Thursday, March 1, 2012

பேஸ்புக் மீட்டுக் கொடுத்த பழைய நண்பன்!

நூறு கோடிப் பயனர்களை நோக்கிய அதிவேகப் பயணத்தில் சென்று கொண்டிருக்கும் பேஸ்புக்கில் அப்படி என்னதான் இருக்கிறது?
பலரும் பயன்படுத்தும் தேடுதளமான கூகுளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் முத்திரை பதிக்கக் காரணம் என்ன?
இன்னும் எதுவரை பேஸ்புக் சாதிக்கும்?
இந்தக கேள்விளுக்கான பதில்களைப் பார்ப்பதற்கு முன் என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் எனது ஐடிஐ கால நினைவுகளைத் தோண்டியெடுத்து தொடர்பு அறுந்து போன பழைய நண்பர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு எங்கே இருக்கின்றீர்கள் நண்பர்களே என்ற தலைப்பில் பதிவிட்டுருந்தேன்.

அதில் ஒரு நண்பன் சுந்தரராஜன். அண்மையில் பேஸ்புக்கில் என்னைக் கண்டுபிடித்து நட்பு கோரிய போது என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எங்கள் நட்பு துளிர் விட்டதில் துள்ளிக் குதித்தது மனது. சுந்தரராஜனுக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமாக இல்லாத சாதாரண நட்பாக இருந்தாலும் அவன் செய்த சிறு உதவி என் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனைக்கு வித்திட்டதென்றால் அது மிகையாகாது. அது என்னவென்று பார்ப்பதற்கு முன் அவனைப் பற்றிய சிறுகுறிப்பு வரைந்து விடுகிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்குப் பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பட்டங்காடு என்ற கிராமம்தான் நண்பனின் சொந்த ஊர். அதனால் அவனை பட்டங்காடு என்ற பட்டப்பெயரிலேயே செல்லமாக அழைப்போம். பனை மற்றும் பனை சார்ந்த தொழில்தான் அவன் குடும்பத் தொழில். நெல்லைப் பேட்டை ஐடிஐயில் இயந்திரப் பணியாளர் (Machinist) பிரிவில் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். தினமும் ஐடிஐக்கு ரயில் பயணமாக வந்து சேர்வான்.

கள்ளமில்லாத கிராமத்துப் பேச்சு, குழந்தைத் தனமான முகம், கலகலப்பான சிரிப்பு, சுறுசுறுப்பு இவைதான் சுந்தரராஜனை மற்ற நண்பர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்கள். அவன் கிராமத்துப் பேச்சின் இசைநயத்திற்காகவே அடிக்கடி அவனை பேசச்சொல்லி ரசிப்போம். அப்போ நீங்கல்லாம் என்ன சிட்டியா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நெல்லைத் தமிழின் ஓசை நயத்தில் பல உட்பிரிவுகள் உண்டு.

இது மட்டுமல்லாமல் நண்பனுக்கு பொறுமையும் கடின உழைப்பும் தியாக மனப்பான்மையும் அதிகமுண்டு. எந்தளவுக்கென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய தியரி, நுணுக்கமாக வரைய வேண்டிய வரைபடங்கள், நீண்ட நேரம் நின்று இயந்திரத்தை இயக்குதல் இவை போன்ற பொறுமையை சோதிக்கும் காரியங்களை சில பொறுமையற்ற நண்பர்கள் இவனிடத்தில் ஒப்படைத்து விடுவார்கள். இவனும் சளைக்காமல் அவற்றையெல்லாம் செய்து கொடுப்பான்.

இவ்வாறு அன்று நண்பர்களுக்காக சேவகம் செய்தவன், இன்று நாட்டு மக்கள் அனைவருக்காகவும் சேவகம் செய்து கொண்டிருக்கிறான். ஆம் நண்பன் சுந்தரராஜன் இப்போது இராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறான்.

நண்பன் சுந்தரராஜன்

பனி மழை பொழியும் காஷ்மீரில் பனி மலைகளுக்கிடையே துப்பாக்கியோடு எல்லை காக்கும் படை வீரனாகப் பார்க்கும் போது அவனை நண்பனாகக் கொண்டதற்காக பெருமையாக இருக்கிறது. ஆனாலும் அவன் பகிர்ந்து கொண்ட இன்னொரு விஷயம் எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. அது என்ன? அதற்கு முன்னால் அவன் செய்த சிறு உதவி என் வாழ்வில் திருப்புமுனையானது என்று சொன்னேனல்லவா அந்த பிளாஷ்பேக்கை பார்த்து விடலாம்.

