Friday, September 16, 2011

இனிமேலாவது கலையுமா விஜயகாந்தின் மவுனம்?

தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதாவது அவருடைய தற்போதைய எம்ஜியார் பாட்டு பாணியில் சொல்வதானால் 'பூனையல்ல புலிதான் என்று போகப் போகக் காட்டுகிறேன்' என்று பாடாமல் பாடி இருக்கிறார்.

இந்தப் பதவிகள் மீது கண் வைத்து இத்தனை நாட்களாக அதிமுகவை எந்த வகையிலும் விமர்சிக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அண்மையில் சட்டமன்றத்தில் ஜெயலலிதா 'தேமுதிகவினர் எங்களுக்கு ஒன்றும் பாலபாடம் நடத்த வேண்டாம்' எனக் கடுமையாகப் பேசியபோது கூட மவுனம் காத்தது குறிப்பிடத்தக்கது.


தேமுதிகவைப் பொறுத்தவரை மதுரை, சேலம் மாநகராட்சிகள் உள்பட 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை குறி வைத்திருந்தது. அந்த இடங்களையும் முக்கிய நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் பதவிகளையும் கேட்டுப் பெறும் வரை அதிமுக ஆட்சியை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை என்ற 'கொள்கையுடன்' சட்டசபையில் செயல்பட்டது தேமுதிக. சமச்சீர் கல்வி நிலைப்பாட்டிலிருந்து அண்மையில் நடந்த துப்பாக்கி சூடு வரை இந்த 'கொள்கை'ப் பிடிப்பில் மிக கவனமாக இருந்து அதிமுகவின் குரலாகவே செயல்பட்டது. ஆனால் எப்படி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிகவையே கேட்காமல்
அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி முதலில்
ஒரு லிஸ்ட் வெளியிட்டதோ, அதே ஸ்டைலில் இப்போதும் செயல்பட்டுள்ளது அதிமுக. அதாவது, 10 மேயர் பதவிகளும் எங்களுக்கே. உங்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

திமுக மற்றும் அதிமுக அணிக்கு மாற்றாக இருப்பார் என்ற எண்ணத்திலேயே மக்கள் தேமுதிகவுக்கு வாக்களித்தனர். ஆனால் பொருப்புமிக்க பதவியான எதிர்கட்சித் தலைவராகியும் கூட இத்தனை நாட்களாக மவுனமாக இருந்தது மக்களுக்கு அதிருப்தியளித்தது. ஒரு காலத்தில் மக்களோடு மட்டுமே கூட்டணி என்று முழங்கி வந்த விஜயகாந்த் தற்போது அதிமுக கூட்டணிக்காக மக்களையே மறந்து விட்டாரோ என்று நினைக்குமளவுக்கு ஆகிவிட்டன அவருடை செயல்பாடுகள்.

இனியேனும் அவர் மவுனம் கலையுமா? அல்லது சீட்டு உடன்பாடு ஏற்பட்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் மவுனம் தொடருமா எனத் தெரியவில்லை.

ஏன்னா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!

Saturday, September 10, 2011

பட்டினி போட்ட எஜமானரையே இரையாக்கிக் கொண்ட நாய்கள்!

எஜமான விசுவாசம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நாய்கள். ஆனால் அந்த நாய்களுக்கு ரோஷம் வந்து விட்டால் என்ன நடக்கும்? பின்வரும் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள் விளங்கும்.

இந்தோனேசியாவின் மனாடோ நகரைச் சேர்ந்த அன்ட்ரே லும் பொகா (50 வயது) ன்பவர் சுற்றுலா செல்லும் அவசரத்தில் தனது நாய்களுக்கு உணவளிக்க மறந்து சென்று விட்டார். இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து சுற்றுலாவிலிருந்து திரும்பிய அவர் வீட்டுக் கதவைத் திறந்தவுடன், 7 நாய்களும் அவர் மீது பாய்ந்து கடித்துக்குதறி அவரை இழுத்துச் சென்று அவரது உடல் தசையை உண்ண ஆரம்பித்துள்ளன. அன்ட்ரேலும்பொகா வீடு திரும்பி 5 நாட்களாகியும் அவரது பயணப் பெட்டி வீட்டின் வாசல் கதவுக்கு வெளியே தொடர்ந்து இருப்பதைக் கவனித்து சந்தேகம் கொண்ட அவரது அயல் வீட்டுக் காவல்காரர், அந்த வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வயிற்றைக் குமட்டும் நாற்றம் வருவதை உணர்ந்த அவர், உடனடியாக காவல் நிலையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து முறையீடு செய்துள்ளார்.

