்த சிறுமி தாய்மையடைந்தபோது 5 வயதே ஆகியிருந்தது.!
1933ம் ஆண்டு செப்டம்பர் 27ல் பிறந்த Lina வுக்கு 1939, மே14ல் அறுவை சிகிச்சை மூலம் 2.7Kg எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
Lina medina 76 வயது கடந்து இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் மகன் 40வது வயதில் Bone marrow என்ற நோயால் இறந்தார்.