அது 1999ஆம் வருடம். ஐடிஐ வாழ்விலிருந்து விடைபெற இன்னும் சில மாதங்களே இருந்தது. நான் உள்ளூர் என்பதால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு சென்று வருவேன். அன்றும் அப்படித்தான் சாப்பிட்டு விட்டு சாவகாசமாக சைக்கிளில் வந்து ஐடிஐயில் பரந்து விரிந்து கிடக்கும் அரச மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினேன். வழக்கமாக மதியத்திற்கு பிறகு பிராக்டிகல் என்பதால் பணிமனைக்குள் நுழைந்தேன். அங்கே நண்பர்கள் யாரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எங்கள் பயிற்சி ஆசிரியர் செல்லக்கனி

"ஏல இங்க என்ன செஞ்சிட்டு இருக்க நீ? அங்க எதோ கார் கம்பனிலருந்து வேலைக்கு ஆள் எடுக்க வந்திருக்காங்க நீ போவலியா?" என்றார் வேகமாக

நான் "எனக்குத் தெரியாதே.. எங்க இருக்காங்க சார்?" என்று கேட்க அவர்,

"MRTV பக்கத்துல இருக்க கிளாஸ் ரூம்ல ரிட்டன் டெஸ்ட் நடக்கு. சீக்கிரமா ஓடுல" என்று விரட்டினார்.

ஒரே ஓட்டமாய் ஓடினேன். கிளாஸ் ரூம் வாசல்ல நின்னிட்டுருந்தவர்
"தம்பி 18 வயசு கம்பிளீட் ஆயிருந்தா மட்டும்தான் எழுத முடியும்." என்றார்.

10ம் வகுப்பு சான்றிதழ் படி என் பிறந்தநாள் 5.4.1981 என்பதால் எனக்கு 18 வயது பூர்த்தியாகி இருந்தது. ஆனால் உண்மையில் நான் பிறந்தது 5.6.1982. எட்டாம் வகுப்புக்காக பள்ளி மாறிய போது ஒரு புண்ணியவான் தவறுதலாக மாற்றிப் போட்டு விட்டார். ஆனால் அதற்காக நான் பல நாட்கள் வருத்தப்பட்டதுண்டு. ஆனால் அதுவே என் தலையெழுத்து மாறுவதற்கு காரணமாக அமைந்தது.

சரி விஷயத்துக்கு வருவோம். எழுத்து தேர்வுக்கு வகுப்பறைக்குள் நுழையப் போகும் முன் சட்டைப்பையைத் தடவிப் பார்த்தால் பேனா இல்லை. அப்போதும் சரி இப்போதும் சரி பேனா என்னிடம் நிரந்தரமாகத் தங்கியதே இல்லை. அன்றும் அப்படித்தான் தொலைத்திருந்தேன். படபடப்போடு சுற்றும் முற்றும் பார்த்த போதுதான் நண்பன் சுந்தரராஜ் அங்கே தென்பட்டான். அவன் வயதுக்கு (18) வரவில்லை என்பதால் தேர்வுக்கு அவனை அனுமதிக்கவில்லை. என் தவிப்பைப் பார்த்த அவன் தன் பேனாவைக் கொடுத்து வாழ்த்தி அனுப்பினான்.

அவனிடத்தில் பேனாவை இரவல்
வாங்கி தேர்வு எழுதி தேர்ச்சியும்
பெற்று பிறகு நடந்த நேர்முகத்
தேர்விலும் தேர்வு பெற்றேன். அதன்
பிறகு ஜூலை 31ம்
தேதி நெல்லையிலிருந்து மூட்டை முடிச்சுகளைக்
கட்டிக் கொண்டு தேர்வான சக
நண்பர்களோடு சென்னை வந்து பணியில்
சேர்ந்து பிறகு பணி நிரந்தமாகி சென்னையில்
இடம் வாங்கி, வீடு கட்டி, திருமணம்
முடித்து இரண்டு குழந்தைகளுக்குத்
தகப்பனாகி....
13 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

பேனா கொடுத்தது என்ன பெரிய
உதவியா என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அந்த நேரத்தில்
அது கிடைத்திரா விட்டால்
அல்லது தாமதமாகியிருந்தால் நான்
அந்த தேர்வு எழுதியிருக்க முடியாது.
என் வாழ்க்கைப் பயணம்
மாறியிருந்திருக்கும். ஒரு நல்ல
வாய்ப்பை நழுவ
விட்டு விட்டோமே என்ற பரிதவிப்புடன்
இருந்திருப்பேன்.