அந்த வீட்டை முற்றுகையிட்ட போலீஸாருக்கு அதிர்ச்சி அன்ட்ரேலும்பொகாவின் கடித்துக் குதறப்பட்ட தலை சமையலறையிலும் உடல் வீட்டுக்கு முன்பாகவும் காணப்பட்டன. அத்துடன் ஏனைய இரு நாய்களது எலும்புக்கூடுகளும் அங்கு காணப்பட்டன. 14 நாட்களாக பட்டினியில் இருந்த நாய்கள், பசி தாங்காமல் அயல்வீடுகளின் நாய்களை கடித்து உண்டதுடன் கடைசியில் தமது எஜமானரையே தமது பசிக்கு இரையாக்கியுள்ளன.

இதனால நாம சொல்ல வரும் சேதி என்னனா..

நாய்கள் என்றால் வாலை மட்டுமே ஆட்டிக் கொண்டிருக்கும் என்று நினைக்கும் எஜமானர்களே தெரிந்து கொள்ளுங்கள். நாய்களுக்கு வால் மட்டுமல்ல வாயும் உண்டு!

வஞ்சிக்கப்பட்டால் நாய்களுக்குக் கூட ரோஷம் வருகிறது. தோழர்களே அப்படியெனில் நமக்கு?

வினோத வீடுகள் -படங்கள்

வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பது நம் முன்னோர்களின் பிரபலமான பழமொழி. இல்லம், இல்லறம் இவ்விரண்டுமே நம் வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய விஷயங்கள். இவற்றை மிக கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

சரி இந்த அறிமுக தத்துவம் போதுமென்று நினைக்கிறேன். உங்கள் பார்வைக்கு சில வித்தியாசமான வீடுகளின் படங்களை வைக்கிறேன். பார்த்துவிட்டு சும்மா போகாம ஏதாவது கருத்து கிருத்து போட்டுட்டு போங்க..


இந்த மாதிரி வீடு கட்டினா உங்க வாழ்க்கையே தலைகீழா மாறிடும்னு ஏதாவது வாஸ்து நிபுணர் சொல்லியிருப்பாரோ..


பாலம் கட்டாம கிடப்பில் போடப்பட்ட பில்லர்களில் இது மாதிரி வீடு கட்டிக்க வேண்டியதுதான்


அடிக்கடி ஊர் மாற்றலாகிப் போனா இந்த மாதிரி வீடு வாங்கி தள்ளிட்டு போயிடலாம்.


ஏசி, பிரிஜ் எதுவும் தேவையில்லை இந்த வீட்டுக்கு


மகிழுந்து செலவு மிச்சம்!


விக்கிற விலைவாசியில இடம் வாங்கி வீடுகட்டி வீட்டுக்கொரு மரமெல்லாம் வளர்க்க முடியாது. இப்படி மரத்துக்கொரு வீடு வேணும்னா கட்டலாம்!


தியேட்டர் கவுண்டர் மாதிரி ஒரு வீடு! அதுக்கு ரெண்டு பேர் போஸ் வேறு!

வீட்டு நம்பரை எப்படி எழுதிப் போட்டாலும் நிறைய பேருக்குத் தெரிய மாட்டேங்குது.. அதான் இப்படி!



மழைக்காலத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்


ஒளிக்கவோ மறைக்கவோ முடியாது. அரசியல்வாதிகளுக்கு இந்த மாதிரி வீடுதான் கொடுக்கணும்


உலகின் விலையுயர்ந்த முகேஷ்
அம்பானியின் வீடு

எந்த செலவுமில்லாத வீடு.
வானமே கூரை! பூமியே தரை!

கோடிகள் புரளும்
அம்பானியும் தெருக்
கோடியில் உருளும் அப்பாவிகளும்
இருப்பது ஒரே இந்தியாவில்தான்!
என்ன கொடுமை..!

Thursday, September 8, 2011

வாகன உரிமையாளர் பெயரைக் கண்டுபிடிக்க

திருட்டு வாகனமா? சில விநாடிகளில்
கண்டுபிடிக்கலாம்!

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக்
கொண்டு, அதன் உரிமையாளர்
பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசால் சமீபத்தில்
கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட
விரோதமாகப் பயன்படுத்தப்படும்
வாகனங்களை உடனே அடையாளம்
கண்டுகொள்ள உதவும்.

092123 57123 என்ற
எண்ணுக்கு vahan>space<பதி
வு எண்- வாகனத்தின்
பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப்
செய்து அனுப்பினால், அடுத்த
விநாடியே வாகன உரிமையாளரின்
பெயர், வாகனத்தின் வகை,
வரி செலுத்திய விபரம், தகுதிச்
சான்று முடிவடையும் தேதி ஆகிய
விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ்
வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப்
பிறகு பதிவு செய்யப்பட்ட
வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அல்லது 2003-ம் ஆண்டுக்குப்
பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக
வட்டாரப்
போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம்
சென்றிருக்க வேண்டும்.

Tuesday, September 6, 2011

எங்கே இருக்கின்றீர்கள் நண்பர்களே?

ஏனோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. பழைய நினைவுகளை மனம் அசை போட்டு ஆனந்தப்படுகிறது. மலைச் சாலையில் பயணிக்கும் போது கீழே எட்டிப் பார்த்து ரம்மியமாக ரசிப்பதைப் போல.

இப்படியான ஒரு நினைவுத் தேடலில் பரண் மேல் இருந்த பழைய புத்தக மூட்டையை தூசு தட்டிப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது 1998ம் வருட நாட்குறிப்பு (Dairy) கண்ணில் சிக்கியது. அப்போதெல்லாம் எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது. யாருக்கும் புரியாத கிறுக்கலான கையெழுத்தில் (தற்போது எனக்கே புரியவில்லை என்பது வேறு விஷயம்) எழுதுவேன். சென்னை என்ற எந்திரலோகம் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கம் கைவிட்டுப் போனது. ஆனால் நாட்குறிப்பு எழுதுவதின் அருமை பின்னாளில் புரட்டிப் பார்க்கும் போதுதான் தெரிகிறது.

1998 என்பது நான் ஐடிஐயில் படித்துக் கொண்டிருந்த காலம். நாட்குறிப்பின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட என் நினைவுகளை விட்டு அகன்று போன பல்வேறு விஷயங்களும் காட்சிகளாக மனத் திரையில் விரிந்தது.

காலத்தின் சுழற்சியில் நண்பர்களையெல்லாம் நான் மறந்து விடுவேன் என்று அப்போதே நினைத்திருந்திருந்தேனோ என்னவோ எங்கள் பிரிவில் படித்த 25 நண்பர்களின் பெயர்களையும் அவர்களின் ஊர்களையும் கடைசி பக்கத்தில் எழுதி வைத்திருந்திருக்கிறேன். ஒவ்வொரு பெயரையும் உச்சரித்தபோது அவர்களோடு கழிந்த வசந்த பொழுதுகள் நினைவில் நிழலாடியது.

காலம்தான் எத்தனை விசித்திரமானது! பிரியவே கூடாது, முடியவே கூடாது என்று நினைத்துப் பழகிய எத்தனை நட்புகளை நம்மிடமிருந்து லாவகமாகப் பிரித்து விட்டுருக்கிறது! ஒருவேளை இந்தப் பதிவை என் நண்பர்களோ அல்லது அவர்களோடு தொடர்புடையவர்கள் கண்டால் மீண்டும் அந்த வசந்த நினைவுகளை மீட்டெடுக்கலாம் என்ற நப்பாசையோடு அந்த 25 நண்பர்களின் பெயர்களையும் ஊர்களையும் இங்கே பதிவிடுகிறேன். இவர்களில் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்ட நான்கு பேர் மட்டும் என்னுடன் ஒரே நிறுவனத்தில் பணியிலிருப்பதால் தொடர்பில் இருக்கிறார்கள்

1.அகிலன்
புளியங்கொட்டாரம்.

2.ஜான் கிளிட்டஸ்
தக்கலை,குமரி மாவட்டம்.

3.ஹமீது உசேன்
தாழையூத்து.

4.S.முத்து
ராமானுஜம்புதூர்

5.E.முத்துக்குமார்
V.M.சத்திரம்,பாளை.

6.ஜெயராஜ்,
கருங்குளம்.

7.சையது அலி
மூலக்கரைப்பட்டி.

8.R.காளிராஜ்
திருமலாபுரம்,கடம்பூர்.

9.சுப்ரமணியன்
தியாகராஜநகர், பாளை.

10.சந்திரமோகன்
சங்கரன்கோவில்

11.சோழ பாண்டிய ராஜா
பாளையங்கோட்டை.

12.இராஜ்குமார்
சுத்தமல்லி.

13.சதீஷ் குமார்
தி.நகர், பாளை.

14.பத்மநாபன்
சங்கர் நகர்.


15.ராஜதுரை
பாளையங்கோட்டை

16.லிங்க ராஜா
சிவந்திபுரம்.

17.பிரம்மநாயகம்
விக்கிரமசிங்கபுரம்


18.சுடர் ஒளிவு
பாவூர்சத்திரம்

19.சுந்தர் ராஜ்
பட்டக்காடு

20.சண்முகலிங்கம்
இலத்தூர்.


21.கணேசமூர்த்தி
கோவில்பட்டி


22.ஐயப்பன்
பழைய பேட்டை

23.இசக்கிப் பாண்டியன்
வள்ளியூர்

24.சுபாஷ்
நாகர்கோவில்

25.சுரேஷ்
மாயமான்குறிச்சி.


ஒரு மிகப்பெரும் பிரிவை நாம் சந்திக்க இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஐடிஐயின் கடைசி நாளில் புன்னகையோடு விடைபெற்றுக் கொண்ட அந்த முகங்களை நினைத்த போது விழிகளில் தேங்கிய நீருக்கு அணை போட முடியவில்லை!