காலத்தினாற்
செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


என்று வள்ளுவர் சொல்வது போல சிறிய
உதவியென்றாலும் என்னைப்
பொருத்தவரை அது பெரிய
உதவியாகி மனதில் மறக்க முடியாத
நினைவாக தங்கி விட்டது. பேஸ்புக்கில்
நண்பனிடம்
இதை சொன்னபோது அப்படியா என
ஆச்சரியப்பட்டு தேங்க்ஸ் டு காட்
என்றான் தன்னடக்கத்தோடு. ஆம்.!
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
பட்டங்காட்டில் பனையேறிய நண்பன்
பட்டாளத்துக்கு சென்று மலையேறி விட்டதில்
சந்தோஷமாக இருந்தாலும் வருத்தமான
விஷயம் என்னவென்றால் அவன்
திருமணம் பற்றி நான்
கேட்டபோது தனக்கு இன்னும்
திருமணமாகவில்லை என்றும் பல
இடங்களில் பெண் பார்த்தும் தான்
இராணுவத்தில் இருப்பதால்
மறுத்துவிட்டதாகவும் மிக
நெருக்கமான உறவினர் கூட இதில்
விதிவிலக்கல்ல என்றும் தெரிவித்தான்.
அடடா என்ன உலகம் இது. யார்
யாருக்கோ அடிமைச் சேவகம் செய்து,
மனைவி குழந்தைகளையெல்லாம்
பிரிந்திருக்க நேரிடும் என்று தெரிந்தும்
வெளிநாடுகளில்
வேலை செய்வோருக்குத் தயங்காமல்
தங்கள் பெண்ணை மணம் முடித்துக்
கொடுக்கும் பெற்றோர், சொந்த நாட்டில்
கம்பீரமாக நாட்டைக் காக்கும்
பணியிலிருப்பவனுக்கு பெண் தர
மறுப்பது கொடுமையல்லவா?
நிச்சயம் என் நண்பனுக்கு அவன்
மனதைப் புரிந்து கொண்ட மணப்பெண்
கிடைக்கும் என்ற
நம்பிக்கையோடு அவனுடனான நட்புப்
பயணம் தொடர்கிறது பேஸ்புக்
வழியாக.

பேஸ்புக்கின் அபார
வளர்ச்சி பற்றி ஆரம்பத்தில்
சொன்னேனல்லவா? நாடு, மொழி, இனம்
போன்ற எல்லைகளைக் கடந்த
நண்பர்களை உருவாக்கித்
தருவதோடு எங்கோ எப்போதோ முடிந்து போன
பழைய நட்புகளையும் மீட்டுத்
தருவதால்தான் பேஸ்புக்
இன்று பலருக்கு அன்றாட வாழ்வின்
ஓர் அங்கமாகி விட்டது.
நண்பனை மீட்டுத் தந்த
பேஸ்புக்கிற்கு நன்றி.!

ஊர்
உறவு நட்பு வட்டாரத்தையெல்லாம்
விட்டு காஷ்மீரத்து எல்லையில்
இருக்கும் நண்பனுக்கு இப்போதைய
ஒரே ஆறுதல் பேஸ்புக் நட்புகள்தான்.
நண்பர்களே நீங்களும்
அவனுக்கு ஆறுதல் தர நினைத்தால்...
பேஸ்புக்கில் நண்பன் சுந்தரராஜனின்
முகவரி
http://
facebook.com/profile.php?
id=100003302821002

எனது முகவரி(ஹி..ஹி..)
http://
facebook.com/iammeeran/

Sunday, February 12, 2012

சரியான கோணத்தில் தினமணி தலையங்கம்!

சென்னையில்
மாணவன் ஒருவன் ஆசிரியரைக் குத்திக்
கொன்ற சம்பவம் பற்றி பலவிதமான
கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றது.
இது குறித்து தினமணியின் வெளியான
தலையங்கம், பிரச்சனையை சரியான
கோணத்தில்
ஆய்வு செய்து எழுதியிருப்பதாக
எனக்குப் படுகிறது. அதை உங்களுடன்
இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
.

வியாழக்கிழமை தொலைக்காட்சிச்
செய்திகளைப் பார்த்துக்
கொண்டிருந்தவர்கள் அனைவரையும்
அதிர்ச்சியில் உறைய வைத்தது,
சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன்
ஒருவன் வகுப்பு அறையில்
ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக்
கொலை செய்த சம்பவம். 39 வயதான
உமா மகேஸ்வரி, ஆசிரியர்
பணியை மக்கள் சேவையாகக் கருதி,
தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்
என்பதை அறியும்போது,
கொலையுண்டிருப்பது ஓர்
ஆசிரியையா அல்லது தமிழகத்தின்
வருங்காலமா என்று நெஞ்சம்
துணுக்குறுகிறது.

அதே சென்னையில்
இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில்
எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19
வயது இளம் பெண்ணை, அவரிடம்
நண்பர்களாகப் பழகிய
நான்கு இளைஞர்கள் வஞ்சகமாக
அழைத்துச் சென்று, அவருக்குக்
குளிர்பானத்தில் மதுவைக்
கலந்து கொடுத்து வெறித்தனமாகக்
கற்பழித்திருக்கிறார்கள். அந்த
நான்கு பேரும் மாணவர்கள். அதிலும்
பொறியியல் படிக்கும் மாணவர்கள்.

இளம் தலைமுறையினர் மத்தியில்
காணப்படும் பொறுமையின்மைக்கும்,
வெறித்தனமான பிடிவாதங்களுக்கும்,
கட்டுப்பாடில்லாத ஒழுக்கக்
கேடுகளுக்கும் அடிப்படைக்
காரணங்கள்
இறையுணர்வு இல்லாமையும்,
நுகர்வுக் கலாசாரத்தின்
தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த
கருத்து. அதிலும் குறிப்பாக, நுகர்வுக்
கலாசாரம் கட்டவிழ்த்து விட்டிருக்கும்
ஒழுக்கக் கேடுகளில் முக்கியப்
பங்கு வகிப்பது வக்கிரத்தனங்களின்
ஊற்றுக்கண்ணாக விளங்கும்
காட்சி ஊடகங்களும்,
வெறித்தனத்துக்கு வழிகோலும் மதுப்
பழக்கமும்தான் இந்தப் போக்குக்குக்
காரணங்கள்.


இறையுணர்வாளர்கள்
தவறிழைக்கவில்லையா? இறைவனின்
பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகள்
கொஞ்சமா நஞ்சமா?
ஆஷாடபூதிகளாகவும், ருத்திராட்சப்
பூனைகளாகவும், கபட வேட
தாரிகளாகவும் எத்தனையோ பேர்
காவி உடை தரித்த,
வெள்ளை அங்கியை அணிந்த
காமுகர்களாக உலவினார்கள்
தெரியுமா? என்றெல்லாம்
இறை மறுப்பாளர்கள்
எதிர்க்கேள்வி எழுப்பக்கூடும். அவர்கள்
கூறுவது எல்லாம் பொய் என்று நாம்
மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ தயாராக
இல்லை.

அதேசமயம்,
இறையுணர்வு என்பது பரவலாக,
சமுதாயத்தில் ஒழுக்கத்தையும்
நேர்மையையும் தவறு செய்தால்
இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக
பய உணர்வையும்
ஏற்படுத்தி வந்திருக்கிறது. கபடவேட
தாரிகள் சாமியார்களாகவும்,
பாதிரியார்களாகவும்,
மௌலவிகளாகவும் உலவி இருக்கலாம்.
ஆனால், அப்படி நடந்துகொண்ட
ஒரு சிலரைக் காரணம்
காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப்
போதித்த தெய்வத் தொண்டர்கள்
அனைவரையும் நாம்
இழிவு செய்துவிட முடியாது.
கூடாது!

இளைஞர்களுக்கு ஆன்மிக
போதனை நடத்தி வந்த காலகட்டத்தில்,
பேராசைக்கு இடம் கொடுக்காதே,
ஒழுக்கம்தான் உயர்வு தரும்,
இறை நம்பிக்கை உன்னைக்
காப்பாற்றும்
என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல
போதனைகளைப் பள்ளிகளிலும்
வீட்டிலும் ஊட்டி வளர்த்துவந்த
காலங்களில்
எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள்
நடந்ததுபோக, இப்போது இளைஞர்கள்
பாதை தவறி நடப்பது என்பதே ஒரு நெறியாக
மாறி விட்டிருக்கிறது என்பதுதான்
உண்மை.

கடவுள் என்று ஒருவர்
இல்லையென்றால்,
அப்படி ஒருவரை நாம்
கண்டுபிடித்து நிலைநிறுத்தியாக
வேண்டும் என்பார் பிரெஞ்சுப்
புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர்
வால்டேர். பள்ளிகளில்
இறையுணர்வு போதிக்கப்பட்டது.
ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தனும்,
உலக நீதியும், மூதுரையும்
பிஞ்சு உள்ளங்களை நெறிப்படுத்த
சொல்லிக் கொடுக்கப்பட்டன. இப்போதைய
நர்சரி ரைம்ஸ் கல்வி முறை,
பணத்தைத் தேடுவதும்
வாழ்க்கை வசதிகளைத் தேடுவதும்,
சிற்றின்ப
சந்தோஷங்களுக்கு வழிகோலுவதும்
மட்டுமே தனது குறிக்கோள்
என்று மாறிவிட்டிருப்பதன்
வெளிப்பாடுதான் சென்னையில்
நடந்தேறியிருக்கும் அந்த
இருவேறு சம்பவங்கள்.

கற்பழிக்கப்பட்ட பெண்,
தனது நண்பர்கள் என்று அந்த
நான்கு மாணவர்களையும்
வீட்டுக்கு அழைத்துக்
கொண்டு வந்து தாய்க்கு அறிமுகப்படுத்தியபோது,
சகோதரிபோலத் தனது மகளுடன்
பழகுகிறார்கள் என்று அந்தத் தாய்
கருதி அதை அங்கீகரித்ததன்
விளைவுதான் இன்று கற்பழிப்பில்
முடிந்திருக்கிறது என்று நாம்
சொன்னால் நம்மைப் பழமைவாதிகள்
என்று ஒதுக்கக்கூடும். ஆனால்,
அதுதானே நிஜம்?

ஆணும் பெண்ணும் நண்பர்களாக
இருப்பதுபோலத் திரைப்படங்களும்,
தொலைக்காட்சித் தொடர்களும்,
கதைகளும் பரவலாக
வெளிவருகின்றன.
அவை நடைமுறையில்
சாத்தியம்தானா என்பதை நினைத்துப்
பார்க்கக்கூட திராணியற்றவர்களாக
நாம் மாறிவிட்டிருக்கிறோம். காரணம்
இதைத் தவிர்க்க முடியாது என்கிற
சூழ்நிலையை இன்றைய நுகர்வுக்
கலாசாரச் சூழல்
உருவாக்கி விட்டிருக்கிறது.

திரைப்படங்கள் சமுதாய
சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுபோய்
சமுதாயச் சீரழிவுக்கு வழிகோலிக்
கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில்
காதலைத் தவிர,
வேறு உணர்வுகளே இல்லை என்பதுபோன்ற
பிரமையை ஏற்படுத்தாத
திரைப்படங்கள்
ஒன்றிரண்டு மட்டுமே என்றாகிவிட்டது.

பள்ளி மாணவர்கள் தொடங்கி பிறந்த
நாளானாலும், தேர்வில்
வெற்றி பெற்றாலும், மகிழ்ச்சியான
தருணம் என்றாலும் மது அருந்திக்
கொண்டாடுவது என்பது கலாசாரமாகிவிட்டிருக்கிறது.
போதாக்குறைக்கு, நமது அரசும்
ஊருக்கு ஒன்றிரண்டு என்பதுபோய்
தெருவுக்குத் தெரு மதுபான
விற்பனைக் கடைகளைத்
திறந்து வைத்து இளைஞர்களைத்
தவறான வழிக்குத் திசைதிருப்புவதில்
முனைப்பாக இருக்கிறது.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள்
பணம்
சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாகக்
கருதுகிறார்களே தவிர, குறைந்த
வருமானமானாலும் ஒழுக்கமான
நிறைந்த வாழ்வுக்கு அவர்களைப்
பழக்கத் தயாராக இல்லை.
ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக்
கொலைசெய்த அந்தப் பள்ளிச்
சிறுவனுக்கு தினமும்
கைச்செலவுக்கு நூறு ரூபாய்
தருவார்களாம் பெற்றோர்.
திரைப்படம் பார்த்துதான்
தனது பழிவாங்கும் குணம்
அதிகரித்ததாகக் கூறுகிறான் அந்தப்
பள்ளி மாணவன்.

சகோதரியாகப் பழகிய
பெண்ணை போதையில்
கற்பழிக்கிறார்கள் நான்கு பொறியியல்
கல்லூரி மாணவர்கள். இறைவா,
நாங்கள் எங்கே போகிறோம்?

Saturday, February 11, 2012

பழைய சென்னை -அபூர்வ படங்கள்

பழைய நினைவுகளை அகழ்வாய்வு செய்து மீட்டெடுப்பதில் அலாதி பிரியம் நமக்கு. அதிலும் மக்கள்,வாகன மற்றும் கட்டிட நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை, அந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது. இணையத்தில் கிடைத்த பழைய சென்னையை தூசு தட்டி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். வாங்க பார்த்து ரசிக்கலாம்.

சைக்கிளில் ஹாயாக செல்ல முடிந்த மவுன்ட் ரோடு

கூளமில்லா கூவம்

அழகிய மயிலாப்பூர் 1906

பரபரப்பில்லாத பாரிமுனை

அமைதியான மெரினா கடற்கரை

இடுப்பு வரை நீர் தேங்காத மழைக்காலம்

எழில்மிகு எழும்பூர் இரயில் நிலையம்

நெரிசலற்ற சென்ட்ரல்

மூச்சுமுட்டாத கடைவீதி 1895

id=

காத்திருக்கும்
அவசர ஊர்திகள்(Ambulance) 1940

id=

ஈ ஓட்டுப்படும் கார் ஷோரூம் 1913

id=

கூச்சலில்லாத
கொத்தவால்சாவடி காய்கறிக் கூடம்

id=

வாகனங்கள்
வரிசைகட்டி நிற்கப்படாமல் கட்டப்படும்
அண்ணா மேம்பாலம் 1972

Wednesday, December 28, 2011

அறிந்துகொள்ள வேண்டிய அவசர எண்கள்

போலீஸ்:
100

போலீஸ் SMS:
9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS:
9840983832

தீயணைப்புத் துறை:
101

போக்குவரத்து விதிமீறல்:
103

விபத்து:
100, 103

போக்குவரத்து விதிமீறல் SMS:
9840000103

ஆம்புலன்ஸ்:
102, 108

பெண்களுக்கான அவசர உதவி:
1091

குழந்தைகளுக்கான அவசர உதவி:
1098

அவசர காலம் மற்றும் விபத்து:
1099

மூத்த குடிமக்களுக்கான அவசர உதவி:
1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:
1033

கடலோரப் பகுதி அவசர உதவி:
1093

இரத்த வங்கி அவசர உதவி:
1910

கண் வங்கி அவசர உதவி:
1919

Sunday, December 11, 2011

'காலரா' -சில தகவல்கள்

காலரா என்ற பெயரைக் கேட்டவுடனேயே நமக்கு பீதியைக் கிளப்புகிறது. மருத்துவம் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் இந்நோயினால் கணிசமானோர் மரணமடைகின்றனர். இந்நோய் பற்றிய சரியான விழிப்புணர்வின்மையும் தாமதமான சிகிச்சையாலுமே பெரும்பாலும் இந்த மரணங்கள் நிகழ்கின்றன. தமிழகத்தில் மழையின் பாதிப்பால் காலரா பரவி வருவதாக செய்தி வரும் இவ்வேளையில் இது பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசிமென்பதால் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்நோய் Vibrio
Cholerae என்ற நுண்கிருமிகளால்
உண்டாகிறது. அசுத்தமான
குடிநீரால்தான் வேகமாக இந்நோய்
பரவுகிறது. அதிக அளவு வெப்பம்
உடைய, மனித நெருக்கம் உடைய
பகுதிகள்தான் பெரும்பாலும்
பாதிக்கப்படுகின்றன. ஒருவருக்குஇந்நோய் உண்டானால்,
அவர் வெளியேற்றும் மலத்தில்
இருந்து வெளியேறும்
ஆயிரக்கணக்கான ‘விப்ரியோ’ கிருமிகள்
மற்றவருக்கு இந்நோயை பரப்பக்
காரணமாகின்றன. ‘விப்ரியோ’ நோய்க்
கிருமிகள் உடைய நீரை அந்தப்
பகுதியைச் சேர்ந்த
அனைவருமே பருகுவதால் அந்தப்
பகுதியில் உள்ள அனைவருமே நோயால்
பாதிக்கப்படுகின்றனர்.

நோயின் அறிகுறிகள் : நோயின்
தாக்குதலுக்கு ஆளான நோயாளிக்கு,
திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்படும்.
வயிற்றில்
வலியோ அல்லது வேறு தொல்லைகளோ இருக்காது.
வயிற்றுப்போக்குடன், வாந்தியும்
உண்டாகும். ‘வயிற்றுப் போக்கு’
என்றால் சாதாரணமாக
ஏற்படுவது போல் ஒரு முறை,
இருமுறை என்றெல்லாம் போகாது.
தொடர்ந்து பல முறை போய்க்
கொண்டே இருக்கும். ‘காலரா கட்டில்’
என்ற
ஒருவகை கட்டில்களிலேயே நோயாளிகளை மருத்துவ
மனையில்படுக்க வைத்திருப்பர். அந்த
கட்டிலில் மலம் கழிக்க ஏதுவாக
ஒரு ஓட்டை இருக்கும். அந்த
ஓட்டைக்கு நேர்க் கீழே,
ஒரு வாளி வைக்கப்பட்டிருக்கும்.
நோயாளி தொடர்ச்சியாக மலம் கழித்துக்
கொண்டே இருப்பார். அவை அந்த
வாளியில் விழுந்து கொண்டே இருக்கும்.
உடலிலிருந்து எவ்வளவு நீர்
வெளியேறியுள்ளது என்பதை அறியவும்
இதுஉதவும். மிகவும் தண்ணீராக
வெளியேறும். வயிற்றுப்போக்கில்,
குடல்களில் உள்ள
Mucusம்
சேர்ந்து வெளியேறும். இந்த மலம்
‘சோற்றுக் கஞ்சி’ போல் இருக்கும்.
அதனால் இதை சோற்றுக் கஞ்சி மலம்
என்றே அழைப்பர். அதிக
அளவு வயிற்றுப்போக்கால்,
உடலிலிருந்து ஏராளமான நீர் வெளியேறும், அதனால்
உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம்
பாதிக்கப்படும். உடலில் உள்ள நீரும்,
மற்ற சத்துப்பொருள்களும் அதிக
அளவு வெளியேறுவதால், “நீர்க்
குறைவு” அறிகுறிகள் தோன்றும்.
உடலில் உள்ள தசைகள் இறுகும், தோல்
சில்லிட்டு விடும், சுருக்கங்கள்
ஏற்படும்.
குறைவான இரத்த ஓட்டத்தால் தோல்
வெளுத்து விடும். கன்னங்கள்
குழிவிழுந்து விடும். இரத்த அழுத்தம்
குறைந்து கொண்டே வரும்.
நாடித்துடிப்பு வெகு வேகமாக
இருக்கும். சிறுநீர்
வெளியேறுவது குறைந்து கொண்டே வரும்.
இந்நிலையில் ‘நீர்க்குறைவு’
சிக்கலை சரிசெய்யாவிட்டால்,
நோயாளி மரணமடைந்து விடுவார்.

பரிசோதனை :
‘மலம்’ பரிசோதனையில்
‘விப்ரியோ’ கிருமிகளை எளிதில்
கண்டறிய முடியும். சாதாரணமாக
இக்கிருமியை அழிக்கவல்ல
உயிர்க்கொல்லி மருந்து பரிசோதனையையும்
(Anti-bioticsensitivity test)
செய்து பார்க்கலாம்.

மருத்துவம்:
நீர்க்குறைவு குறைபாட்டை உடனடியாக
சரிசெய்யவேண்டும். ‘குளுகோஸ்’
கலந்த திரவங்களையும், சோடியம்,
பொட்டாசியம் கலந்த திரவங்களையும்,
சிரைகள் மூலம் (Intra venous)
வேகமாக செலுத்த வேண்டும். கொதிக்க
வைத்த தண்ணீரைத்தான் பயன்படுத்த
வேண்டும். கொதித்து ஆறிய தண்ணீரில்
ஒரு லிட்டருக்கு இருபது கிராம்
குளுகோஸ், சமையல் உப்பு 3.5 கிராம்
பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம்,
சோடியம் பைகார்பனேட் 2.5 கிராம்
கலந்து அந்த கரைசலை வாய் மூலம்
கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நீர்க்குறைவை ஈடு செய்வது தான்
முதல் கடமையாக இருக்க வேண்டும்.
கூடவே “விப்ரியோ” கிருமிக்கு சரியான
உயிர்க்கொல்லி மருந்துகளை கொடுக்க
வேண்டும். சாதாரணமாக
“டெட்ராசைக்கிளின்”, செப்ட்ரான்
வகை மருந்துகள் பயன் உடையதாக
இருக்கும். எவ்வளவுக்கு அதிகமாக
குளுக்கோஸ் ஏற்றுகிறோமோ,
அவ்வளவு விரைவில்
நீர்க்குறைவு ஈடு செய்யப்படும்.
அதனால் பெருமளவில் மரணத்தைத்
தவிர்க்க முடியும்.
நோயுற்றவரை உடனடியாக,
தொற்று நோய் மருத்துவமனையில்
சேர்த்து மருத்துவம் பார்த்தல் அவசியம்.

வருமுன் காப்பது :
இப்பொழுது காலரா தடுப்பூசிகள்,
சுகாதாரத் துறையால்
போடப்படுகின்றன. அதை போட்டுக் கொள்ளலாம். சுத்தமான
தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
கொதிக்க வைத்தத் தண்ணீரைப்
பயன்படுத்த வேண்டியது அவசியம்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக
வைத்திருக்க வேண்டும். தெருக்களில்
மலம் கழித்தல் போன்ற
பழக்கங்களை முழுமையாகத் தவிர்க்க
வேண்டும். சுத்தமான, சுகாதாரமான
முறையில்
கழிப்பறைகளை வைத்திருக்க
வேண்டும். அசுத்தமான சுற்றுப்புறம்,
நோயாளியுடன் நெருக்கம்,
நோயாளி பயன்படுத்திய பொருள்கள்
ஆகியவற்றை தவிர்த்தல் மிகவும்
முக்கியம்.

தெருக்களில் அசுத்தமான
சூழ்நிலையில் தயாரிக்கப்படும்
உணவுப் பொருட்கள், ஈ மொய்த்த
பண்டங்கள் ஆகியவற்றை உண்ணாமல்
தவிர்ப்பது மிகவும் அவசியம். நோயின்
அறிகுறிகள் தெரிந்த
உடனே மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்று மருத்துவம்
செய்தால் உயிர்பலி போன்ற
ஆபத்துக்களை பெருமளவில்
தடுக்கலாம்.
நீர்க்குறைபாட்டை ஈடு செய்வது,
சரியான உயிர்க் கொல்லி மருந்துகளைக்
கொடுப்பது,
போன்றவற்றை உடனே செய்வதன்
மூலம் நோயின் வீரிய
தன்மையை பெருமளவு குறைக்கலாம்.
சுத்தமான சுற்று சூழல்,
ஆரோக்கியமான உடல்நிலை, சரியான
முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள்,
கொதிக்க வைத்த தண்ணீர், நோய் தடுப்பூசி போட்டு கொள்வது, நோயின்
ஆரம்ப நிலையிலேயே சரியான மருத்துவம் செய்தல் போன்றவை இருப்பின், காலரா வராது என்பது உறுதி!

நன்றி:
'கீற்று'- தளம்